நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருத்தந்தையின் இரங்கல் செய்தி.

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மியான்மார் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிகமான உயிரிழப்புக்கள் மற்றும் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளது குறித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து இரங்கல் தந்தி செய்தி ஒன்றினை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 28, வெள்ளிக்கிழமை மியான்மார் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலஅதிர்ச்சியால் ஏறக்குறைய 1000 பேர் இறந்துள்ள நிலையில் அவர்களின் ஆன்மா இறைவனில் நிறையமைதி பெற வேண்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இரங்கல் தந்தியானது திருப்பீடச்செயலர் கர்தினால் பரோலின் அவர்களால் அனுப்பப்பட்டது.

இறந்தவர்களின் ஆன்மாக்களுக்காக செபிப்பதாகவும், இந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தனது ஆன்மிக நெருக்கத்தினை உறுதியளிப்பதாகவும் அவ்விரங்கல் தந்திச்செய்தியில் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள்,  பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவசரகால மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் தூய இறைவனின் வல்லமையுள்ள கொடையாகிய வலிமையையும் விடாமுயற்சியையும் பெற்று வாழ செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மியான்மாரில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏறக்குறைய 1002 பேர் இறந்துள்ளனர், 2376 பேர் காயமடைந்துள்ளனர், 30 பேரைத் தேடும் பணி தீவீரமடைந்துள்ளது என்றும், தாய்லாந்தில் இதுவரை 6 பேர் இறந்துள்ளனர், 22 பேர் காயமடைந்துள்ளனர், 12 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் செய்திகள் எடுத்துரைக்கின்றன.