நிலைபெயராத நம்பிக்கை விடுவிக்கும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
20 மார்ச் 2024
தவக்காலம் 5ஆம் வாரம் - புதன்
தானியேல் 3: 14-20, 24-25, 28
யோவான் 8: 31-42
முதல் வாசகம்:
இன்றைய முதல் வாசகம் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட யூதர்களுள் மூன்று இளம் யூதர்களின் கதையை விவரிக்கிறது. பாபிலோனிய மன்னனான நெபுகத்னேசர் என்பவன் அவனது விருப்பப்படி ஒரு பொற்சிலையைச் செய்து, அதை யூதர்கள் அனைவரும் வணங்க வேண்டும் என கட்டளை பிறப்பித்திருந்தார். ஆனால், சாத்ராக்கு, மேசாக்கு ஆபேத்நெகோ எனும் மூவரும் வணங்க மறுத்தனர்.
சினம் கொண்ட மன்னனின் கட்டளைப்படி வழக்கத்திற்கு மாறாக, ஏழு மடங்கு அதிகமான வெப்பமுடன் தயாரிக்கப்பட்ட தீச்சுவாலையில் அவர்கள் தள்ளப்பட்டனர். ஆனால், அத்தீச்சுவாலையில் துன்பப்படுவதற்குப் பதிலாக அம்மூவரும், மகிழ்ச்சியோடு இஸ்ரயேலின் கடவுளைப் (யாவேயை) புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தனர். ஆண்டவரின் தூதரும் அவர்களோடு இணந்திருந்தார்.
அதைக் கண்ட மன்னன் ஆச்சரியப்பட்டு, அம்மூவரையும் வெளியே அழைத்தார். அவர்கள் வெளியே வந்தபோது, மன்னன் “சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரின் கடவுள் வாழத்துப் பெறுவாராக” என்று போற்றிப் புகழ்ந்தான். அத்துடன், பாபிலோனில் அம்மூவரின் கடவுளை யாரும் பழித்துரைக்கக் கூடாது என்றும் கட்டளையிட்டான்.
தங்கள் கடவுளைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் பணிந்து தொழ மறுத்து, அரசனது கட்டளையையும் பொருட்படுத்தாமல், கடவுள் மேல் நம்பிக்கை வைத்துத் தங்கள் உடலைக் கையளித்த அம்மூவரையும், அவர்களது கடவுள்தான் தம் தூதரை அனுப்பி மீட்டருளினார் என்று அரசனும் இறுதியில் நம்பினான்.
நற்செய்தி :
இயேசு யூதர்களை நோக்கி, உண்மை என்பது கடவுளின் மகனாகிய இயேசுவுக்குள்ளும், அவர் வழியாகக் கடவுளுடன் கொண்ட உறவிலிருந்து வருகிறது என்றும். கடவுளுடனான உறவில் உண்மையுள்ளவராக இருப்பவர் பாவத்திலிருந்து விடுபட்டு, நம்பிக்கையில் ஆபிரகாமின் வழிமரபினராக வாழ்வர் என்கிறார்.
மேலும், தூய ஆவியாரின் ஒன்றிப்பில், மகனாகிய இயேசுவின் வழியாகத் தந்தையாகிய கடவுளுடன் நாம் உறவில் இருந்தால் மரணம் கூட நம்மை அடிமைப்படுத்த முடியாது என்று எடுத்துரைக்கிறார். பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் என்று விவரிக்கிறார்.
