முற்சார்பு எண்ணங்களைக் களைந்து இயேசுவை பின்பற்றுவோம்!| குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

கிறிஸ்து பிறப்பு காலம் 
I: 1 யோவா: 3: 11-21
II: திபா 100: 1-2. 3. 4. 5
III: யோவா: 1: 43-51

ஒரு ஊரில் புதிதாக அருட்பணி செய்வதற்காக அருள்பணியாளர் ஆயரால்  நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த அருள்பணியாளர் அந்த பங்கிற்கு செல்வதற்கு முன்பாகவே அவரைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்ல ஆரம்பித்தனர். ஆனால் அந்த அருள்பணியாளர் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட பிறகு மிகச் சிறப்பான பணிகளை ஆற்றலோடு செய்தார். மக்கள் எதிர்பார்த்ததை விட  ஆன்மீகம்,  சமூகம், மனித நேயம் போன்ற நிலைகளில் பங்கு மக்கள் வளர்ச்சி அடைய அதிகமான பணிகளைச் செய்தார். அவரைப் பற்றி தவறாக புரிந்து கொண்ட மக்கள் ஒரு கட்டத்தில் அவரை சரியாகப் புரிந்து கொண்டனர்.  பங்குத்தந்தையைப் புரிந்து கொண்ட மக்கள் சிறப்பான முறையில் தங்களுடைய ஒத்துழைப்பைக் கொடுத்தனர்.

நம்முடைய வாழ்க்கையில் முற்சார்பு எண்ணத்தை  நிச்சயம் களைய வேண்டும். அப்பொழுதுதான்  வாழ்க்கையிலே வளர்ச்சி இருக்கும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் நத்தனியேல் பிலிப்பிடம் சொன்ன "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரமுடியுமோ?" என்னும் சொற்கள் நமது முற்சார்பு எண்ணங்களை ஆய்வுசெய்ய நமக்கு அழைப்பு விடுக்கின்றன.

நாசரேத் என்பது அடையாளம் காணப்படாத ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் இயேசு அந்த இடத்தில் வாழ்ந்ததன் வழியாக அந்த இடத்தை உயர்த்தினார்.  சிறிய இடமா பெரிய இடமோ எல்லா இடத்திலும் நன்மைத்தனங்கள் உண்டு என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

பல நேரங்களில் நம்முடைய வாழ்க்கையில் நாம் அதிகம் எதிர்பார்க்கிறோம். நமக்கு நிறைய கிடைக்க வேண்டும் என நினைக்கிறோம். சூழல் அனைத்தும் நமக்கு ஏற்றார் போல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். பணி செய்யக்கூடியவர்கள் பணி மாற்றம் பெறும்பொழுது , முற்சாற்பு எண்ணத்தோடு அந்த இடத்திற்கு செல்லக்கூடாது. அப்படி சென்றால் அந்த இடம் நமக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தராது. எதுவாக இருந்தாலும் என்னால் செய்ய முடியும் எதார்த்தங்களை ஏற்றுக் கொள்ள முடியும் என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டு நம் வாழ்க்கையில் பயணமாகும் பொழுது, வாழ்வில் வெற்றியின் கனியைச் சுவைக்க முடியும்.

ஆண்டவர் இயேசு நினைத்திருந்தால் அரச மாளிகையில் பிறந்து, அரச மாளிகையில் வளர்ந்து தன்னை உயர்ந்தவராக காண்பித்திருக்கலாம். ஆனால்  அவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்து ஒரு ஏழையைப் போல் வாழ்ந்து தான் வாழ்ந்த பகுதிக்கு பெருமை சேர்த்தார்.

நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் கூட நாம் வாழ்கின்ற இடம் சிறியதோ பெரியதோ அது பெரிதல்ல ; நாம் காணும் மனிதகர்களும் நல்லவர்களோ கெட்டவர்களோ அது நமக்குத் தேவையில்லை. நம்முடைய பார்வையை சரியாக அமைத்துக்கொண்டால் யாரோடும் வாழ இயலும். எங்கேயும் ஒளிர முடியும். முடிந்தவரை நம்மாலான நல்ல பணிகளை இறைவனுக்கு பயந்து செய்யும்பொழுது நாம் சாட்சியமுள்ள வாழ்வை வாழ முடியும். கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற முடியும்.  வாழ்வில் சாதனையாளர்களாக மாற முடியும். எனவே நம்முடைய வாழ்க்கையில் முற்சார்பு எண்ணங்களை அகற்றி சிறந்த வாழ்வை வாழ ஆண்டவர் இயேசு கொண்டிருந்த மனநிலையை நாமும் கொண்டிருக்க முயற்சி செய்வோம். அதற்கு தேவையான அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா!  எங்களுடைய அன்றாட வாழ்வில் முற்சார்பு எண்ணங்களை அகற்றி  சிறந்த வாழ்வை வாழ்ந்திட தேவையான அருளை தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்