மருத்துவமனையிலிருந்து சாந்தா மார்த்தா இல்லம் திரும்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 23, ஞாயிற்றுக்கிழமை ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஏறக்குறைய 38 நாள்களுக்குப் பின் உடல்நலம் பெற்று சாந்தா மார்த்தா இல்லம் திரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மருத்துவமனை வளாகத்தில் கூடியிருந்த அனைவரையும் சந்தித்து விடைபெற்றார்.ஏறக்குறைய 3000 மக்கள் மருத்துவமனை வளாகத்தில் கூடியிருக்க 78 வயதுடைய கர்மேலா மன்குசோ என்ற, இத்தாலியின் கலாபிரியாவைச் சார்ந்த பெண்மணி ஒருவர் கையில் மஞ்சள் நிற மலர்க்கொத்துடன் கையசைத்தவாறே திருத்தந்தையை வாழ்த்தினார். இதனைக் கண்ட திருத்தந்தை அவர்கள் அப்பெண்மணியைச் சுட்டிக்காட்டி வாழ்த்தினார்.

மார்ச் 23, ஞாயிற்றுக்கிழமை உரோமையில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனை வளாகத்தில் நண்பகல் 12 மணியளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மருத்துவமனையின் வெளிப்புறமான பால்கனி என்னும் மாடிமுகப்பில் இருந்தவாறே திருப்பயணிகளை வாழ்த்தினார்.

“அனைவருக்கும் நன்றி” என்று மெலிதான குரலில் கூறிய திருத்தந்தை அவர்கள், கூடியிருந்த மக்கள் அனைவரையும் பார்த்து கையசைத்து வாழ்த்தினார். மூச்சுக்குழாய் அழற்சி நோய்க்கெனெ தொடர் சிகிச்சைகளைப் பெற்று வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே மருத்துவமனை வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு கரம் உயர்த்தி ஆசீர் வழங்கினார்.