மனிதகுலத்தின் கேள்விகள், நம்பிக்கைகள், துன்பங்களுக்குத் திருஅவை நம்பகத்தன்மையுடன் பதிலளிக்க இறையியல் உதவ வேண்டும்: அருள்பணி கில்பர்ட் டெலிமா | Veritas Tamil
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், 2026–2031 காலகட்டத்திற்கான அனைத்துலக இறையியல் ஆணையத்தில் (ITC) உறுப்பினர்களாக நியமித்துள்ள நான்கு ஆசிய இறையியலாளர்களில் ஒருவரான, மும்பை புனித பத்தாம் பயஸ் கல்லூரியின் அதிபர் அருள்பணி கில்பர்ட் டெலிமா அவர்கள், இன்றைய மனிதகுலத்தின் கேள்விகள், நம்பிக்கைகள், துன்பங்கள் ஆகியவற்றுக்குத் திருஅவை நம்பகத்தன்மையுடன் பதிலளிக்க இறையியல் உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ரேடியோ வேரித்தாஸ் ஆசியா (RVA) வானொலிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், ஆசியாவின் சமயப் பன்மைத்துவம், வறுமை, சமூக ஓரங்கட்டல் மற்றும் இப்பகுதியின் ஆன்மிக மரபுகள் குறித்த அனுபவங்கள், உலகளாவிய கத்தோலிக்க இறையியலை வளப்படுத்த ஆசியத் திருஅவைகளுக்கு உதவும் என்று அவர் கூறினார்.
தனது நியமனம் குறித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அருள்பணி டெலிமா, “என்னால் பேச முடியாத அளவுக்கு நான் வியப்படைந்தேன். இந்த நியமனம் எனக்குக் கிடைத்ததைப் பெரும் மதிப்பாகக் கருதினேன். அதேவேளையில், இப்பொறுப்பை ஏற்க எனக்குத் தகுதி உள்ளதா என்ற தாழ்மையான உணர்வும் ஏற்பட்டது. இந்தப் பொறுப்புகளை நிறைவேற்ற ஆண்டவரின் வலிமையையும், தூய ஆவியாரின் ஞானத்தையும் வேண்டினேன்” என்று தெரிவித்தார்.
முக்கியமான இறையியல் கேள்விகள் குறித்து திருப்பீடத்திற்கு ஆலோசனை வழங்குவது அனைத்துலக இறையியல் ஆணையத்தின் பணியாகும். பல்வேறு சமயங்களைச் சார்ந்த மக்கள் இணைந்து வாழும் இந்தியாவில், கத்தோலிக்கர்கள் எதிர்கொள்ளும் சமூக மற்றும் மேய்ப்புப்பணி சவால்கள் குறித்த அனுபவத்தை அருள்பணி டெலிமாவின் நியமனம் இந்த ஆணையத்தின் பணிக்குக் கொண்டுவருகிறது.
“பழமையான சமய மரபுகளின் ஞானம், சமயப் பன்மைத்துவம் நிறைந்த சமூகங்களில் வாழும் அனுபவம், ஏழைகள் மற்றும் சமூகத்தால் ஓரங்கட்டப்பட்ட மக்களின் பார்வைகள், தங்கள் கலாச்சாரச் சூழலில் சிறுபான்மையினராக வாழும் உள்ளூர் திருஅவைகளின் புரிதல்கள் ஆகியவற்றை உலகளாவிய கத்தோலிக்க இறையியலுடன் பகிர்ந்துகொள்வதன் வழியாக, அனைத்துலக இறையியல் ஆணையத்தின் பணிக்கு ஆசியத் திருஅவைகள் தனித்துவமான பங்களிப்பை வழங்க முடியும்” என்று அவர் கூறினார்.
ஆசியாவின் பங்களிப்பு என்பது, பிற இடங்களில் உருவாக்கப்பட்ட இறையியல் கருத்துகளை விளக்குவதற்கான எடுத்துக்காட்டுகளை வழங்குவதுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். உள்ளூர் திருஅவைகளின் வாழ்வனுபவமும் நம்பிக்கையும் இறையியல் சிந்தனையை வடிவமைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
“அனைத்துத் திருஅவைகளின் வாழும் நம்பிக்கை, கலாச்சார ஞானம், ஆன்மிக அனுபவம் மற்றும் போராட்டங்கள் ஆகியவை இறையியல் சிந்தனையை வடிவமைக்க அனுமதிக்கப்படும்போது, இறையியல் மேலும் கத்தோலிக்கத் தன்மையுடையதாக மாறுகிறது என்பதை உலகளாவிய திருஅவை உணர்வதற்கு ஆசியா உதவுகிறது” என்று அவர் தெரிவித்தார்.
