2025 புதிய ஆண்டு அமைதி மலரும் ஆண்டாக அமையட்டும் - திருத்தந்தை பிரான்சிஸ் உரை

2025 புதிய ஆண்டு அமைதி மலரும் ஆண்டாக அமையட்டும் - திருத்தந்தை பிரான்சிஸ் உரை

Pope francis

'எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும்; உமது அமைதியை எங்களுக்கு அளித்தருளும்' என்ற தலைப்பில், வரும் 2025-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியன்று கொண்டாடப்படவிருக்கின்ற உலக அமைதி தினத்திற்காக வழங்கியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை. நான்கு முக்கிய தலைப்புகளின் கீழ் அமைதி தினத்திற்கான தனது செய்தியை வழங்கியுள்ள திருத்தந்தை பல்வேறு காரியங்களைக் குறித்தும் அதிலும் குறிப்பாக நீதி, அமைதி குறித்தும் பல்வேறு சிந்தனைகளை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

01. அழிந்து வரும் மனிதகுலத்தின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்தல்
 
எதிர்நோக்கின் உணர்வில் யூபிலி ஆண்டாக, நமது விண்ணகத் தந்தையினால் நமக்களிக்கப்பட்ட இந்தப் புத்தாண்டின் விடியலில், ஒவ்வொருவருக்கும் தனது மனமார்ந்த அமைதிக்கான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக ஒதுக்கப்பட்டவர்களாகவும், கடந்த கால தவறுகளால் பாரம் சுமப்பவர்களாகவும், மற்றவர்களின் தீர்ப்பால் ஒடுக்கப்பட்டவர்களாகவும், தங்கள் சொந்த வாழ்க்கையின் நம்பிக்கையின் ஒரு துளியைக் கூட உணர முடியாதவர்களாகவும் வாழ்பவர்களைத் தான் நினைத்துப் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.


02. ஒரு கலாச்சார மாற்றம்: நாம் அனைவரும் கடன்பட்டவர்

ஏழைகளின் துன்பத்திலிருந்து ஆதாயம் பெற்ற இயேசுவின் காலத்தில் இருந்த உயர்ந்தோர் குழுவினைரைப் போலவே, இன்று, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகளாவிய கிராமத்திலும் உள்ளது என்றும், அனைத்துலக அமைப்பு, அது ஒன்றிப்பு மற்றும் ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் உணர்வால் ஈர்க்கப்பட்டால் ஒழிய, அநீதிகள், ஊழலால் மோசமாகி, ஏழை நாடுகளை சிக்க வைக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்த யூபிலி ஆண்டின் உணர்வில், இந்த உலகின் வடக்குக்கும் தெற்கிற்கும் இடையில் நிலவும் சுற்றுச்சூழல் கடனை அங்கீகரித்து வெளிநாட்டுக் கடனை மன்னிக்க அனைத்துலகச் சமூகம் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்தாகவும்,  இது ஒன்றிப்புக்கான வேண்டுகோள், ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக நீதிக்கான வேண்டுகோள் என்றும் தெரிவித்துள்ளார்.நாம் அனைவரும் ஒரே இறைத்தந்தையின் பிள்ளைகள் என்பதையும், நாம் அனைவரும் அவருக்குக் கடன்பட்டிருக்கிறோம் என்பதையும், ஆனால் பகிரப்பட்ட மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட பொறுப்பின் உணர்வில் நாம் ஒருவரையொருவர் சார்ந்திருக்கின்றோம் என்பதையும், பகிர்ந்து கொள்ளும் உணர்வில், இந்த நெருக்கடியைச் சமாளிக்கத் தேவையான கலாச்சார மற்றும் கட்டமைப்பு மாற்றம் ஏற்படும் என்றும் விளக்கியுள்ளார் திருத்தந்தை.

03. நம்பிக்கையின் பயணம்: மூன்று முன்மொழிவுகள்

  • முதலாவதாக, வளமான நாடுகள் தாங்கள் செலுத்த வேண்டிய தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ள நாடுகளின் கடன்களை மன்னிக்க முடிந்த அனைத்தையும் செய்ய அழைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
  • இரண்டாவதாக, கருவுற்றது முதல் இயற்கை மரணம் வரை மனித வாழ்வின் மாண்பிற்கு மதிப்பளிக்கும் உறுதியான அர்ப்பணிப்பை வழங்கிட வேண்டுமென தான் கேட்டுக்கொள்வதாகவும், இதன் வழியாக, ஒவ்வொரு நபரும் தனது சொந்த வாழ்க்கையைப் போற்ற முடியும், மேலும் அனைவரும் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்குமான  வளமை  மற்றும் மகிழ்ச்சியின் எதிர்காலத்தை நம்பிக்கையுடன்  எதிர்பார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
  • மூன்றாவதாக, போர்களால் குறிக்கப்பட்ட இந்த நேரத்தில், ஆயுத வர்த்தகத்திற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டையாவது உலகளாவிய நிதியத்தை நிறுவி பசியை ஒழிப்போம் மற்றும் ஏழை நாடுகளில் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதையும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்ட கல்வி நடவடிக்கைகளை எளிதாக்குவோம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.

