எமக்கென்று யார் இருக்கா? | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil
நாம் அனைவரும் வாழ்க்கையில் எப்போதும் வெற்றி பெற்றவர்களாக வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறோம். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் நல்ல நண்பர்களை நாம் பெருக்கிக் கொள்ள வேண்டும். நாம் மற்றவர்களோடு பேசும் போது ஒரு விதமான தயக்கம் நம்மிடம் இருந்ததென்றால் அதுவே நமது வெற்றிக்கு தடையாக அமைந்துவிடும். எனவே நம்மிடம் உள்ள தயக்கத்தை தவிர்த்து எல்லோரிடமும் மனம் திறந்து பேசுவோம். என்னுடைய நண்பர் மட்டும் இல்லையென்றால் நான் இந்த நிலைக்கு வந்திருக்கவே முடியாது என்று நம்மில் பலர் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அப்படிப்பட்ட நண்பர்களில் நாமும் ஒருவராக இருந்திருக்கிறோமா என்று யோசித்துப் பார்ப்போம்.
அழைக்காமலேயே தக்க சமயத்தில் விரைந்து வந்து உதவுபவன் தான் உண்மையான நண்பன். நல்ல நண்பன் சுமைதாங்கியாக கண்ணீரைத் துடைக்கும் கைக்குட்டையாக இருக்கிறான். உயரே ஏற உதவும் நட்பை விட உயரத்திலிருந்து கீழே விழும்போது தாங்கும் நட்பே சிறந்தது. நல்ல நட்புக்கு வளர்ச்சி உண்டு. தளர்ச்சி இல்லை. எமக்கென்று யார் இருக்கா? என்று ஏங்கும் உள்ளங்களோடும், கைவிடப்பட்டு கரம் தேடும் மனிதர்களோடும் நமது நட்பை ஏற்படுத்திக் கொள்வோம். தக்க சமயத்தில் உதவுவோம், நண்பனுக்காக உயிர் கொடுப்பதைவிட மேலான அன்பு வேறில்லை என்றார் இயேசு. உயிர் கொடுக்கும் அளவுக்கு நண்பர்களைப் பார்ப்பது அரிது. அத்தகைய நண்பர்கள் நமக்கு கிடைக்கும் நபர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்வோம்.
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த போது அமெரிக்கப் படைகள் ஜெர்மனியின் நாஜிப்படை வீரர்களைக் கொன்று அவர்கள் ஆக்கிரமித்திருந்த இடங்களைப் பிடித்துக் கொண்டே வந்தனர். அப்போது ஜெர்மனியில் ஆஸ்ச்விட்ஸ் முகாமில் இருந்த நாஜிப்படை வீரர்களை அமெரிக்கப் படைகள் கொல்ல ஆரம்பித்த போது, ஹங்கேரிய நாட்டைச் சேர்ந்த மூன்று êத இளைஞர்கள் ஒரு நாஜிப்படை வீரரை மட்டும் மறைத்து வைத்துக் கொண்டனர். அமெரிக்கப் படை வீரர்கள் எவ்வளவோ கெஞ்சியும் விடாத அவர்கள் ஒரு நிபந்தனை விதித்தனர். இவருக்கு நீங்கள் எந்தத் தீங்கும் செய்ய மாட்டோம் என்ற உறுதியைக் கொடுத்தால் தான் வெளியே விடுவோம் என்று கூறி, அந்த உறுதியைப் பெற்ற பின்னரே அந்த நாஜிப்படை வீரரை வெளியில் விட்டனர். அந்த நாஜிப்படை வீரர் அந்த மூன்று êத இளைஞர்களுக்கும் மற்றும் பலருக்கும் அவர்கள் அங்கு சென்ற நாள் முதல் தனது சொந்தச் செலவில் ரொட்டியும், மருந்தும் வாங்கிக் கொடுத்துப் பார்த்துக் கொண்டார். அவர் மட்டும் இல்லையெனில், நாங்கள் இன்று உயிரோடு இருந்திருக்க மாட்டோம் என்று அவர்கள் சொன்னார்கள். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வை விக்டர் பிராங்கிள்Man's search For Meaning என்ற தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே நாமும் நல்ல நண்பர்களைத் தேர்வு செய்து நலமாய் வாழ்வோம்.
உயரே ஏற உதவும் நட்பை விட உயரத்திலிருந்து கீழே விழும்போது தாங்கும் நட்பே சிறந்தது.