அந்த யூதர்களும் , மறைநூல் அறிஞர்களும் ஆபிரகாமின் உண்மையான வழிமரபினர் அல்ல என்று இயேசு கூறுகிறார். ஏனென்றால் அவர்கள் ஆபிரகாம் கடவுளுடன் கொண்டிருந்த நம்பிக்கையின் ஆழத்தை அறிந்திருக்கவில்லை. அவர்கள் கடவுளுடன் கொண்ட ‘தந்தை’ என்ற உறவில் நிலைத்திருந்தால், தந்தையாம் கடவுள் அனுப்பிய தன்னை, அவர்கள் மெசியாவாக ஏற்றுக்கொண்டிருப்பார்கள் என்று இயேசு கூறுகிறார்
சிந்தனைக்கு :
கடவுளுடனான நமது ஒன்றித்த உறவு, நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்பதை இன்றைய இரு வாசகங்களும் எடுத்துரைக்கின்றன. முதல் வாசகத்தில் அரசனும் ஆச்சரியப்படும் அளவுக்கு மூன்று யூத இளைஞர்களின் கடவுள் நம்பிக்கை செயலில் வெளிப்பட்டது. கடவுள் நம்பிக்கை என்பது ‘குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு' என்பது போலல்ல. மண வாழ்க்கையின் மகிழ்ச்சி என்பது நம்பிக்கையில்தான் இருக்கிறது. சந்தேகம் என்கிற ஒரு கோடு கிழிக்கப்பட்டால் கணவன் மனைவி உறவு அதோகதியாகிவிடும். அவ்வாறே கடவுளுடனான நமது உறவும்.
கடவுளுடனான நமது உறவும் கணவன் மனைவு உறவு போன்றதே. அங்கே பிரமாணிக்கமும் அசைக்க முடியாத நம்பிக்கையும் தேவை. முதல் வாசகத்தில் என்ன நேர்ந்தாலும கடவுள் எங்களை விடுவிப்பார் என்ற நம்பிக்கைதான் அவர்களின் உயிரை மீட்டுத் தந்தது.
கிறிஸ்தவ வாழ்வில் நம்பிக்கை என்பது கடவுள் நமக்கு அருளும் இலவசக் கொடை. அக்கொடை நம்மில் இருந்தாலும், நாள்தோறும் நம்பிக்கையில் வளர ஆவன செய்ய வேண்டும். நம்பிக்கை என்பது, முதன் முதலில் நாம் தனிப்பட்ட வகையில் கடவுளோடு ஒன்றித்திருப்பதாகும். கடவுளுடனான ஒன்றிப்பு இல்லாமல நம்பிக்கையில் வளர்ச்சியடைய முடியாது.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, “என் வார்த்தைகளை நீங்கள் கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாகவும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்” என்கின்றார். இயேசுவின் சீடர்களாக இருப்பதற்கான முதன்மையான தகுதியே அவருடைய வார்த்தைகளைக் கடைப்பிடித்து வாழ்வதுதான். ஆம், அவரின் வார்த்தைகளைக் கடைபிடித்து வாழும் போது நாம் நம்பிக்கையில் வளர்ச்சியடைகிறோம்.
மகிழ்ச்சியான காலத்திலும் துன்புறும் காலத்திலும் கடவுள் நம்பிக்கையில் மாற்றம் ஏற்பட்டால் அது உண்மையான நம்பிக்கை வாழ்வல்ல. ஆபிரகாம் தன் ஒரே மகனையும் பலியிடும் அளவுக்கு கடவுள் வார்த்தையில் நம்பிக்கை கொண்டிருந்தார்.
முதல் வாசகத்தில் மூன்று இளைஞர்களின் வாழ்வும் நம்பிக்கையும் நமக்கு இறை நம்பிக்கைக்கு சாட்சியமாக கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் மன்னனுக்கு அடிபணிந்து, அவனது தெய்வத்தை வணங்கி பதவியில் உயர்வு கண்டிருக்கலாம். ஆனால், கடவுளுக்கு உண்மையாக இருக்கத் தயாராக இருந்தனர். இந்த மூவரின் நம்பிக்கை வாழ்வை இத்தவக்காலத்தில் சிந்திப்போம், நமது நம்பிக்கை வாழ்வுக்கு உரமிடுவோம்.
இறைவேண்டல் :
“நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடமும் என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்’ என்றரைத்த ஆண்டவரே, நான் எந்நாளும் உம்மில் கொண்ட நம்பிக்கையிலிருந்து நிலைபெயாரது நிலைத்திருக்க அருள்புரிவீராக. ஆமென்
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452