ஆண்டவருக்கு சிறந்ததைக் கொடுப்போமா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 6 திங்கள்
I: தொநூ:  4: 1-15,25
II: திபா:  50: 1,8. 16-17. 20-21
III: மாற்:  8: 11-13

ஒரு அருட்சகோதரி என்னிடம் இவ்வாறாக பகிர்ந்து கொண்டார். அவர் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தபின் அருட்சகோதரியாக மாறுவதற்கான பயிற்சிக்கு செல்வதற்காக தன்னை தயாரித்துக்கொண்டிருந்தார். அவ்வேளையில் வீட்டிற்கு உறவினர் ஒருவர் வந்திருந்தார் .அந்த நபர் இவ்வருட்சகோதரியிடம், " ஏனம்மா நீ மடத்திற்கு செல்கிறாய்? பனிரெண்டாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தால் கூட பரவாயில்லை. நீயோ நல்ல மதிப்பெண் அல்லவா பெற்றிருக்கிறாய். நீ திறமைசாலியும் கூட. நீ போகாதே " என்று கூறினாராம். அதற்கு அவ்வருட்சகோதரியின் தாய் " என் மகள் ஆண்டவருக்கு சிறந்ததைத் தர விரும்புகிறாள். அவளைத் தடுக்காதீர்கள். அவளுடைய அறிவு, திறமை அனைத்தையும் ஆண்டவர் பயன்படுத்துவார் " என்று சொன்னதோடு, மதிப்பெண் குறைவாக எடுப்பவர்கள், திறமையில்லாதவர்கள் தான் அழைத்தல் வாழ்வுக்கு போகவேண்டுமென்ற அந்த நபரின் தவறான மனநிலையை சாடினார்.

ஆம். அன்புக்குரியவர்களே! கடவுள் நமக்கு சிறப்பானதையே தந்துள்ளார். தொடர்ந்து தரவும் செய்வார். ஆனால் நாமோ அவருக்கு சிறந்தவற்றை தர ஏன் யோசிக்கிறோம்?

முதல் வாசகத்தில் நாம் காணும் காயின் ஆபேல் ஆகியோரிடம் உள்ள வேற்றுமை என்ன?இருவருமே ஆண்டவருக்கு காணிக்கை கொடுத்தனர். காயின் நிலத்தின் விளைச்சலைக் கொடுத்தான். ஆபேல் தன் மந்தையின் ஆட்டைக் கொடுத்தான். ஆனால் ஆபேல் கொழுத்த தலையீறுகளைக் கொடுத்தான் என்ற வார்த்தை காயினைக் காட்டிலும் ஆபேல் கடவுளுக்கு சிறப்பானதை மனமுவந்து கொடுத்தான் என்பதை நமக்கு விளக்குகிறதல்லவா.

நாமும் கடவுளுக்கு காணிக்கை கொடுக்கிறோம். நம்மிடம் இருப்பதிலிருந்துதான் கொடுக்கிறோம். ஆனால் அவற்றில் சிறந்ததை, நல்லதை நல்ல மனநிலையுடனும் நன்றி உணர்வுடனும் கொடுக்கிறோமா என்பதை இன்று நாம் ஆழமாக யோசிக்க வேண்டும். உண்மையில் ஆண்டவர் ஏற்றுக்கொண்டது ஆபேலின் கொழுத்த ஆடுகளையல்ல. மாறாக சிறந்ததைத் தர வேண்டும் என்ற ஆபேலின் ஆர்வத்தை.நம்முடைய மனநிலையையும் ஆபேலைப் போல மாற்றினால் கடவுள் நம்மையும் நம் காணிக்கைகளையும் ஏற்றுக்கொள்வார் என்பதில் ஐயமில்லை. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் யூதர்கள் இயேசுவிடம் அடையாளம் கேட்கின்றனர். யாவே இறைவன் தன் மக்களுக்கு எவ்வாறு சிறந்தவற்றை தந்தாரோ அதேபோல இயேசுவும் தந்தையின் அன்பை தன் சிறந்த போதனைகளால் வல்ல செயல்களால் வழங்கினார். அதையெல்லாம் தாண்டியும் யூதர்கள் அடையாளம் கேட்டனர். அவர்களின் எதிர்பார்ப்பு மறுக்கப்பட்டது. கடவுள் நமக்கு தந்தவற்றிற்கு நன்றி கூறி அவருக்கு சிறந்ததைத் தருவதை விட்டுவிட்டு, அவர் நமக்கு செய்தவற்றில் குறைகளைக் காண்பதும் இன்னும் அதிகமாக எதிர்பார்ப்பதும் நமக்கு என்றும் மகிழ்வைத் தராது. எனவே இத்தகைய மனநிலைகளைக் களைந்து ஆபேலைப் போல ஆர்வமாய் சிறந்தவற்றை கடவுளுக்குத் தர முடிவெடுப்போம்.

 இறைவேண்டல் 
அனைத்தையும் சிறந்ததாய் எமக்குத் தந்தவரே! இறைவா! உமக்கு எம்மிடமுள்ள சிறந்தவற்றை காணிக்கையாக்கும் நல் மனம் தாரும்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்