உண்மையான யூபிலி என்பது நமது இதயத்தின் உள்ளே இருக்கின்றது - திருத்தந்தை பிரான்சிஸ்

டிசம்பர் 8 அமல அன்னையின் திருவிழாவை முன்னிட்டு உரோம் மேரி மேஜர் பெருங்கோவில் முன் உள்ள அன்னையின் திருஉருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தி செபித்தபோது உங்களது தயாரிப்புக்கள் வெளிப்புறச் செயல்பாடுகளுடன் முடிந்து விடாது, ஆன்மாவைப் புதுப்பிப்பதற்கான செயல்பாடுகளாக இருக்கட்டும் என்று அன்னை மரியா தனது பிள்ளைகளாகிய நம்மிடம் கூறுகின்றார் என்றும், உண்மையான யூபிலி என்பது நமது இதயத்தின் உள்ளே இருக்கின்றது என்பதை நினைவுபடுத்துகின்றார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
மலர்களின் வழியாக அன்பையும் நன்றியையும் அன்னை மரியாவிற்கு தெரிவிக்கும் வேளையில், ஏழைகளின் கண்ணீர், துன்பம், பெருமூச்சு போன்றவற்றையும் அவரிடம் ஒப்படைக்கின்றோம் என்றும், யூபிலிக்காக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சீரமைப்புப் பணிகள் நகரம் உயிர்த்துடிப்புள்ளதாக இருக்கின்றது என்பதன் அடையாளமாக இருக்கின்றன என்றும் இயேசுவின் வருகைக்காக நம்மையே நாம் தயாரிக்க வேண்டும் என்றும், தொழுகைக்கூடத்தில் எசாயாவின் ஏட்டுச்சுருளை வாசித்து இன்று இந்த மறைநூல் வாக்கு நிறைவேறிற்று என்று இயேசு கூறியதைத் தொடர்ந்து பொறாமையினால் அவரை வீழ்த்த நினைத்த மக்களிடமிருந்து கடந்து திருஇருதய அன்பினால் நிரப்பப்பட்டவர் அன்னை மரியா என்றும் கூறி திருத்தந்தை பிரான்சிஸ் செபித்தார்.
அன்னைக்கு மலரஞ்சலி செலுத்திய திருத்தந்தை அவர்கள், Via del Corso பகுதியில் உள்ள Palazzo Cipolla என்னுமிடத்தில் உள்ள Chagall என்பவரின் படைப்பான வெள்ளைநிறச் சிலுவையைப் பார்வையிட்டார்.
அன்னை மரியா, பாவம் ஏதுமற்றவராய் அமல உற்பவியாய் இவ்வுலகில் பிறந்தார் என்ற மறையுண்மை வெளியான 1854ம் ஆண்டின் முதல் நூற்றாண்டை, அன்னை மரியாவின் யூபிலி என்று கொண்டாட கத்தோலிக்க மக்களுக்கு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை 12ம் பயஸ் எனவே அன்னை மரியாவின் இந்த யூபிலி ஆண்டை துவக்கிவைக்கும் நோக்கத்துடன், 1953ம் ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி, முதன்முறையாக திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், உரோம் மாநகரின் இஸ்பானிய வளாகத்திற்குச் சென்று, அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தினார்.
திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களைத் தொடர்ந்து, திருத்தந்தை புனித 23ம் யோவான், திருத்தந்தை புனித 6ம் பவுல் ஆகிய இருவரும் மரியன்னைக்கு டிசம்பர் 8ம் தேதி வணக்கம் செலுத்தும் பழக்கத்தைக் கடைபிடித்தனர்.
இவர்கள் வழிவந்த திருத்தந்தை அவர்களும், இஸ்பானிய வளாகத்தில் அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தியபின், புனித மேரி மேஜர் பெருங்கோவில் சென்று அங்கு, நற்செய்தியாளர் லூக்கா அவர்களால் உருவாக்கப்பட்டதாய் கருதப்படும் Salus Popoli Romani, அதாவது, உரோம் மக்களின் பாதுகாவலரான அன்னை மரியாவின் திருப்படத்தின் முன்பாக, செபிக்கும் வழக்கத்தைப் பின்பற்றி வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Daily Program
