இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் WYD சியோல் | Veritas Tamil
சியோல் தென் கொரியாவில் 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக இளையோர் தினம் (WYD Seoul 2027) நிகழ்வில் நேரடியாகப் பங்கேற்க முடியாத கோடிக்கணக்கான இளைஞர்களையும் சென்றடையும் வகையில், ஆசிய டிஜிட்டல் மறைபரப்பாளர்கள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
WYD Seoul 2027-ன் உள்ளூர் ஏற்பாட்டுக் குழுவின் உலகளாவிய தகவல் தொடர்புப் பிரிவுக்குத் தலைமை வகிக்கும் ஸ்டெஃபனி சன், செப்டம்பர் 12ஆம் தேதி மெட்ரோ மணிலாவின் குவெசான் நகரில் நடைபெற்ற முதல் ஆசிய கத்தோலிக்க டிஜிட்டல் மறைபரப்பாளர் பேரவையில் இதனை வலியுறுத்தினார்.
சியோலில் நடைபெறவுள்ள உலக இளையோர் தினத்திற்கு அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை அழைத்து வருவது மட்டுமே நோக்கமாக இருக்கக்கூடாது என்றும், நேரடியாகப் பங்கேற்க முடியாமல் தங்கள் நாடுகளிலேயே இருக்கும் இளைஞர்களிடமும் உலக இளையோர் தினத்தின் அனுபவத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 முதல் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், தொலைவு, பயணச் செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏராளமான இளைஞர்களால் நேரடியாகப் பங்கேற்க முடியாது என்று ஸ்டெஃபனி சன் தெரிவித்தார்.
எத்தனை இளைஞர்களை கொரியாவுக்கு அழைத்து வர முடியும் என்பது மட்டுமே கேள்வியல்ல; ஏற்கனவே தங்கள் சொந்த இடங்களில் இருக்கும் மக்களிடம் உலக இளையோர் தினத்தின் அனுபவம் எவ்வளவு தூரம் சென்றடைய முடியும் என்பதுதான் கேள்வி,”என்று அவர் கூறினார்.
டிஜிட்டல் மறைபரப்பாளர்கள், சியோல் தங்களைச் சென்றடைய வேண்டிய ஒரு பார்வையாளர்களாக மட்டும் தங்களைப் பார்க்காமல், தங்களது சொந்த மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்கள் வழியாக உலக இளையோர் தினத்தின் செய்தியை மற்றவர்களிடம் கொண்டு செல்லக்கூடியவர்களாக தங்களைப் பார்க்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.ஒரு நேரலை ஒளிபரப்பு அதிக எண்ணிக்கையிலான மக்களைச் சென்றடைய முடியும். ஆனால், மனப் போராட்டத்தில் இருக்கும் ஓர் இளைஞருடன் நேரடியாக அமர்ந்து பேசவோ, அவரது உள்ளூர் மொழியில் கேள்விக்குப் பதிலளிக்கவோ அல்லது குறிப்பிட்ட ஒரு பங்குத்தளம் மற்றும் சமூகத்தின் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளவோ அதனால் முடியாது.
ஆனால், உள்ளூர் டிஜிட்டல் மறைபரப்பாளர்களால் இதைச் செய்ய முடியும். ஏனெனில், அவர்கள் தாங்கள் சேவை செய்யும் மக்களிடையே ஏற்கனவே நம்பிக்கையைப் பெற்றுள்ளனர்.
சியோலில் நடைபெறவுள்ள உலக இளையோர் தினம், துணிந்து இருங்கள்; நான் உலகை வென்றுவிட்டேன்” என்ற யோவான் 16:33 வசனத்தை அடிப்படையாகக் கொண்ட கருப்பொருளில் நடைபெறவுள்ளது.
