அவரது வார்த்தையில் வாழ்வோம்!| ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 22ஆம் வாரம் -வியாழன்
3 செப்டம்பர் 2026
1 கொரி 3: 18-23
லூக்கா 5: 1-11
அவரது வார்த்தையில் வாழ்வோம்!
முதல் வாசகம்.
1. இந்த வாசகத்தில், உலக ஞானத்தை நம்பாமல், கடவுளின் ஞானத்தை நம்ப வேண்டும் என்று பவுல் அறிவுறுத்துகிறார். மனிதர்களின் பெருமை மற்றும் அறிவு நிலையற்றவை, உண்மையான ஞானம் கடவுளிடமிருந்து வருகிறது.
மேலும், நாம் எந்த மனிதரையும் பெருமையாகச் சார்ந்து கொள்ளாமல், “எல்லாம் உங்களுடையதே; நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள், கிறிஸ்து கடவுளுடையவர்” என்பதை உணர வேண்டும். எனவே, நமது வாழ்வின் மையமாக கிறிஸ்துவை வைத்து, தாழ்மையுடனும் நம்பிக்கையுடனும் வாழ வேண்டும் என்று பவுல் அடிகள் வலியுறுத்துகிறார்.
நற்செய்தி.
1. இந்தப் பகுதியில், இயேசு சீமோன் பேதுருவையும், யாக்கோபையும் மற்றும் யோவானையும் தம்முடைய சீடர்களாக அழைக்கும் நிகழ்வு கூறப்படுகிறது.
இயேசு கெனேசரேத் ஏரிக்கரையில் போதித்துக் கொண்டிருந்தபோது, மீனவர்கள் இரவு முழுவதும் உழைத்தும் மீன் கிடைக்காமல் திரும்பினார். ஏமாற்றமே மிஞ்சியது.
அவ்வேளையில், இயேசு சீமோனிடம் (பேதுருவிடம் ) “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன்பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்று கூறினார். சீமோன் முதலில் சந்தேகம் கொண்டிருந்தாலும், இயேசுவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து வலைகளைப் போட்டார். அப்போது மிகுதியான மீன்கள் கிடைத்ததால் வலைகள் கிழியத் தொடங்கின. இதைக் கண்ட சீமோன் பேதுரு இயேசுவின் பாதத்தில் விழுந்து, தான் பாவியானவன் என்று உணர்ந்தார்.
அதற்கு இயேசு, “அஞ்சாதே, இதுமுதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று கூறினார். பின்னர் பேதுருவும் அவருடைய கூட்டாளிகளும் படகுகளையும் அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினர் என்று லூக்கா விவரிக்கிறார்.
சிந்தனைக்கு.
o இயேசுவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிதல் ஆசீர்வாதத்தைத் தருகிறது என்பது இன்றைய படிப்பினாகத் தரப்படுகிறது. நம்முடைய தோல்விகளிலும் சோர்விலும் இயேசு நம்மை அழைக்கிறார்.
o
“ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன்பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்று சீமோனிடம் கூறியபோது, இயேசுவின் வார்த்தையில் பேதுரு சந்தேகம் கொண்டார். இன்றைய புரிதலில் ‘படகு’ என்பதை திருஅவையாக அடையாளம் காணலாம். இயேசுவின் பொது பணியில் முதன்முறையாக ஒரு படகு பயன்படுத்தப்பட்ட சம்பவத்தில், அது சீமோனுக்குச் சொந்தமான படகாக இருந்தது என்பது மிகவும் அர்த்தமுள்ள ஒன்றாக நாம் பார்க்கலாம். படகுக்கு உரியவர் திருஅவைக்கு உரியவராக, தலைவராக சித்தரிக்கப்படுகிறார்.
சற்று ஆழ்ந்து சிந்தித்தால், இயேசு சீமோனிடம் தலைமைத்துவத்தின் தனித்துவமான பணியையும், சகோதரர்களுக்கு ஆதரவாக இருப்பதற்கான பொறுப்பையும் ஒப்படைக்கிறார் என்பது புலப்படும். அங்கு சீமோனின் படகு, இறைவார்த்தை அறிவிக்கப்படும் மறைபரப்பு மேடையாக மாறுகிறது. மேலும், சீமோனின் படகைத் தேர்ந்தெடுத்ததன் மூலம், சீமோன் பேதுருவின் தலைமைத்துவத்தை அடித்தளமாகக் கொண்டு கட்டப்பட்ட திருஅவையிலிருந்து நற்செய்தி உலகெங்கும் பறைசாற்றப்படும் என்பதை முன்கூட்டியே உணர்த்தினார் என்று அறிந்துகொள்ளலாம். இந்த பேதுருவின் வழிமரபே திருத்தந்தையர்கள்.
