வாழ்வைக் காத்துக்கொள்ளத் தயாரா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலத்தின்  18 ஆம் வெள்ளி   (11.08.2023) 
I: இச: 4: 32-40
II: திபா: 77: 11-12. 13-14. 15,20
III: மத்: 16: 24-28

வாழ்வு என்பது மிக மிக உன்னதமான கொடை. அதிலும் குறிப்பாக  இவ்வுலகில்  பிறந்து வளர்ந்து பலுகும் மற்ற உயிர்களைக் காட்டிலும் மனிதனின் வாழ்வானது அரியது. சிறப்புக்குரியது. மனிதவாழ்வு சிறப்புறக் காரணம் என்ன? வாழ்வின் இலக்கு. வாழ்வுக்கான ஒழுக்கம். அதை நாம் சரியாக வாழத்தூண்டும் ஆன்மீகம். 

தொடக்ககால மனிதர்கள் இதனை மிகச் சிறப்பாக உணர்ந்திருந்தார்கள்.  நல்லவை தீயவற்றை வேர்பிரித்து அறிந்திருந்தார்கள். இன்ப துன்பங்களை சமமாக பார்த்தார்கள். அவர்கள் வாழ்வில் கடினங்களும் கரடு முரடான பாதைகளும் இருந்த போதும் கடந்து சென்றார்கள். கடவுளின் துணையை நாடினார்கள். ஏன் நம் குடும்பங்களில் நம் முன்னோர்கள் பலர் இப்படித்தான் நமக்கு பாதைகளை வகுத்தார்கள். எனவே இன்றும் நாம் அவர்களைப் பெருமையாகப் பேசுகிறோம். ஆம் அவர்கள் தங்கள் வாழ்வைக் காத்துக்கொண்டார்கள்.

இன்று நாகரீகத்தின் ஆதிக்கம் அதிகம்.அறிவியலின் ஆட்சி. எல்லாம் சுலபம். எதிலும் சுகம். துன்பம், கஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற மனநிலையில் நம் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ஆன்மீகத்திற்கு இடமில்லை. தேவைக்கு மட்டுமே கடவுள் என்ற போக்கும் பொதுவாகிவிட்டது. 

இத்தகைய நிலையில்தான் நம் ஆண்டவர் இயேசு நம்மை வாழ்வைக் காத்துக்கொள்ள அழைக்கிறார். அதுவும் துன்பங்கள் வழியாகவே.எல்லாம் எளிதாக கிடைப்பதால் வாழ்வை கொண்டாடும் நாம் சிறு துன்ங்களைக் கூட தாங்க முடியாமல் துவளும் போதெல்லாம்  வாழ்வை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதே நிதர்சன உண்மை. இங்கே வாழ்வு என்பது நம் ஆன்மீகம் தொடங்கி, நம் மன பலம், நம் உடல் நலம், நம் நேர்மறை எண்ணங்கள், பகுத்தறிவு,நம்பிக்கை, உழைப்பு, நம் மகிழ்ச்சி என அத்தனையையும் உள்ளடக்கியதாகும்.  எனவே துன்பங்களை ,கடினமானவற்றை, சுமைகளைத் தாங்கப் பழகுவோம். இதுவே இயேசுவை நாம் பின்பற்றுவதற்கு முதல் தகுதியாகும்." என்னைப் பின்செல்ல விரும்பும் எவரும் தன் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்பின்னே வரட்டும் "என்கிறார் இயேசு. நம் வாழ்வைக் காத்துக்கொள்ளவும் ஒரே வழி இதுதான். வாழ்வைக் காத்துக்கொள்ளத் தயாரா?

இறைவேண்டல் 

வாழ்வின் நாயகனே!  எம் வாழ்வைக் காத்துக்கொள்ள நாங்கள் எதிர்கொள்ளும் இன்ப துன்பங்களை சமமாக ஏற்றுக்கொண்டு உம்மைப் பின்தொடர வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்