மாசில்லா மனதுடையவராய் மறைசாட்சியாகத் தயாரா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

புனித மாசில்லாக் குழந்தைகள் - மறைச்சாட்சியர் விழா
முதல் வாசகம்
I: 1 யோவா: 1: 5 - 2: 2
II: திபா: 124: 2-3. 4-5. 7-8
III:மத்: 2: 13-18

நான் பள்ளியிலே படித்துக்கொண்டிருக்கும் போது ஒருமுறை நான் பேசாமலேயே வகுப்புத் தலைவர் கரும்பலகையிலே நான் பேசியதாக என் பெயரை எழுதிவிட்டார். நான் பேசவில்லை என எவ்வளவு கூறியும் பெயரை அழிக்கவில்லை. ஆசிரியர் வகுப்பிற்கு வந்த உடன் பேசியவர்கள் பெயரை கரும்பலகையில் பார்த்துவிட்டு அனைவரையும் அழைத்து தன் கையால் கன்னத்திலே பலமாக அடித்தார். நானும் அடிவாங்கினேன். ஆனால் நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆசிரியரும் எதுவும் விசாரிக்காமல் அடித்துவிட்டார். இச்செயல் என் மனதைப் பெரிதும் பாதித்தது. வீட்டிலே அனைவரிடமும் சொல்லி அழுதேன். என்னை சமாதானம் செய்ய மூன்று நாட்கள் எடுத்தது.

தவறு செய்யாமல்  தண்டனை அனுபவிக்கும் போது நாம் மிகப் பெரிய வலியை உணர்கிறோம்.
அத்தண்டனையை ஏற்றுக்கொள்ள நம் மனம் மறுக்கிறது. அது நமக்கு மட்டுமல்ல நம்மைச் சார்ந்தவர்களுக்கும் பெரிய அதிர்ச்சியையும் துன்பத்தையும் தருவதாக இருக்கிறது என்பதே உண்மை.ஆனால் அத்தண்டனையை பிறர் நலனுக்காக நாம் ஏற்றுக்கொள்ளும் போது துன்பமாகவே இருந்தாலும் பிற்காலத்தில் நாம் உயர்த்தப்படுகிறோம்.

இன்று நாம் கொண்டாடும் மாசற்ற குழந்தைகளுடைய பெருவிழா இச்செய்தியை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.
ஞானிகள் குழந்தையைப் பற்றி தெரிவிக்காததால் கோபமடைந்த ஏரோது அரசன் அப்பகுதியிலுள்ள எல்லா இரண்டு வயதுக்குட்டபட்ட ஆண் மழலைகளைக் கொன்றான். ஒன்றும் அறியாத பச்சிழங்குழந்தைகள் ஏரோதின் சுயநலத்திற்கு பலியாகின்றனர். அவர்களுடைய பெற்றோர்களும் கடுமையான வலியை தாங்க வேண்டியதாயிற்று.
தவறின்றி தண்டனை பெற்ற அந்தக்குழந்தைகள் உலகை மீட்கும் மீட்பரைக் காப்பாற்ற மறைசாட்சியராகின்றனர்.

இந்த விழாவைக் கொண்டாடும் நமக்கு மாசற்ற குழந்தைகள் கூறும் செய்தி இதுவே. நம் அன்றாட வாழ்வில் நாம் செய்யாத தவறுக்காக குற்றம் சுமத்தப்பட்டு, துன்பத்துக்கு ஆளாக நேரும்போது அதனால் பிறருக்கு நன்மை உண்டாகும் என நாம் உணர்ந்தால் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு நாம் ஏற்றுக்கொள்ளும் போது நாமும் மறைசாட்சியராகிறோம். இயேசு குழந்தையாய் இருந்த போது காப்பாற்றப்பட்டார். ஆனால் தன்னுடைய முப்பத்து மூன்றாம் வயதில் தான் செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவித்தார்.
ஆயினும் உலக மீட்பிற்காக அவர் மனமுவந்து அத்தண்டனையை ஏற்றுக்கொண்டார் அல்லவா! அவருடைய சீடர்களான நாமும் அதே மனநிலையைக் கொண்டவர்களாக வாழ முயல வேண்டும். பிறர் நலனுக்காகவும் ஆண்டவருடைய மகிமைக்காகவும் ஒருவேளை நாம் தவறாக தண்டிக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ள முயலுவோம். இறைவன் நிச்சயம் உண்மையை வெளிப்படுத்தி நம்மை உயர்த்துவார். காரணமில்லாமல் நம்மை நோக்கிப் பாயும் வசைமொழிகள், தண்டனைகள், எதிர்ப்புகள் அனைத்தையும் இயேசுவைப் போல, மாசற்ற குழந்தைகளைப் போல ஏற்றுக்கொண்டு மறைசாட்சியாக வாழ இறையருள் வேண்டுவோம்.

 இறைவேண்டல் 
மாசற்ற இறைவனே!  உமது பிள்ளைகளான நாங்களும் மாசில்லா குழந்தைகளைப்போல மறைசாட்சியராய் வாழ்ந்து பிறர் நலனுக்காகவும் உமது மாட்சிக்காகவும் உழைத்திட வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்