வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தையின் ஆறுதல் செய்தி.

உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ஜெண்டினாவில் பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலின் தந்திச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அர்ஜெண்டினாவின் துறைமுக நகரமான Bahía Blancaவில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கால் 16 பேர் உயிரிழந்தது மற்றும் சிலர் காணாமல் போயுள்ளது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு அந்நகர் பேராயர் Carlos Alfonso Azpiroz Costa அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இரங்கல் தந்தி, அர்ஜெண்டினா மக்களுடன் ஆன்மீக நெருக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

உறவினர்களின் இழப்பாலும், உடைமைகளின் இழப்பு தரும் நிச்சயமற்ற நிலைகளாலும் துயருறும் மக்களுக்கு இறைவனின் ஆறுதல் வேண்டுவதாகவும், காணாமல்போனோரை கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருப்போருக்கு அருள்பலத்தை வழங்கவேண்டும் என இறைவனை இறைஞ்சுவதாகவும் திருத்தந்தையின் தந்திச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.இந்த வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள Bahía Blanca நகர் மற்றும் Cerri நகர் பகுதிகளை சீரமைக்கும்  பணிகளுக்காகவும் இறைவன் அருளை வேண்டுவதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, அதாவது 260 மில்லி மீட்டர் மழை ஒரு சில மணி நேரத்தில் வெள்ளியன்று கொட்டி தீர்த்ததால் தலைநகர் புவேனஸ் அய்ரஸுக்கு தெற்கேயுள்ள Bahia Blanca நகரம் பெருவெள்ளத்தால் சூழப்பட்டு 16 பேரின் உயிரிழப்புகளுக்குக் காரணமானது.

மூன்று இலட்சம் பேர் வாழும் இந்நகருக்கான உடனடி நிவாரணத் தொகையாக 92 இலட்சம் டாலர்களை அறிவித்துள்ள அர்ஜெண்டினா அரசுத்தலைவர் Javier Milei அவர்கள், நாட்டில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படவும் அறிவித்துள்ளார்.