பகிர்வோம்! கிறிஸ்தவர்களாய் வாழ்வோம்! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பாஸ்கா காலம்-இரண்டாம் வாரம் செவ்வாய்
I: திப:4: 32-37
II: திபா :93: 1ab. 1c-2. 5
III: யோவான் :3: 7-15

"இருப்பதைப் பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே " என்ற கிறிஸ்தவ பாடல் வரிகள் நாம் அனைவரும் அறிந்ததே. இயேசு தன்னையே கொடுத்தார் இவ்வுலகிற்கு. அன்பைக் கொடுத்தார். தன் நேரத்தைக் கொடுத்தார். ஆறுதல் கொடுத்தார். நல் வாழ்வைக் கொடுத்தார். இரக்கம் கொடுத்தார். அனைவருக்கும் சம மதிப்பைக் கொடுத்தார். இவ்வாறாக அவர் கொடுத்துக்கொண்டே இருந்தார். அதுவும் இல்லாதவர்களுக்கு அவற்றைக் கொடுத்து அவர்களை இருப்பவர்களாக்கினார். அவரைப் போல வாழத்தான் நம்மையும் இன்று அழைக்கிறார் அவர். 

நமது கிறிஸ்தவ தேவாலயங்களின் முன் அதிகமான யாசகர்கள் இருக்க காரணம் என்ன? கிறிஸ்தவர்கள் கொடுப்பவர்கள் என்ற திண்ணமான எண்ணம் இருப்பதால்தான். கன்னியர் இல்லங்கள், அருட்தந்தையர்கள் இவர்களைத் தேடி பல ஏழை எளியோர் செல்வது ஏன்?  அவர்களிடம் சென்றால் அவர்கள் உதவுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதால்தான். இத்தகைய எண்ணம் உருவானதற்கான காரணம் இயேசு அவர் பகிர்வதைப் போதித்தார்.வாழ்வாக்கினார். அவர்வழி வந்த சீடர்களும் தொடக்க கால கிறிஸ்தவர்களும் அதை செய்துகாட்டி சான்று பகர்ந்தனர். ஆம்.  பகிர்ந்து வாழ்தல் என்பது கிறிஸ்தவர்களை எடுத்துக்காட்டும் செயலாகும். கிறிஸ்தவத்தின் முக்கிய பண்பாகும்.

முதல் வாசகத்தில் நாம் தொடக்க கால கிறிஸ்தவர்களைக் காண்கிறோம். நம்பிக்கையால் ஒன்றிணைந்த அவர்கள்,
தங்கள் உடைமைகளைப் பகிர்ந்து கொண்டனர் என வாசிக்கிறோம். அவர்களில் தேவையில் உள்ளோர் என யாரும் இல்லை. அவரவர்களுக்கு தேவையானதை பெற்றிருந்தனர். காரணம் அவர்கள் பகிர்ந்து வாழ்ந்தனர். இருப்பதைப் பகிர்ந்து ஒருவர் மற்றவருடைய தேவைகளைப் பங்கிட்டுக் கொண்டு பூர்த்தி செய்தனர்.

இன்றும் கிறிஸ்தவர்கள் மத்தியில் பகிர்தல் என்கிற பண்பு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆயினும் சில சமயங்களில் குறைவது போன்ற அபாயம் உள்ளது. மறுபுறம் குறிப்பிட்ட சில சமயங்களில் மட்டும் அதாவது கிறிஸ்மஸ், தவக்காலம் போன்ற சமயங்களில் மட்டும் நம்மில் பலர் பிறருக்கு உதவி செய்கிறோம். இன்னும் சிலர் பிறர் பார்க்க வேண்டுமென்று செய்கிறோம். இத்தகைய மனநிலைகளை எல்லாம் நாம் களைந்து இயேசுவைப் போல, தொடக்க கால கிறிஸ்தவகளைப் போல பகிர்பவர்களாய் வாழ வேண்டும். அள்ளிக் கொடுக்க வேண்டும் என்பதல்ல. நம் கண்முன்னே தேவையில் இருப்பவர்களுக்கு நம்மால் இயன்றதை அது சிறிதேயாயினும் கொடுக்க பகிர நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நம் குழந்தைகளுக்கும் இப்பழக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இச்செயல் நமது கிறிஸ்தவ வாழ்க்கைக்கு நிச்சயம் சான்று பகரும்.

இறைவேண்டல் 
அனைத்தையும் கொடுத்த இயேசுவே!  நாங்கள் இருப்பதை தேவையில் உள்ளவர்களோடு பகிர்ந்து வாழும் மனதைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்