இயேசு எனும் அன்பின் நற்செய்தியை உலகெங்கும் பரப்புவோம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
புனித யோவான் - திருத்தூதர், நற்செய்தியாளர் விழா
I: 1 யோவா: 1: 1-4
II: திபா: 97: 1-2. 5-6. 11-12
III:யோவா: 20: 2-8
கிறிஸ்து பிறப்பின் காலத்தில் இருக்கும் நாம் இன்று திருத்தூதரான யோவானின் விழாவைக் கொண்டாடுகிறோம். இவர் செபதேயுவின் மகன். இயேசுவின் சீடரான பெரிய யாக்கோபுவின் சகோதரர் . இவர்கள் இருவரையும் "இடியின் மக்கள் " என விவிலியம் கூறுகிறது. இவர் முதலில் திருமுழுக்கு யோவானின் சீடராய் இருந்தவர். அவருடைய வழிகாட்டுதலின் படி இயேசுவின் சீடராக மாறி அவரைப் பின்தொடர்ந்தார். திருத்தூதர்கள் அனைவரிலும் இவரே இளையவர். இயேசுவின் வாழ்வில் நடந்த தோற்றமாற்றம் போன்ற சில முக்கிய நிகழ்வுகளை நேரிடையாகக் கண்டவர். இயேசுவால் மிகவும் அன்பு செய்யப்பட்டவர் என விவிலியம் கூறுகிறது. இறுதி இரவு உணவு வேளையில் இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த சீடர் இவர். கல்வாரி பயணத்தின் இறுதி வரை இயேசுவைப் பின்தொடர்ந்தவர். இயேசுவின் தாய் மரியைவை தன் தாயாக ஏற்று கவனித்து வந்தவர்.
இவர் இயேசுவின் வாழ்வை நற்செய்தியாக நமக்கெல்லாம் கொடுத்துள்ளார் என திருஅவையின் பாரம்பரியம் கற்பிக்கிறது. மேலும் இவர் தூய ஆவியால் தூண்டப்பட்டு மிகவும் ஆழமான இறையியல் கருத்துக்களை நற்செய்தி, திருமுகம் மற்றும் திருவெளிப்பாடு நூல்கள் வழி நமக்குத் தந்துள்ளார் எனக் கூறினால் அது மிகையாகாது. இயேசு என்ற அன்பின் நற்செய்தியை அகிலமெங்கும் பரப்புவதில் இவருடைய பங்கு அளப்பெரியது.
இன்றைய முதல் வாசகத்தில் "நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம்" என்ற புனித யோவானின் வார்த்தைகள் மூலம் அவர் தன் வாழ்வில் கண்டுணர்ந்த, கேள்வியுற்ற, அனுபவித்து மகிழ்ந்த நற்செய்தியாம் இயேசுவை, அவருடைய ஆழமான அன்பை பிறரோடு பகிர்ந்து கொள்வதில் எவ்வளவு ஈடுபாட்டோடும், ஆர்வத்தோடும் இருந்துள்ளார் என்பதை நம்மால் உணரமுடிகிறது.
ஆம் இன்று நாம் கொண்டாடும் புனித யோவானின் விழா கிறிஸ்துவை ஆழமாக அறிந்து அவரைப் பிறருக்கு பறைசாற்றவே நம்மை அழைக்கின்றது. ஏனெனில் ஆழமாக அனுபவித்த ஒன்றை பற்றி பேசாமல் நம்மால் இருக்க முடியாது. அவ்வாழ்ந்த அனுபவம் கிறிஸ்துவின் அன்பால் கிடைத்ததென்றால் நிச்சயமாக நம்மால் அமைதியாக இருக்கவே முடியாது. இன்றைய காலங்களில் எத்தனையோ செபக் கூட்டங்கள் மற்றும் வழிபாடுகளில் பலர் இயேசுவால் அடைந்த நன்மைகளையும் குணம் அடைந்த அனுபவங்களையும் சாட்சியாக துணிச்சலோடு எடுத்துரைக்கிறார்கள். பலர் தங்கள் உயிரையும் துச்சமெனக் கருதி நற்செய்தி அறிவிக்கிறார்கள். நம்மில் எத்தனை பேருக்கு இத்துணிச்சலும் ஆர்வமும் இருக்கிறது என சிந்திப்போம். கண்டதையெல்லாம் பேசுவதை விடுத்து இயேசுவிடம் நாம் கண்டுணர்ந்த தெய்வீக அனுபவங்களை அறிவிக்க தயாராவோம்.
இறைவேண்டல்
அன்பான இறைவா! திருத்தூதரான நற்செய்தியாளர் புனித யோவான் திருவிழாவில் நற்செய்தி அறிவிக்க நம்மை முழுமையாக அர்ப்பணிக்கும் நல்ல மனநிலையை தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்