கொலம்பியா அதிபருடன் திருத்தந்தை உரையாடல் | Veritas Tamil

கொலம்பியாவில் ஆகஸ்ட் 10ஆம் நாள் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஒருமைப்பாட்டையும் நெருக்கத்தையும் தெரிவிக்கும் வகையில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், அந்நாட்டு அதிபர் அபேலார்டோ டி லா எஸ்பிரியெல்லா அவர்களுடன் புதன்கிழமை தொலைபேசியில் உரையாடினார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் விளைவுகளால் துன்புறும் அனைவருக்கும் திருத்தந்தை தனது நெருக்கத்தை வெளிப்படுத்தினார் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குறிப்பாக தனது ஆதரவையும் செபங்களையும் தெரிவித்ததுடன் காயமடைந்தவர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் அவசரநிலைப் பணிகளில் ஈடுபட்டுள்ள மனிதாபிமானப் பணியாளர்களுக்கும் தனது ஆதரவைத் தெரிவித்தார் என்றும் அச்செய்தித் தொடர்பகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தொலைபேசி உரையாடலின்போது, கொலம்பியாவின் தற்போதைய நிலைமை குறித்தும், நிலநடுக்கத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமை குறித்தும் திருத்தந்தையும் அதிபரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

7.4 ரிக்டர் அளவிலான  நிலநடுக்கம்

ஆகஸ்ட் 10ஆம் நாள் ஏற்பட்ட இந்த 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் உள்ள சோகோ (Chocó) மாகாணத்தில், சான் ஹோசே டெல் பால்மார் அருகே மையம் கொண்டிருந்தது.

நாட்டின் பரந்த பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டதுடன், சோகோ, வாலே டெல் காவ்கா, ரிசாரால்டா, கால்டாஸ் மற்றும் கிந்தியோ ஆகிய மாகாணங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. காலி மற்றும் பெரெய்ரா நகரங்களும் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்டன.

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் ஆகஸ்ட் 28ஆம் நாள் வெளியிட்ட மதிப்பீட்டின்படி, அப்போது வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் 331 பேர் உயிரிழந்துள்ளனர், 4,449 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் 143 பேர் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், 4 இலட்சத்து 6 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 2 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், அரசு அதிகாரிகளும், காரித்தாஸ் உள்ளிட்ட மனிதாபிமான அமைப்புகளும் இணைந்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வீடுகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களையும் அவர்கள் மதிப்பிட்டு வருகின்றனர்.

Tamil Survey Popup Image