வேரித்தாஸ் செய்திகள் || Veritas Tamil News || 29.11.2024

    தலைப்பு செய்திகள்..

  1. நற்செய்தி அறிவிப்புப் பணி செய்யும் சீடர்கள் நமக்குத் தேவை - திருத்தந்தை பிரான்சிஸ் கருத்து
  2. ஒருங்கிணைந்த வளர்ச்சியில் அக்கறை காட்டுங்கள்- திருத்தந்தை பிரான்சிஸ் உரை 
  3. காங்கோ நாட்டு இளையோருக்காக அந்நாட்டு கர்தினால் Fridolin Ambongo Besungu கவலை.

விரிவான செய்திகள் 

 

நவம்பர் 28, வியாழன் இன்று, அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு செயல்படும் ESEN  எனப்படும் 'புதிய நற்செய்தியை விதைப்பவர்' (The Sower New Evangelization) அமைப்பினர் 300 பேரைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இயேசு கிறிஸ்து ஒப்படைத்த பணியைத் தொடரும், ஊடகங்கள் வழியாகவும், நற்செய்தி அறிவிப்புப் பணி செய்யும் சீடர்களின் தேவை இன்று நமக்கு அதிகம் வேண்டும் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்

நற்செய்தியின் மகிழ்ச்சியையும் கடவுளின் பரிவிரக்கத்தையும் தெரிவிக்கும் திறன் கொண்ட நற்செய்தி அறிவிப்பாளர்களின் சமூகத்தைக் கட்டியெழுப்ப இயேசுவுக்காக சிறப்பாக அர்ப்பணிக்கப்பட்ட 'I am 73’ என்ற அழகான திட்டத்தைப் பற்றி தான் கேள்விப்பட்டிருப்பதாக அவர்களிடம் கூறிய திருத்தந்தை, அர்ப்பணமுடன் நற்செய்தி அறிவிப்புப் பணி செய்ய விரும்பும் சீடர்கள் இன்று நமக்கு அதிகம் தேவை என்பதையும் மீண்டும் வலியுறுத்தினார்.

திருத்தந்தையின் குரலையும் செய்தியையும் அமெரிக்காவிலும் மற்ற ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளிலும் வாழும் பலருக்கும் கொண்டு செல்வதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட திருத்தந்தை, பல சகோதரர் சகோதரிகள் இறைவேண்டல் செய்யவும், பயணம் செய்ய முடியாத நிலையில் வீட்டிலிருந்து திருப்பலியில் கலந்துகொள்ளவும், கிறிஸ்தவ உருவாக்கம் (formation) மற்றும் திருஅவைச் செய்திகளைப் பெறவும் உதவிவரும் அவர்களின் நற்செயல்களுக்காவும் நன்றி கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

—-------------------------------------------------------------------------------------------------------

நவம்பர் 28, வியாழன் இன்று, கலாசன்சான் (Calasanzan Family) எனப்படும் துறவு சபையினரை அதன் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு திருப்பீடத்தில் சந்தித்தபோது இறைவன் புனித யோசேப்பு கலாசான்ஸை இளைஞர்கள் மற்றும் ஏழைகளின் கல்விக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தூண்டினார் என்றும், பல நூற்றாண்டுகளாக, நான்கு கண்டங்கள் வரை பரவியுள்ள அவரது பணியை நீங்கள் தொடர்ந்து ஆற்றிவருகிறீர்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்,இந்த மகிழ்ச்சியான தருணத்தில், அவர்களுக்கும் அவர்களின் எதிர்காலத்திற்கும் முக்கியமானதாக தான் கருதும் அவர்கள் மூலத்தின் இரண்டு அம்சங்களை வலியுறுத்த விரும்புவதாகக் கூறினார்.