இந்த அணுகுமுறை, மேற்கத்திய இறையியலுக்குப் பதிலாக ஆசிய இறையியலை நிறுவுவது அல்ல என்றும், நற்செய்தியின் ஒளியில் பல்வேறு மரபுகள் ஒன்றிடமிருந்து மற்றொன்று கற்றுக்கொள்ளும் பண்பாட்டிடையேயான கத்தோலிக்க இறையியலை வளர்ப்பதே இதன் நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CCBI) இறையியல் மற்றும் கோட்பாட்டுக்கான ஆணையத்தின் செயலராக 2023ஆம் ஆண்டு முதல் பணியாற்றிவரும் அருள்பணி டெலிமா, நாடு முழுவதும் இறையியல் மற்றும் மேய்ப்புப்பணிப் பயிற்சியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகியோருக்குத் திருஅவையின் ஒன்றிப்புப் பயணத்தை அடிப்படையாகக் கொண்ட தொடர்ச்சியான பயிற்சியை வழங்குவது ஆணையத்தின் நோக்கமாக உள்ளது என்றும், துறவற சபைகளின் இந்தியக் கூட்டமைப்புடன் இணைந்து அருள்சகோதரிகளின் உருவாக்கப் பயிற்சியை வலுப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் நிலவும் மனித மாண்பைக் குலைக்கும் வறுமை, செல்வம் மற்றும் வளங்களின் சமமற்ற பகிர்வு, சமயப் பிளவுகள் மற்றும் அரசியல் சூழல் குறித்த கவலைகள் உள்ளிட்ட சவால்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இறையியல் மற்றும் கோட்பாட்டுக்கான ஆணையம் என்பது, குறிப்பிட்ட அறிஞர்களுக்கு மட்டுமே உரிய, பொதுமக்களிடமிருந்து விலகிய ஓர் ஆணையம் அல்ல. அடித்தள மக்களிடையே அதற்குள்ள பங்கை உணர்ந்து, இந்தச் சவால்களுக்கு ஒன்றிப்புப் பயணத்தின் அடிப்படையிலும், முழுமையான அணுகுமுறையுடனும் அது பதிலளிக்க முயல்கிறது” என்று அவர் கூறினார்.
இந்தக் கண்ணோட்டத்தைப் அனைத்துலக இறையியல் ஆணையத்தில் தனது ஐந்தாண்டுப் பணிக்காலத்தில் முன்னெடுத்துச் செல்ல அருள்பணி டெலிமா விரும்புகிறார். திருத்தூதர் மரபில் வேரூன்றிய இறையியல் சிந்தனையை வளர்ப்பதுடன், சமகால வாழ்வின் உண்மைகளுக்கும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அவரது விருப்பமாகும்.
“திருஅவையின் நம்பிக்கையைத் தெளிவுபடுத்துவதுடன் மட்டும் இறையியல் நின்றுவிடக் கூடாது. இன்றைய மனிதகுலத்தின் கேள்விகள், நம்பிக்கைகள், துன்பங்கள் ஆகியவற்றுக்குத் திருஅவை நம்பகத்தன்மையுடன் பதிலளிக்கவும் அது உதவ வேண்டும் என்ற உறுதியிலிருந்து எனது முன்னுரிமைகள் உருவாகும்” என்று அவர் தெரிவித்தார்.
அருள்பணி டெலிமா அவர்கள், உரோமையில் உள்ள திருப்பீட நகர்ப்புற பல்கலைக்கழகத்தில் முறைப்படுத்தப்பட்ட இறையியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். கல்வியில் மிக உயர்ந்த சிறப்புத் தகுதியுடன் (summa cum laude) பட்டம் பெற்ற அவர், 1985 முதல் 2011 வரை மும்பை கோரேகாவிலுள்ள புனித பத்தாம் பயஸ் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். 2024ஆம் ஆண்டு அக்கல்லூரியின் அதிபராகப் பொறுப்பேற்றார். மும்பை உயர் மறைமாவட்டத்தின் கிறித்தவ ஒன்றிப்பு மற்றும் சமயங்களிடையேயான உரையாடல் ஆணையங்களிலும், ஜெர்மனியில் உள்ள அனைத்துலக திருத்தொண்டர் மையத்தின் துணைத் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
ஆசிய இறையியலாளர்கள், குருக்கள் மற்றும் பொதுநிலையினர், குறிப்பாக இளம் ஆய்வாளர்கள், தங்கள் சொந்தக் கலாச்சாரங்களிலும் திருஅவை வாழ்வனுபவங்களிலும் வேரூன்றிய இறையியலை உருவாக்க வேண்டும் என்றும், அதேவேளையில் திருஅவையின் மரபுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
“உங்கள் சொந்தக் கலாச்சாரங்கள், திருஅவை வாழ்வனுபவங்கள் மற்றும் உங்கள் மக்களின் வாழும் நம்பிக்கை ஆகியவற்றில் வேரூன்றிய இறையியலை உருவாக்க அஞ்சாதீர்கள்” என்று அவர் கூறினார்.
ஏழைகள், பெண்கள், பழங்குடியினர் மற்றும் சமூகத்தால் ஓரங்கட்டப்பட்ட பிற குழுக்களின் குரல்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவர்களின் வாழ்வனுபவங்கள் இறையியல் சிந்தனைக்கான முக்கிய ஆதாரங்களாகக் கருதப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“பிற இடங்களில் உருவாக்கப்பட்ட இறையியலை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்று மட்டும் கேட்பதற்குப் பதிலாக, ஆசியத் திருஅவைகளின் வழியாகத் தூய ஆவியார் உலகளாவிய திருஅவைக்குக் கற்றுத்தர விரும்புவது என்ன என்று நாம் கேட்போம்” என்று அருள்பணி டெலிமா கூறினார்.