1. இன்றைய இரு வாசகங்களும் நமக்கு மற்றுமொரு ஒரு முக்கியமான உண்மையை எடுத்துரைக்கின்றன. மனித அறிவின்படி பார்த்தால், அது ஏற்றுக்கொள்ளக் கடினமான கட்டளை. “ஆண்டவரே, இரவு முழுவதும் பாடுபட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை. எனினும், உமது வார்த்தைப்படியே வலைகளைப் போடுகிறேன்.” இந்த ஒரு வாக்கியம் இன்றைய நற்செய்தியின் இதயமாக உள்ளது. நம்முடைய வாழ்க்கையிலும் இத்தகைய தருணங்கள் வருகின்றன.
நாம் எவ்வளவு முயன்றாலும் வேலை கிடைக்காமல் இருக்கலாம். குடும்பத்தில் பிரச்சினைகள் தீராமல் இருக்கலாம். பல ஆண்டுகளாக வேண்டிக்கொண்டும் பதில் கிடைக்காமல் இருக்கலாம். நம்முடைய திட்டங்கள் தோல்வியடையலாம். அப்போது நாம், “இனி என்னால் முடியாது” என்று சொல்லிவிடுகிறோம். ஆனால் இயேசு நம்மிடம், “மீண்டும் வலை வீசு” என்கிறார். இயேசுவில் முயற்சி திருவினாயாக்கும்.
இங்கே, “உன் அனுபவத்தைவிட என் வார்த்தையை நம்பு. உன் தோல்வியை விட என் வல்லமையை நம்பு’ என்கிறார் ஆண்டவர். பேதுரு தன்னுடைய அறிவையும் கடலில் தமது அனுபவத்தையும் விட்டுவிட்டு இயேசுவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தபோது, அற்புதம் நிகழ்ந்தது.
முதல் வாசகத்தில் புனித பவுல், “உங்களில் யாராவது இவ்வுலக ஞானத்தின்படி தன்னை ஞானி என்று கருதினால், அவன் உண்மையில் ஞானியாவதற்காக மடையனாகட்டும்’ என்கிறார். இங்கு பவுல் மனித அறிவு தேவையில்லை என்று சொல்லவில்லை. மாறாக, மனித அறிவு மட்டுமே நம்முடைய இறுதி நம்பிக்கையாக இருக்கக்கூடாது என்று எச்சரிக்கிறார்.
எனவே, நாம் திட்டமிட வேண்டும். உழைக்க வேண்டும். நம்முடைய திறமைகளைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளின் வழிகாட்டுதலையும் அவருடைய விருப்பத்தையும் தேட வேண்டும்.
இறுதியில், பேதுருவின் வெற்றிக்கு காரணம் அவருடைய மீன்பிடிக்கும் திறமை அல்ல; இயேசுவின் வார்த்தையில் வைத்த நம்பிக்கையும் கீழ்ப்படிதலும் ஆகும்.
“ஆண்டவரே, நான் பாவி; என்னைவிட்டு அகன்றுபோம்” என்கிறார். ஆனால் இயேசு அவரை நிராகரிக்கவில்லை. மாறாக: “அஞ்சாதே; இனிமேல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று சிறந்த பணியொன்றைத் தருகிறார்
இன்றைய நற்செய்தியின் அடிப்படையில் , நம் கடந்த கால கசப்பான அனுபவங்கள் நம் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டியதில்லை கடவுளின் அழைப்பும் அருளும் நம்மை உயர்த்தக்கூடும். ஆம், பவுலின் கூற்றின்படி, எல்லாமே நம்முடையது, நமோ கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து கடவுளினுடையவரக உள்ளார். நாம் இந்த உலகத்திற்கு உரியவர்கள் அல்ல. மாறாக, நம்முடைய வாழ்க்கை கிறிஸ்துவுக்குச் சொந்தமானது என்பதை உணர்ந்து செயல்பட்டாலே, நாம்மால் இவ்வுலகை வெல்ல முடியும். இதுதான் உண்மையான சீடத்துவம்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, என் அறிவைவிட உமது ஞானத்தை நம்பவும், எனது தயக்கத்தைவிட உமது வார்த்தையை நம்பவும், எனது தோல்விகளுக்கு நடுவிலும் மீண்டும் வலை வீசவும், உம்மைப் பின்பற்றவும் அருள் தாரும். ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியகல்வி மையம்,
+60122285452