04. அமைதியின் இலக்கு

இறுதியாக, மேற்கண்ட இந்த முன்மொழிவுகளை எடுத்துக்கொண்டு எதிர்நோக்கின் பயணத்தை மேற்கொள்பவர்கள், பெரிதும் விரும்பும் அமைதியின் விடியலை நிச்சயமாகப் பார்ப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள திருத்தந்தை, 'பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்' (திபா 85:10) என்ற திருப்பாடலின் இறைவார்த்தைகளையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

நான் கடன் என்ற ஆயுதத்திலிருந்து விலகி, என் சகோதரர் சகோதரிகளில் ஒருவருக்கு எதிர்நோக்கின் பாதையை மீட்டெடுக்கும்போது, ​​இந்தப் பூமியில் கடவுளின் நீதியை மீட்டெடுக்க நான் பங்களிக்கிறேன், அந்த நபருடன், நான் அமைதியின் இலக்கை நோக்கி முன்னேறுகிறேன் என்று அர்த்தம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். வரும் 2025-ஆம் ஆண்டு அமைதி மலரும் ஆண்டாக அமையட்டும்!  என்று வாழ்த்தியுள்ள திருத்தந்தை, ஓர் உண்மையான மற்றும் நீடித்த அமைதி என்பது உடன்படிக்கைகள் மற்றும் மனித சமரசங்கள் பற்றிய விவரங்கள் பற்றிய கேள்விகளுக்கு அப்பால் செல்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஓய்வுபெறும் வத்திக்கான் நீதிமன்ற தலைவருக்குத் திருத்தந்தை பாராட்டு!

vatican court

வத்திக்கான் நீதிமன்றத்தின் ஓய்வுபெறும் தலைவர் Giuseppe Pignatone அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்து வாழ்த்தும் நன்றியும் தெரிவித்ததாகத் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது. வத்திக்கான் நீதித்துறை உறுப்பினர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு 75 வயதை எட்டிய நிலையில்  திருத்தந்தை, அவரது பதவி விலகலை ஏற்றுக்கொண்டதாக டிசம்பர் 11, இப்புதனன்று அறிவித்தது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 10, இச்செவ்வாய்கிழமை பிற்பகல் Pignatone அவர்களைச் சந்தித்து, இந்த ஆண்டுகளில் அவர் ஆற்றிய பணிகளுக்காக அவருக்கு நன்றி தெரிவித்தார் என்றும், அவரது பதவி விலகல் டிசம்பர் 31, 2024 முதல் நடைமுறைக்கு வருகிறது என்றும் அச்செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.Pignatone அவர்கள் 2012 முதல் 2019 வரை உரோமையின் வழக்கறிஞராகப் பணியாற்றினார், அந்த ஆண்டு திருத்தந்தை, அவரை வத்திக்கானின்  வாழ்க்கை தொடர்பான விடயங்களுக்குப் பொறுப்பான நீதிமன்றத்தை  வழிநடத்த நியமித்தார் என்றும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, பிஞ்ஞதோனே அவர்கள் திருப்பீடத்தின் நிதிகளின் மேலாண்மை அல்லது சிஸ்டைன் கோவில் பாடகர் குழுவின் நிதி தொடர்பான வழக்கு போன்ற பிற நடவடிக்கைகள் மீதான விசாரணைக்காக 86 விசாரணைகளில் ஈடுபட்டுள்ளார் என்றும், இது இச்செவ்வாயன்று நிறைவடைந்தது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.1949-ஆம் ஆண்டு,மே மாதம் 8-ஆம் தேதி, சிசிலியன் நகரமான கால்தானிஸ்செத்தாவில் பிறந்த பிஞ்ஞதோனே அவர்கள், 1971-ஆம் ஆண்டில் பலேர்மோ பல்கலைக் கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்றார். அவர் கால்தானிஸ்செத்தாவில் குற்றிவியல் நீதிபதியாகவும், 1977-ஆம் ஆண்டு முதல், குற்றவியல் தொடர்பான துணை வழக்கறிஞராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Tags