மியான்மார் மற்றும் தாய்லாந்தை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

மார்ச் 28, வெள்ளிக்கிழமை பிற்பகல் மியான்மரின் மண்டலேயில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இதைதொடந்து பாங்காக், தாய்லாந்து மற்றும் வடக்கு நகரமான சியாங் மாய் உட்பட பகுதிகளிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து 12 நிமிடங்களுக்குப் பிறகு மியான்மரின் சாகிங் பகுதியில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) மற்றும் ஜெர்மனியின் புவி அறிவியல் மையத்தின் GFZ தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் மியான்மரின் சாகிங் என்ற பகுதியில் மையம் கொண்டு இருந்தது. இதனால் அங்குப் பாதிப்புகள் மோசமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. மியான்மர் முழுக்க இந்த பூகம்பம் உணரப்பட்டுள்ளது. குறிப்பாகத் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் பூகம்பம் உணரப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

Myanmar earthquake

பாங்காக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாங்காக்கின் சதுசாக் சந்தையில், கட்டுமானத்தில் இருந்த ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததாகவும், மியான்மரில், அவா மற்றும் சகாயிங் பகுதிகளை இணைக்கும் வரலாற்று சிறப்புமிக்க அவா பாலம் இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தால் பாங்காக்கில் பரவலான அச்சத்தை ஏற்படுத்தியது, அங்கு 17 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர், பலர் உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கின்றனர்.கட்டிடங்கள் அசைந்ததால் எச்சரிக்கை மணி ஒலித்தது, இதனால் நகரம் முழுவதும் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், ஹோட்டல்கள் மற்றும் அலுவலக கோபுரங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

தற்போது வரை மியான்மர் மற்றும் தாய்லாந்து நாட்டில் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், பலியானோர் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என அஞ்சப்படுகிறது.

உலகில் அதிகம் நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் ஒன்றாக மியான்மர். இருக்கிறது. அங்கு 1930 மற்றும் 1956க்கு இடைப்பட்ட காலத்தில் வடக்கிலிருந்து தெற்காக ஓடும் சாகைங் ஃபால்ட் அருகே அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த 26 ஆண்டுகளில் மட்டும் அங்கு ரிக்டரில் 7க்கு அதிகமான நிலநடுக்கம் குறைந்தது ஆறு முறை பதிவானதாகக் கூறப்படுகிறது.அதில் அங்குள்ள பிரபல சுற்றுலா தளங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.