தெருவில் அழுக்கோடு தோன்றும் திருஅவையாகுவோம்! | ஆர்.கே. சாமி | VeriatsTamil

23 ஏப்ரல் 2024                                                                                          

பாஸ்கா 4 ஆம் வாரம் -செவ்வாய்

தி. பணிகள்  11: 19-26                              

யோவான்  10: 22-30


முதல் வாசகம்.

எருசலேமில் துன்புறுத்தலுக்கு ஆளான பிறகு, இயேசுவைப் பின்பற்றுபவர்கள் அவருடைய செய்தியை யூதேயாவுக்குப் புறம்பே வெவ்வேறு நாடுகளில்  எவ்வாறு பரப்பினார்கள் என்பதை இன்றைய முதல் வாசகம் விவரிக்கிறது.

  • சில கிறிஸ்தவர்கள் எருசலேமை விட்டு வெளியேறி, பெனிசியா, சைப்பிரசு மற்றும் அந்தியோக்கியா போன்ற இடங்களில்  நற்செய்தியை அறிவித்து வந்தனர்.    
  • இந்த கிறிஸ்தவர்கள் மூலம் கடவுளுடைய ஆற்றல்  செயல்படுவதைக் கண்டு பலர் இயேசுவில் நம்பிக்கை கொண்டனர்.  
  • அந்தியோகியாவில் திருஅவை சிறப்பாக வளர்வதைப் பற்றி எருசலேமில் உள்ள திருஅவையினர்  கேள்விப்பட்டனர். அதனால் அவர்கள் அந்தியோகியாவில் நடப்பதைப் பற்றி மேலும் ஆய்ந்தறிய  பர்னபா  என்ற சீடரை அங்கு அனுப்பினார்கள்.
  • பர்னபா  அந்தியோகியாவுக்கு வந்தபோது, ஆண்டவர் அங்கு எவ்வாறு செயல்படுகிறார் என்பதை நேரில் பார்த்து மனமகிழ்வு அடைந்ததோடு,  அவர் நம்பிக்கை வாழ்வில் நிலைத்திருக்கப் புதிய கிறிஸ்தவர்களை  வெகுவாக ஊக்குவித்தார்.
  • தொடர்ந்நு, பர்னபா  இயேசுவின் மற்றொரு சீடரான பவுலைக்  காண  தர்சு நகர் சென்றார்; அங்கிருந்து  இருவரும் அந்தியோகியாவுக்குத் திரும்பி வந்து, ஒரு வருடம் முழுவதும், இயேசுவைப் பற்றி பலருக்குக் கற்பித்தார்கள்.

அந்தியோகியாவில் தான் இயேசுவைப் பின்பற்றுபவர்கள் முதன் முதலில் "கிறிஸ்தவர்கள்" என்று அழைக்கப்பட்டனர் என்பதை லூக்கா எடுத்துரைக்கிறார்.

  
நற்செய்தி. 

குளிர்காலத்தில் நடைபெறும் அர்ப்பணிப்பு விழாவின் போது  இயேசு எருசலேமில் இருக்கிறார். அவர் கோவில் பகுதியில் நடந்துகொண்டருக்குபோது யூதர்கள் குழு அவரைச் சூழ்ந்துகொண்டு, அவர் கிறிஸ்து, வாக்குறுதியளிக்கப்பட்ட மேசியா அவர்தான் என்றால், அதை விவரித்து கூறும்படி கேட்கிறார்கள்.  

இயேசு தானு மெசியா என்பதை ஏற்கனவே அவர்களிடம் தெரிவித்துவிட்டதாகப் பதிலளித்தார். ஆனால் அவர்கள் அவரை நம்பவில்லை என்று பதில் மேலும் எடுத்துரைத்தார். இயேசுவோ, தன்னுடைய   செயல்கள், அவரது தந்தையின் பெயரில் அவர் ஆற்றும் வல்ல செயல்கள், அவர் மேசியா என்ற அடையாளத்திற்கு சாட்சியமளிப்பதாக அவர் விளக்குகிறார். இருப்பினும், அவர்கள் நம்பாததால், அவர்களை நோக்கி, அவர்கள் அவருடைய "ஆடுகள்" மந்தையில் சேராதவர்கள்  என்று வேறுபடுத்தி விவரிக்கிறார்.  

பின்னர் அவர் தன்னைப் பின்பற்றுபவர்களுடனான உறவைப் பற்றி உருவகமாகப் பேசுகிறார், அவர்களை தனது குரலைக் கேட்டு அவரைப் பின்தொடரும் ஆடுகளுடன் ஒப்பிடுகிறார். அவர் அவர்களுக்கு நிலைவாழ்வை வாக்களித்து, அவருக்கும் தந்தையாகிய  கடவுளுக்கும் இடையே உள்ள ஒருமைப்பாட்டை  வலியுறுத்தும் வகையில், உலகில் எவராலும்   இயேசுவை  தந்தையிடமிருந்தும் பறிக்க முடியாது என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறார்.


