உலக பாலியல் தொழிலாளர்கள் நாள் | June 2
1977 ஜீன் 2 ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் உலக பாலியல் தொழிலாளர்கள் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. 1976 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி, பிரான்சு நாட்டின் லியோன் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் நூற்றுக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள் ஆவேசமாக புகுந்தார்கள். தங்களின் கொடுமையான அவல வாழ்க்கைக்கு தீர்வு காண வேண்டும் எனும் கோரிக்கை உள்ளிட்ட பல வாழ்வியல் உரிமைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தினார்கள். எட்டு நாட்களுக்கு பின், அந்த தேவாலயத்தில் நுழைந்த பிரான்சு நாட்டு காவல்துறை அவர்களை அப்புறப்படுத்தியது. ஆனாலும் பாலியல் தொழிலாளர்களுக்கான சில உரிமைகள் அளிக்கப்பட்டன. அந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் தான் ஜீன் 2 ஆம் தேதி பாலியல் தொழிலாளர் நாளாய் கடைபடிக்கப்படுகிறது.
இவர்களை வன்கொடுமைகளிலிருந்து காப்பாற்ற நினைக்கும், இவர்களுக்கு குரல் கொடுக்கவும், போராடவும் தயாராய் இருக்கும் ஒருசிலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த சர்வதேச பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு தினம்.
உலகின் பல நாடுகளில் பாலியல் தொழில் அனுமதியுடனேயே நடக்கிறது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. நமது நாட்டில் கூட பாலியல் தொழில் செய்வது குற்றம் என்று சட்டத்தில் இல்லை. உடலுறவுக்கு ஒருவரை அழைப்பதே குற்றம். அப்படியிருக்கையில் அதிகார வர்க்கம் முதற்கொண்டு பொதுமக்கள் வரை இவர்களை இழிக்காதவர்களும் தாக்காதவர்களும் இல்லை. அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கு 29 டாக்சி டிரைவர்கள் கொல்லப்படுகின்றனர். அதேபோல் மதுபானக் கடை பெண் ஊழியர்களில் ஒரு லட்சத்துக்கு 4 பேர் கொல்லப்படுகின்றனர். ஆனால் பாலியல் தொழில் செய்பவர்களில் ஒரு லட்சத்துக்கு சுமார் 204 பேர் கொல்லப்படுகின்றனர். காரணம் அவர்களை பாதுகாக்கவும், குரல் கொடுக்கவும் யாரும் இல்லை என்பதே.
பிச்சை எடுப்பவர்களுக்கும், கடன் வாங்குபவர்களுக்கும் மட்டுமல்ல இவர்களுக்கும் உடல்நிலை சரியில்லாத தாய் தந்தை, கஷ்டப்படும் குடும்பம் என எல்லோமும் உண்டு. குடும்பப் பிரச்னைகளுக்காக எங்கெங்கோ திரிந்து யாரும் உதவாத நிலையில், இவர்கள் கண்களில் பணத்தைக் காட்டுவது ஏனோ காமத்தின் எதிர்ப்பார்ப்பில் திரியும் ஒரு கொடிய மிருகம்தான். உயிர்கொல்லி நோய்கள் தாக்கும் என்று தெரிந்திருந்தும் ஒருத்தி அதைச் செய்கிறாள் என்றால் அவள் நிச்சயம் எதிர்பார்ப்பது உடல் சுகம் அல்லவே. அவளுக்கான வாய்ப்பும் அன்பும் மறுக்கப்பட்டதால்தானே அவள் அந்த முள் பாதையை தேர்ந்தெடுக்கிறாள். உறவினர்களால் கைவிடப்பட, பெண்ணுக்கான அடையாளங்கள் முழுமையடையாத நிலையிலும் கூட பல சிறுமிகள் இதற்கு முற்படுகிறார்கள். ஏன் இந்தக் கொடுமை. யார்தான் இவர்களுக்கான வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் அளிப்பது?
சிவப்புக் குடை சின்னம் பாலியல் தொழிலாளர்களின் வன்கொடுமைக்கு எதிரான சின்னமாக கடைபிடிக்கப்படுகிறது. சமீபத்தில் ஏற்பட்ட சென்னை வெள்ளத்தின் நிவாரண நிதிக்கு மும்பையைச் சார்ந்த பாலியல் தொழிலாளர்கள் இணைந்து 1 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். அவர்களுக்கும் எல்லா மனித உணர்வுகளும் காலாவதி ஆகாமல் உள்ளது. நாம் தான் அவர்களை நம்மில் ஒருவராக ஏற்க மறுக்கின்றோம். மனிதம் என்பது எல்லோரையும் ஏற்றுக் கொள்வதுதான்.