கொரியத் திருஅவை துணிச்சலை மூன்று முக்கிய செயல்பாடுகளின் வழியாகப் புரிந்துகொள்கிறது என்று ஸ்டெஃபனி சன் தெரிவித்தார். அவை:
* உண்மையைத் தேடுதல்
* அன்பைச் செயல்படுத்துதல்
* அமைதியைக் கட்டியெழுப்புதல்
கொரியா இன்னும் வடகொரியா மற்றும் தென்கொரியா எனப் பிரிந்துள்ள நிலையில், அமைதி என்ற கருத்து அந்நாட்டிற்கு குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
மேலும், கிறிஸ்தவம் பெரும்பான்மை மதமாக இல்லாத ஒரு கலாச்சாரச் சூழலில் நடைபெறும் முதல் உலக இளையோர் தினமாகவும் Seoul 2027 அமையும் என்று அவர் குறிப்பிட்டார். ஆசியாவில் இதற்கு முன்பு 1995ஆம் ஆண்டு மணிலாவில் உலக இளையோர் தினம் நடைபெற்றது.
சமீப ஆண்டுகளில் டிஜிட்டல் மறைபரப்பாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் வளர்ந்துள்ளதாக ஸ்டெஃபனி சன் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு லிஸ்பனில் நடைபெற்ற உலக இளையோர் தினத்தில், கத்தோலிக்க சமூக ஊடகப் பிரபலங்கள் மற்றும் டிஜிட்டல் மறைபரப்பாளர்களுக்காக முதன்முறையாக சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
அதேபோல், 2025ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற திருயாத்திரை ஆண்டிலும், “டிஜிட்டல் மறைபரப்பு”என்ற கருப்பொருளின் கீழ் கத்தோலிக்க சமூக ஊடகப் பிரபலங்கள் ஒன்றுகூடினர்.
Seoul 2027 உலக இளையோர் தின வாரத்தில், டிஜிட்டல் மறைபரப்பாளர்களுக்காக தனிப்பட்ட ஒன்றுகூடல் மற்றும் திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான பதிவு 2026ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோலில் இருந்து வழங்கப்படும் தகவல் தொடர்பு உள்ளடக்கங்களைப் பெறுபவர்களாக மட்டுமே இல்லாமல், தகவல் தொடர்பு உத்தியை உருவாக்குவதிலும் ஆசிய டிஜிட்டல் மறைபரப்பாளர்கள் பங்கேற்க வேண்டும் என்று ஸ்டெஃபனி சன் கேட்டுக்கொண்டார்.
வெவ்வேறு நாடுகள் மற்றும் மொழிகளில் மக்களால் நம்பப்படும் குரல்களை அடையாளம் காண்பது, ஒவ்வொரு நாட்டிலும் எந்த வகையான தகவல்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது மற்றும் ஆசியா முழுவதும் பகிரக்கூடிய உள்ளடக்கங்களை இணைந்து உருவாக்குவது ஆகியவற்றை ஏற்பாட்டாளர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட உலக இளையோர் தினத்தின் கருப்பொருள் பாடல் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்ததாக அவர் தெரிவித்தார். இளைஞர்கள் அந்தப் பாடலைப் பகிர்ந்து, கற்றுக்கொண்டு, தங்களுக்கே உரிய முறையில் பயன்படுத்தத் தொடங்கியதால், அதன் சென்றடைவு மேலும் அதிகரித்தது.
அதேபோல், உலக இளையோர் தின சிலுவையும் திருவுருவச் சின்னமும் 2024ஆம் ஆண்டு முதல் ஆசியாவின் பல பகுதிகளிலும் தென்கொரியாவிலும் பயணம் செய்து வருகின்றன. அவை ஒரு மறைமாவட்டத்திலிருந்து மற்றொரு மறைமாவட்டத்திற்குச் சென்று வருகின்றன.
“திருப்பயணிகள் சியோலுக்கு வருவதற்காக சிலுவை சியோலில் காத்திருப்பதில்லை. அது அவர்களிடம் செல்கிறது,”என்று ஸ்டெஃபனி சன் கூறினார்.
“நாங்கள் கண்டதையும் கேட்டதையும் பேசாமல் இருக்க முடியாது,”என்ற திருத்தூதர் பணிகள் 4:20 வசனத்தை அவர் மேற்கோள் காட்டினார். இந்த வசனமே ஆசிய டிஜிட்டல் மறைபரப்பாளர் பேரவைக்கான விவிலியத் தூண்டுதலாக அமைந்துள்ளது.
அனைவராலும் சியோலுக்குப் பயணம் செய்ய முடியாமல் இருக்கலாம். “ஆனால், அனைவரும் பேச வேண்டும்,”என்று அவர் வலியுறுத்தினார்.