இறைப் பராமரிப்புக்குத் துணிவுடன் கூடிய பணிவு

வசதியான குடும்பத்தில் பிறந்த புனித யோசேப்பு கலாசான் அவர்கள் திருஅவைசார் பணிகளுக்காக உரோமை வந்து தெருவோரச் சிறாரின் நல்வாழ்விற்காகத் தன்னை அர்ப்பணிக்கத் தயங்கவில்லை என்பதையும், இது பிற்காலத்தில் பற்றுணர்வுமிகு பள்ளிகள் தோன்றக் காரணமாகின என்பதையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

அவரின் இந்தச் செயல் மிகவும் அழகாக இருக்கிறது, குறிப்பாக நம் நாட்களில் பல புதிய ஏழ்மைகளுக்கு முகங்கொடுத்து, அச்சங்களையும் தயக்கங்களையும் கடந்து, அதிகமாகக் கணக்கிடாமல், அதே வெளிப்படைத்தன்மையையும் தயார்நிலையையும், அவர்களின் விருப்பங்களில் வெளிப்படுத்த அவர்களையும் அழைக்க விரும்புவதாகக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

ஒரு நபரின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் அக்கறை காட்டுவது

இரண்டாவதாக ஒரு நபரின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் அக்கறை காட்டுங்கள் என்று அவர்களிடம் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, மனம், இதயம் மற்றும் கைகளின் செயல்கள் எவ்வாறு ஒன்றித்திருக்க வேண்டும் என்பதையும் அவர்களுக்கு விளக்கிக் கூறினார்.

உணர்வுகள், அறிவு, உறவு, தனித்துவம் ஆகியவற்றில் துண்டு துண்டான திசையில் இளையோரை மேலும் மேலும் தள்ளும் இவ்வுலகில், அவர்கள் தங்களுடனும் மற்றவர்களுடனும் ஒன்றிப்பை ஏற்படுத்த இந்த வகையான தொகுப்பை உருவாக்க உதவுவது இன்று மிகவும் அவசரமானது என்பதையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

=-------------------------------------------------------------------------------------------------------



 

நாட்டின் அரசியலைப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்ற நோக்கத்தில் நேரத்தையும் சக்தியையும் பணத்தையும் விரயமாக்கிக் கொண்டிருக்கும் காங்கோ நாட்டில் இளையோர் குறித்து எவரும் கவலைப்படாததால் அவர்களின் வாழ்வு பாதிக்கப்படுகிறது என கவலையை வெளியிட்டார் அந்நாட்டு கர்தினால் Fridolin Ambongo Besungu.

காங்கோ அரசுக்கும் மக்களின் தேவைக்கும் இடையே மிகப்பெரிய அளவில் இடைவெளி உள்ளது என்ற கவலையை வெளியிட்ட, Kinshasa பேராயர், கர்தினால் Besungu அவர்கள்,  அனைவரின் முழுக்கவனமும் அரசியலமைப்பு திருத்தம் குறித்தே இருப்பதால் இளையோரின் வாழ்வு பலியிடப்படுவதைப்பற்றி எவரும் கவலைகொள்ளவில்லை என்றார்.

கைவிடப்பட்ட இளையோரைக் குறித்து கவலைப்படாமல், அரசியலைப்பு மாற்றம் குறித்த முயற்சிகளுக்கு அனைத்தையும் வீணாக்கிவருவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்ற கர்தினால், எவ்வித பொய்யான வாக்குறுதிகளுக்கும், வெற்று மாயைகளுக்கும் தங்களை இழக்கவேண்டாம் என்ற விண்ணப்பதையும் இளையோரிடம் விடுத்தார்.

கடந்த அக்டோபரில் காங்கோ அரசுத் தலைவர் Félix Tshisekedi அவர்கள் அரசியலமைப்பு திருத்தத்திற்கென ஓர் அவையை உருவாக்கினார்.இருமுறைகளே ஒருவர் அரசுத்தலைவராக இருக்கலாம் என்ற அரசியலமைப்பு விதியை மாற்றுவதே இதன் நோக்கமாகும்.மூன்றாவது முறையாக அரசுத்தலைவராக போட்டியிட அரசியலமைப்பு திருத்தம் வழியாக Tshisekedi முயன்று வருவதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.