கடவுள் எனக்கு சான்று பகர்வாரா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
கிறிஸ்து பிறப்பு காலம்
I: 1 யோவா: 5: 5-6, 8-13
II: திபா: 147: 12-13. 14-15. 19-20
III: மாற்: 1: 7-11
கடவுள் எனக்கு சான்று பகர்வாரா!
நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது எனக்கு கிடைத்த அனுபவம் இது. தேர்வுகள் முடிவடைந்தது. மதிப்பெண்கள் கொடுத்தாயிற்று. அந்த முறை ரேங்க அட்டையில் கையெழுத்திட பெற்றோர்கள் பள்ளிக்கு வரவேண்டும் எனக் கூறப்பட்டது. அத்தோடு பெற்றோர்கள் ஆசிரியரைத் தனியாக சந்தித்துப் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. எனது தந்தை பள்ளிக்கு வந்திருந்தார். அத்தேர்வில் நான் வகுப்பில் இரண்டாவது ரேங்க் எடுத்திருந்தேன். என் தந்தை ஆசிரியரை அணுகி என்னுடைய தந்தை என்று சொன்ன உடனேயே ஆசிரியர் மிகுந்த முக மலர்ச்சியுடன் என்னைப் பாராட்டிப் பேசினார். என்னுடைய படிப்பும் நடத்தையும் மிக நன்றாக இருப்பதாக எனக்கு நற்சான்று அளித்தார். என்னையும் அழைத்து என் தந்தைமுன் வாழ்த்தினார். எனக்கும் மகிழ்ச்சி .என் தந்தைக்கும் மகிழ்ச்சி.
பொதுவாக நம்மைப் பற்றி யாரேனும் நற்சான்று தரும் போது நாம் அனைவருமே மகிழ்வோம். வேலைத்தேடி செல்லும் போது நம்மால் முடிந்த அளவுக்கு சான்றிதழ்களைச் சேர்த்து வைத்துக்கொள்வோம். அந்தச் சான்றிதழ்கள் நம்மைப் பற்றி பேசும் அல்லவா. ஆக பிறரிடம் நற்சான்றும் பாராட்டும் பெறுவது அனைவருக்குமே பிடித்தமான ஒன்றுதான்.
இன்றைய வாசகங்கள் கடவுள் நம்மைக் குறித்து என்ன சான்று தரப்போகிறார் என நம்மை ஆன்ம சோதனை செய்ய அழைக்கின்றன. முதல் வாசகத்தில் தூய ஆவியாரும் நீரும் இரத்தமும் இயேசுவுக்கு சான்று பகர்கின்றன என்று புனித யோவான் கூறுவதை வாசிக்கிறோம். அவை தரும் நன்சான்று என்ன? இயேசு கடவுளிடமிருந்து வந்தவர் என்பதும் அவரிடமே கடவுள் அருளும் நிலைவாழ்வு உள்ளது என்பதுமே.
நற்செய்தி வாசகத்தில் இயேசு திருமுழுக்கு பெற்றபிறகு என் அன்பார்ந்த மகன் இவரே என கடவுளே நேரடியாக சான்றளிக்கிறார் என்பதை வாசிக்கிறோம்.
நாமும் திருமுழுக்கினால் இறைவனின் பிள்ளைகள் என்ற உரிமையைப் பெற்றுள்ளோம்.இன்று நம்மைக் குறித்து நம் விண்ணகத் தந்தையின் சான்று என்ன? இயேசுவைப் போல தந்தையின் திருஉளம் ஏற்று அன்பான தந்தையாம் அவரைப் பிரதிலித்து நேர்மையோடும் துணிச்சலோடும் வாழ்ந்தால் நமக்கும் நன்சான்று கிடைக்கும். கடவுளே நேரடியாக சான்றளிப்பதில்லை. மாறாக நம்முடைய பணிவாழ்வும் அதனால் பிறர் பெறும் நன்மைகளும் சவால்களை சமாளித்து முன்னேறுவதும் நமக்கு சான்றாக அமையும். இறுதியில் நாம் பெறும் நிலைவாழ்வு நற்சான்றின் உச்சகட்டமாய் அமையும்.கடவுளிடமிருந்து
நன்சான்று பெறப்போகிறோமா? சிந்தித்து வாழ்வோம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! இயேசுவுக்கு நீர் நற்சான்று அளித்ததுபோல உமது பிள்ளைகளாகிய எங்களுக்கும் நீர் நற்சான்று அளிக்கும் வண்ணம் நாங்கள் வாழ்வோமாக! ஆமென்
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்