உயரிய அழைப்பு | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil
அழைப்பு இது வாழ்வின் எல்லா நிலைகளிலும் நமக்குக் கொடுக்கப்படுகிறது. ஆதியிலே இறைவனின் ஆவி தண்ணீரின்மீது அசைவாடியதிலிருந்து இன்றுவரை அழைப்பின் பல்வேறு பரிணாமங்கள் வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. ஓரறிவு முதல் ஆறறிவு வரை உயிரினங்களின் வாழ்வுநிலை அனைத்தும் அழைப்பே.
ஒவ்வோர் அழைப்பும் இறைவனால் நமக்குக் கொடுக்கப்படுகின்ற அற்புதக்கொடை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு மணித்துளியும் இறைவனின் மாபெரும் அழைப்பைப் பறைசாற்றிக் கொண்டேயிருக்கிறது. தொடர் நிகழ்வாக தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இருக்கும் நிலை எதுவாக இருந்தாலும் அந்நிலையிலேயே உயரிய வாழ்வு வாழ அழைக்கப்படுகிறோம். (இறையழைத்தல் மட்டுமல்ல அழைப்பு)
சில வருடங்களுக்கு முன், என்னுடைய பாட்டி ஒரு மரத்தடியிலிருந்து ஒரு பறவையை ஆபத்திலிருந்து காப்பாற்றினார். அந்தப் பறவை "Magpie" இனத்தைச் சார்ந்தது (Magpie என்றால் அழகிய ஒலி எழுப்பக்கூடிய கறுப்பு, வெள்ளை சிறகுகள் உடைய பறவை) அந்த "Magpie"-க்கு சிறகுகள்தான் அழகு. அந்தச் சிறிய பறவையின் பெயர் "ஜோயி”. ஜோயின் சிறிய அழகான சிறகுகள் உடைந்திருந்ததால் அதனால் பறக்க முடியவில்லை. பாட்டி அதனை அன்போடு கவனித்து வந்தார். ஜோயி, தான் ஓர் ஊனம் என்பதை மறந்து மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தது. நான் வாழ அழைக்கப்பட்டிருக்கிறேன் என்ற எண்ணம் அதனை ஆட்கொண்டது. ஒவ்வொரு நாள் விடியலிலும், அந்தப் பகுதியில் வாழ்ந்த மற்ற பறவைகளுடன் இணைந்து அழகிய ஒலி எழுப்பும். தன்னுடைய கூர்மையான பார்வையால், புழுக்களையும், பூச்சிகளையும் பிடித்துத் தன் உணவை இரசித்து, ருசித்து உண்ணும். ஜோயியால் பறக்க முடியவில்லையே தவிர, மற்ற எல்லா வேலைகளையும் அழகாக, நிதானமாகச் செய்யும். விரைவாகவும், அழகாகவும் மரம் ஏறும். காற்றின் சிலிர்ப்பை உணர்ந்து அழகாக நடக்கும். தான் ஒரு பறவை இனம் என்பதை மறந்து பூனைகளுடன் உறங்கும். நாய்களுடன் விளையாடும். பாட்டியுடன் சமையலறையில் துணையாக இருக்கும். வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பாக வாழும்.
மற்றுமோர் அசாத்திய திறமை அதனிடமிருந்தது. அதாவது பிறரைப்
போல 'ஒலி' எழுப்பக்கூடிய திறமை (Mimic of Sounds) பெற்றிருந்தது. பால்காரனைப் போல இருமிக் காட்டும். பாட்டியைப்போல் தும்மல் எழுப்பும். பூனையைப் போல கத்தும். பாட்டியின் வீடு இரயில் நிலையத்திற்கு அருகில் இருப்பதால், இரயில் சத்தங்கள், விசில் ஒலிகள் அனைத்தையும் எழுப்பும். இதனால் அநேகக் குழப்பங்கள் நிகழ்ந்ததுண்டு. சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள், இரயில்வே ஊழியர்கள் அனைவரும் ஜோயியின், நண்பர்களாகவும், இரசிகர்களாகவும் மாறினர். 5 வருடங்கள் வாழ்ந்த அந்தப் பறவைக் கற்றுத் தந்த பாடம்
வாழ்வு என்பது ஒரு கொடை - அதில்
வரும் ஒவ்வொரு நிகழ்வுகளும் அழைப்பு
அழைப்பை உணரும்போது செயல்கள் சிறப்பாக அமையும். அந்தச் சிறப்பு பலருக்கும் மகிழ்ச்சி தரும்.
நீங்கள் ஒரு நல்ல Magpieur?
யாரும் ஜோயியை ஊனமுற்ற பறவை என்றோ, மகிழ்ச்சியை இழந்த பறவை என்றோ சொல்ல முடியாது. ஏனெனில் ஜோயி வாழ்வை அதன் முழுத் தகுதியுடன் வாழ்ந்துவிட்டது. தன்னால் இயன்றதையெல்லாம் கற்றுக்கொண்டது. ஒவ்வொரு நாளும் சவால்களைச் சந்தித்தது. அதில் வெற்றியும் பெற்றது. ஏனெனில் வாழ்வின் ஒவ்வோர் அனுபவத்தையும் அழைப்பாகக் கருதி, அந்த அழைப்பை இரசித்து, வாழ்ந்து, மகிழ்ந்தது.
ஆம், நமது வாழ்வுப் பயணத்தில் வரும் ஒவ்வோர் அனுபவமும் உயரிய அழைப்பே. இதில் இறையழைத்தலும் ஒன்று. வாழ்வுக்குள் வாழ்வாக நமக்கு கொடுக்கப்படும் அழைப்பு. இந்த அழைப்பை அனுபவித்து மகிழ்வோம்.