தெரு நாய்களின் அன்னை | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
தெரு நாய்களைக் கண்டாலே கல்லெடுக்கும் சமூகம் நம்முடையது. ஆனால், தெரு நாய்களின் பாதுகாவலியாக, நாய்களைக் கரிசனையோடு கவனிக்கக்கூடிய அன்னையாக இருப்பவர் 61 வயதான பிரதிமா தேவி அவர்கள். ஏழு வயதில் திருமணம் செய்துகொடுக்கப்பட்ட பிரதிமா தேவி மேற்கு வங்காளம் நந்தி கிராமத்தைத் தன் சொந்த இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்தவர். 18 வயதில் மூன்று பிள்ளைகளுக்குத் தாயான பிரதிமா தம் கணவரால் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளானார். கணவரின் கொடுமையிலிருந்து தப்பித்து தலைநகரான டெல்லியில் குடியேறினார். டெல்லியில் குடியேறி 30 ஆண்டுகள் கடந்துவிட்டன.
தொடக்கத்தில் ஒரு சில வீடுகளில் சமையல் வேலை செய்து தமது அன்றாட வாழ்வைக் கடத்தினார். சில ஆண்டுகள் கழித்து, சாலையோரத்தில் ஒரு டீக்கடை அமைத்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு தன் தேவைகளைக் கவனித்துக்கொண்டார். ஆனால், டெல்லி காவல்துறை மற்றும் மாநகராட்சியால் இவரது கடை அப்புறப்படுத்தப் பட்டது. வயிற்றுப் பிழைப்புக்காக இருந்த அந்தக் கடையும் இல்லாமல், தெருத்தெருவாக சுற்றிதிரிந்து தேவையற்ற குப்பைகளைப் பொறுக்கி, அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வந்தார்.
தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கக்கூடிய பிரதிமா தேவி 400 தெரு நாய்களுக்கு உணவு கொடுத்துக் கவனித்து வருகிறார். பிரதிமா தேவியின் சமயம், குடும்பம், பிள்ளைகள், மொழி எல்லாமே இவர் வளர்க்கின்ற நாய்கள்தான். பலரும் இவரின் நாயைக் கல்லால் எறிந்து காயப்படுத்தியுள்ளனர். இவருக்கும் பலர் தொல்லைக் கொடுத்துள்ளனர். இருப்பினும் நாய்கள்தான் தனது உலகம் என்று அவற்றை விட்டுச்செல்ல மனமில்லாமல் நாய்களோடே தங்கிவிடுகிறார்.தினமும் இரு வேளை உணவு, ஒரு நேரம் பால், நாய்களுக்கான முறையான மருத்துவம் என நன்றாக பராமரித்து
வரும் இவரை பலரும் 'நாய்களின் அம்மா' என்று அழைக்கின்றனர்.
“என்னுடைய குழந்தைகளை (நாய்களை) விட்டு நான் சென்றுவிட்டால் இவர்களை யார் கவனிப்பார்கள் ? மீண்டும் இவை அநாதைகளாகி விடுமே என்பது பிரதிமா தேவியின் கவலையாக இருக்கிறது. எனவே தமது கடைசி மூச்சு வரைக்கும் இவற்றைக் என்கிறார் இவர்.
இலட்சியத்தை அடைவதற்குத் துன்பம், போராட்டம் என்ற விலையைக் கொடுத்தே அடைய வேண்டும்.
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.
