சாந்தா மார்த்தா இல்லத்தில் நடைபெற்ற திருப்பலியில் பங்கேற்ற திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி முதல் உரோமை ஜெமெல்லி மருத்துவமனையில் 38 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 23, இஞ்ஞாயிறன்று, தனது இல்லம் திரும்பிய பிறகு தொடர்ந்து நலமடைந்து வருகிறார் என்று தெரிவித்துள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.மார்ச் 25, இச்செவ்வாய் மாலை, செய்தியாளர்களிடம் இத்தகவலை வழங்கியுள்ள திருப்பீடச் செய்தித் தொடர்பகம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுவாச உடலியக்க மருத்துவ சிகிச்சை முறையைத் தொடர்ந்து பெறுகிறார் என்றும், திருப்பலி, இறைவேண்டல் போன்ற ஆன்மிகக் காரியங்களில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றார் என்றும் கூறியுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முழுமையாக நலம்பெற இன்னும் இரண்டு மாதங்கள் ஆகலாம் என்றும், தொடர் மருந்து, ஆக்ஸிஜன் சிகிச்சை, 24 மணி நேர மருத்துவ உதவி போன்றவை திருத்தந்தைக்குத் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன என்றும், அவரின் மருத்துவர்கள் கூறியதாகத் தெரிவித்துள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.இந்நாள்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பார்வையாளர்களைச் சந்திப்பதில்லை என்றும், பெரிய கூட்டங்களைத் தவிர்த்து வருகிறார் என்றும் கூறும் அதன் அறிக்கை, மருத்துவர்களின் அறிவுறுத்தல்கள்படி அவரது உடல்நிலை ஒத்துழைக்கும் அளவிற்கு அவர் தொடர்ந்து தனது அலுவலகப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் எடுத்துக்காட்டியுள்ளது.
திருத்தந்தையின் மருத்துவர்கள் செர்ஜியோ அல்ஃபியேரி மற்றும் லூய்ஜி கார்போனே இருவரும், அவரது உடல்நிலையின் முன்னேற்றத்தை மிகுந்த விழிப்புடன் கண்காணித்து வருகின்றனர் என்றும், அவரது உடல்நிலையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்றும் அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரை மற்றும் ஞாயிறு மூவேளை செப உரை யாவும் தொடர்ந்து எழுத்துப்படிவமாகத் திருப்பயணிகளுக்கு வழங்கப்படும் என்றும் அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Daily Program
