பரிவு என்பது இறைவனில் உண்டா!!! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம் 14 வாரம் செவ்வாய் 
I: தொநூ: 32: 22-32
II: திபா 17: 1. 2-3. 6-7. 8,15
III: மத்: 9: 32-38

கடவுள் உலகத்தை படைத்து மனிதர்களாகிய நம்மை அவரின் சாயலில் படைத்தது அவரின் பரிவுள்ளத்தை சுட்டிக்காட்டுகிறது. நம் முதல் பெற்றோர் கீழ்படியாமையால் பாவம் செய்தபோதிலும் அவர்களை அழிக்காது பரிவுள்ளம் கொண்டு மனம் வருந்த வாய்ப்பு கொடுக்கிறார். காயின் ஆபேலைக் கொன்ற போதும் அவனை அழிக்காது தண்டனையை மட்டும் வழங்கி பரிவுள்ளத்தோடு மனமாற வாய்ப்பு கொடுக்கிறார். நோவா காலத்தில் இம்மண்ணுலக மனிதர்கள் பாவம் செய்த பொழுதிலும் அனைவரையும் அழிக்காமல் நேர்மையாளரான நோவாவின் குடும்பத்தார் மீது பரிவு கொண்டு மனிதத்தை தளிர்க்க செய்கிறார்.

எகிப்தில் 480 ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட இஸ்ரயேல் மக்களின் கண்ணீர் குரலை யாவே இறைவன் கேட்டு அவர்கள் மேல் பரிவு கொண்டு விடுதலை அளித்தார். மேலும் அவர்களுக்கு பாலும் தேனும் ஓடக்கூடிய கானான் நாட்டை கொடையாக கொடுத்தார். இஸ்ரேலின் இரண்டாம் அரசராகிய தாவீது தன்னுடைய பலவீனத்தின் காரணமாக பாவம் செய்த பொழுதிலும் அவரை அழிக்காது தண்டனை மட்டும் கொடுத்து மனம் மாற வாய்ப்பு கொடுக்கிறார். இஸ்ரேல் வரலாற்றில் கடவுள் என்னதான் நன்மைகள் செய்தாலும் மென்மேலும் பாவம் செய்து கொண்டுதான் இருந்தார்கள். இருந்தபோதிலும் கடவுள் அவர்களை அழிக்காது மனம் திரும்ப வாய்ப்புகள் கொடுத்துக்கொண்டே இருந்தார். இதுதான் கடவுளின் பரிவுள்ளம்.

இன்றைய நற்செய்தியில் இறைமகன் இயேசு பரிவுள்ளத்திற்கு சான்றாக விளங்குகிறார். "இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றி வந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றி நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்: அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல் அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள் " (மத் :9:35-36) என்ற இறை வார்த்தைகள் இயேசுவின் பரிவுள்ளத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நோயுற்ற மற்றும் பாவிகள் அனைவரின் மேலும் இயேசு பரிவு கொண்டார். ஆயன் இல்லா ஆடுகளைப் போல் அலைந்த மக்களுக்கு பரிவோடு புதுவாழ்வு வழங்கினார். இப்படிப்பட்ட மனித நேயம் நிறைந்த பணியைச் செய்ய "அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு " (மத். 9:37) எனக்கூறி நம்மை இறைமகன் இயேசு அழைக்கின்றார்.

இறைவனின் அழைப்பு உன்னதமானது. தாயின் கருவில் நாம் உருவாகும் முன்பே நம்மை அவர் பணிக்கென தெரிவு செய்துள்ளார்.

இப்பேறுப்பட்ட உன்னத அழைப்பை திருமுழுக்கு பெற்ற அனைவரும் ஏற்றுக் கொண்டு இயேசுவின் மனிதநேய நற்செய்திப் பணிக்கு சான்று பகர அழைக்கப்பட்டுள்ளோம். எனவே இன்றைய நாளிலே இயேசுவின் பரிவு உள்ளத்தை நாம் நம் வாழ்வாக்கி பிறருக்கு வாழ்வு கொடுக்க தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்
பரிவுள்ள இறைவா ! எம்மோடு வாழக்கூடிய மக்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது பரிவுள்ளத்தோடு அவர்களுக்கு உதவ நல்ல மனதை தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்