சிந்தனைக்கு.

நேற்று ஆட்டுக் கொட்டிருக்கு வாசல் நானே என்று போதித்தவர் இன்று அதே போதனையைத் தொடர்கிறார். இயேசுதான் எதிர்ப்பார்க்கப்படும் மெசியா என்பதைச் சந்தேகிக்கும் யூதர்கள் தன் மந்தையைச் சேராதவர்கள் என்பதைத் தெளிவுப்படுத்துகிறார். இதனிமித்தம், அவர் சொல் கேளாதவர் அவரது மந்தைக்குரியவர் அல்லர் என்பதுத் தெளிவாகிறது.

தொடர்ந்து,  நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்’  என்று கூறுவதன் மூலம், இயேசு தனது தெய்வீகத்தன்மையை உறுதிப்படுத்துகிறார், கடவுளின் அதே தன்மையில் விளங்குபவராக தன்னை வெளிப்படுத்துகிறார்.  இது கிறிஸ்தவத்தின் மைய இறையியல் கருத்தாகும். அன்று, எருசலேம் ஆலயத்தில் இயேசுவின் இந்த அறிக்கை யூதர்களிடமிருந்து வலுவான எதிர்விளைவுகளைத் தூண்டியது. இயேசு ஒருபோதும் கடவுளுக்கு இணையானவராக இருக்க முடியாது என்பது யூதர்களின் எண்ணம். 

அன்று யூதர்கள் கொண்ட அதே எண்ணம்தான் இன்றும் உலகில் அதிகபடியான மக்கள் நம்பிக்கையில்  நிழலாடிக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? ஒரே விடை, நமது சொல்லாலும் செயலாலும் நடைபெற வேண்டிய நற்செய்தி பரப்பும் பணி சுணங்கிவிட்டது. நாம் கிறிஸ்தவர் என்ற போர்வையில் சொகுசான வாழ்வுக்கு அடிமையாகிவிட்டோம். 

இக்கருத்தையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் கருத்துரைக்கும்போது, ‘உயிர்ப்பு இல்லாத தவக்காலம்போல கிறிஸ்தவர்கள் வாழ்வு உள்ளது' (நற்செய்தியின் மகிழ்ச்சி, எண் 6) என்றார். ஆம், தவக்காலம் வெற்றியின் பெருவிழாவாகிய ஆண்டவரின் உயிர்ப்பைக் காண வேண்டும். ஆனால், இக்காலத்தில் கிறிஸ்வர்களின் உயிரோட்டமற்ற வாழ்வினால், தவக்காலம்  சோகக்காலமாகவே முடிகிறது. பாஸ்கா பெருவிழா உப்புசப்பற்ற பெருவிழாவாகிறது. 

கிறிஸ்துவே எக்காலத்திற்கும் அறிவிக்க வேண்டிய நற்செய்தி. முதல் வாசகத்தில், பர்னபா  அந்தியோகியாவுக்கு வந்தபோது, அங்கு கிறிஸ்தவர்களின் நற்செய்து அறிவிப்புப் பணி உயிரோட்டத்தைக் கண்டு, மனமகிழ்வு அடைந்ததோடு,  அவர்கள் நம்பிக்கை வாழ்வில் நிலைத்திருக்க ஊக்குவித்தார்.

இன்று, நாம்மில் பெரும்பாலோர்,  நமது சுக மண்டல்ங்களிலிருந்து (comfortble zone)  வெளியேற அஞ்சுகிறோம். நாம் அழுக்குப்படாத திருஅவையில் நிம்மதியாக வாழ்வதையே விரும்புகிறோம். ஆனால், திருஅவை என்பது இயேசுவின் திருவுடல். அவ்வுடல் சாட்டை அடிகளால் துன்புற்று, இரத்தக்கரை படிந்து, பிட்கப்பட்ட உடல் என்பதை மறந்துவிட்டோம்.  ஆகவே, திருஅவையை வெளி தெருக்களில் காண வேண்டும். புனித அன்னை திரேசா இதை விரும்பி செய்தார். தன் உடலை அழுக்காக்கிக்கொள்ள அவர் சற்றும் தயங்கவில்லை.

ஆகவே,  இக்காலத்தில் நமது வெளிப்படையான சாட்சிய வாழ்வில்தான் இயேசு உலக மீட்பர் என்பது வெளிப்படும் என்பதை நினைவில் கொண்டு ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவோம். 

இறைவேண்டல்.

அன்பு இயேசுவே, எனது பாதுகாப்பை முன்னிறுத்தி, பதுங்கி வாழும் என்னை கைத்தூக்கிவிடும். என்னில் உமக்கான சாட்சிய வாழுவுக்கான துணிவும் ஆற்றலும் பெருக்கெடுக்கச் செய்வீராக. ஆமென்.


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452