இறைப்பணி என்பது ஓர் அர்ப்பண வாழ்வு! | ஆர்.கே. சாமி | VeritasTamil
1 பிப்ரவரி 2024, பொதுக்காலம் 4ஆம் வாரம் - வியாழன்
1 அரசர் 2: 1-4, 10-12
மாற்கு 6: 7-13
இன்றைய முதல் வாசகம் தாவீதின் கடைசி உயில் அல்லது அவரது மகன் சாலமோனுக்கு வழங்கிய இறுதி அறிவுரையைக் கொண்டுள்ளது.
தாவீது, தான் விரைவில் இறக்கப் போகிறார் என்பதை உணர்ந்தார். தன் மகன் சாலமோனை அழைத்து, கடவுள் கட்டளையிட்டவற்றைக் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்று பணிக்கிறார். மரண வாசிலில், இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுபடும் அந்நேரத்தில் அவர் சேகரித்த அனைத்தையும் தன்னுடன் எடுத்துச் செல்ல மாட்டார் என்பதையும் அவர் உணர்ந்தவராகத் தன் மகனோடு உரையாடுகிறார்.
நற்செய்தி
இன்றைய நற்செய்தியில், நற்செய்தியைப் பரப்பும் பணியைத் தொடர இயேசு தம்முடைய திருத்தூதர்களை இருவர் இருவராக அனுப்புகிறார். அவர்கள் ஆடம்பரமின்றி, எளிமையில், பாதுகாப்பை எதிர்பாராமல் பயணிக்க வேண்டும் என்றும், கடவுள் அவர்களைக் கவனித்துக்கொள்வார் என்ற நம்பக்கையையும் அவர் அவர்களுக்கு வழங்குகிறார். இயேசு பணித்தவாறு, சீடர்கள் வெளியேறி பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள் என்று மாற்கு குறிப்பிடுகிறார்.
சிந்தனைக்கு.
’தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
எனும் குறள் 67-ல், ஒரு தந்தை தன் மகனுக்கு ஆற்றக்கூடிய கடமை என்றால் அது கற்றோர்கள் சான்றோர்கள் கூடிய அவையின் முன் அவனை சான்றோன் என நிற்கும் அளவிற்கு மகனை ஆயுத்தமாக்குவதே தந்தையின் கடமை என்று திருவள்ளுவர் கூறிச் சென்றார். இக்குறளுக்கொப்ப அமைகிறது தாவீது அரசரின் அறிவுரை. தனது வாழ்நாளின் முடிவில், கடவுளோடான தனது அனுபவத்தை தன் மகனோடுப் பகிர்ந்து, கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நாட்டு மக்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டுகின்றார்.
இன்றைய இரு வாசகங்களையும் கூர்ந்து கவனித்தால், கடவுள் தமது மீட்புத் திட்டத்தில், இறையாட்சிக்கான பணிக்கு தம் மக்களைத் தயார் செய்து அனுப்புகிறார் என்பது வெள்ளிடைமலை. தாவீது சாலமோனிடம் அறிவுரை கூறி, ஆட்சியை ஒப்படைக்கிறார். நற்செய்தியைப் பரப்புவதற்கு இயேசு திருத்தூதர்களைத் தயாரிக்கிறார்.
தொடக்க நூல் 22:8-ல், ஆபிரகாம் தன் மகனுக்குக் கூறியதைப்போல் அடுத்து நடக்கவிருப்பதைக் ‘கடவுளே பார்த்துக்கொள்வார்’ என்ற பேருண்மையை தாவீதும் இயேசுவம் வலியுறுத்துகிறார்கள்.
இறைப்பணியில் தனித்திருப்பதைவிட இணைந்திருப்பதே மேல். நற்செய்தியில் இயேசு திருத்தூதர்களை இருவர் இருவராகப் பணிக்கு அனுப்புகிறார். அதற்கான காரணம் நமக்குத் தெளிவுற தெரியாவிட்டாலும், இறைப்பணியில் தனித்துச் செயல்படுவதைக் காட்டிலும் இணைந்து செயல்படுவதால் நன்மைகள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. இதனால்தான், இயேசுவும் ‘உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்’ (மத் 18:19) என்று கற்பித்தார்.
இன்று நம்மில் பலர், இறைப்பணியில் ‘என் வழி தனி வழி' என்று பிறரோடு கூட்டு சேர தயங்குகிறோம். இறைப்பணியில் ஒருவர் ஒருவருக்குத் தோள் கொடுக்க துணை வேண்டும். புனித பவுல் அடிகளும் லூக்கா, பர்னபா போன்றோரை துணையாகக் கொண்டிருந்தார். தொடர்ந்து, கடவுளின் பராமரிப்பில் சீடர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதை தாவீதைப் போல இயேசுவும் அறிவுறுத்துகிறார்.
அடுத்து, இறுதிவரை கடவுளில் நம்பிக்கை வைத்து செயல்படுவோரும் முடிவுகள் எடுப்போரும் கைவிடப்படுவதில்லை. அவ்வாறே, தம் பிள்ளைகளுக்குத் தொடக்க முதல் இறையன்பை, இறைநம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது நல்ல பெற்றோருக்கான கடமை என்பதும் தாவீதின் உரை சிறந்த படிப்பினையாக வெளிப்படுகிறது.
‘கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம்" எதற்கு? என்பதற்கொப்ப பிள்ளகைள் வழிதடுமாறி, அதர்ம வழியிலே சென்று, அனைத்தையும் இழந்து துன்புறும் காலத்தில் கண்கலங்காது, சிறுவயது முதல் நற்பண்புக்கும் இறைநம்பிக்கைக்கும் உரியவர்களாகப் பயிற்றுவித்து வளர்த்து ஆளாக்குவதே நம் கடமை என்பதை உணர்ந்து செயல்படுவோம். நாளும் பொழுதும் வெறும் பொருளீட்டில் கவனம் செலுத்துவதால் மட்டும் குடும்பம் செழிப்புறாது.
இறைவேண்டல்.
அன்பு இயேசுவே, உம்மைப் பின்பற்றவதைத் தடுக்கும் எதையும் விட்டு விலக, எனக்கு வேண்டிய ஞானத்தையும் ஆற்றலையும் தந்தருள்வீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
- Reply
Permalink