மேற்கு வங்காளத்தில் கிறிஸ்தவச் சமூகத்தினருக்கு அச்சுறுத்தல் | Veritas tamil
கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில், பழங்குடியின கிறிஸ்தவர்களின் விவிலிய மாநாடு கும்பல் தாக்குதலால் முன்கூட்டியே நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பல மாவட்டங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் மத வழிபாட்டு நடைமுறைகளுக்கான கட்டுப்பாடுகள் குறித்த குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியின் உண்மை கண்டறியும் குழு முன்வைத்துள்ளது.
அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இக்குழு, நாடாளுமன்ற உறுப்பினர் சாகரிகா கோஷ் தலைமையில், கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியின் அறிவுறுத்தலின்பேரில் கொல்கத்தா, வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் பஸ்சிம் மேதினிப்பூர் மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ நிறுவனங்கள், ஆலயங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டது.
நதியா மாவட்டம், ஜலர்காலியில் உள்ள புனித லூயிஸ் பங்குக் கோவிலில் அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற்றதாகக் கூறப்படும் தாக்குதலைத் தொடர்ந்து இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அங்கு நான்கு நாள்கள் நடைபெறவிருந்த சாந்தாலி மொழி விவிலிய மாநாட்டின்போது, கும்பல் ஒன்று ஆலயச் சொத்துகளைச் சேதப்படுத்தியதுடன், உள்ளூர் கிறிஸ்தவர்களையும் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில்கொண்டு, மாநாட்டைத் திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே நிறுத்துமாறு மறைமாவட்டம் ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தியது.
சாந்தாலி மக்கள் கிழக்கு இந்தியாவில், குறிப்பாக மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் பீகார் மாநிலங்களில் வாழும் பழங்குடியின மக்கள் ஆவர். பல்வேறு பகுதிகளிலிருந்து சாந்தாலி மொழி பேசும் கிறிஸ்தவர்கள், ஜலர்காலியில் உள்ள தெய்வீக மையத்தில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் பங்கேற்கக் கூடியிருந்தனர். மாநாட்டின் முதல் நாளில் 1,900க்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்தனர்.
உண்மை கண்டறியும் குழுவின் பயணத்தின்போது, அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாகக் கூறிய மக்களிடமிருந்து நேரடியாகத் தகவல்களைப் பெறுவதும், அச்சத்துடனும் கவலையுடனும் இருப்பதாகத் தாம் குறிப்பிட்ட கிறிஸ்தவச் சமூகங்களுக்கு உதவுவதும் தங்களின் நோக்கம் என்று சாகரிகா கோஷ் தெரிவித்தார்.
சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவுகளில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவர்கள் தங்கள் மதநம்பிக்கையைக் கைவிடுமாறு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான உரிமை மறுக்கப்படுவதாகவும், சொத்துகள் தொடர்பான கட்டுமானப் பணிகளுக்கும் விவசாயத்திற்கான பாசன நீர் கிடைப்பதற்கும் இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், கிறிஸ்தவ ஆலயங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும், இறைவேண்டல் கூட்டங்களுக்கு அருகில் உரத்த இசையை ஒலிக்கச் செய்து வழிபாட்டில் ஈடுபடுவோரை அச்சுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், பராசத் அருகிலுள்ள சிமுல்தலாவில் அமைந்துள்ள ஆக்சிலியம் கான்வென்ட்டிற்கு குழுவினர் சென்றபோது, தங்களது சொத்தில் சட்டப்படி கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாகக் கூறிய அருள்சகோதரிகளை ஆவேசமடைந்த கும்பல் ஒன்று அச்சுறுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
நதியா மாவட்டம், ஜலர்காலியில் நடைபெற்ற சாந்தாலி மொழி விவிலிய மாநாட்டின்போது ஏற்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலையும் சாகரிகா கோஷ் சுட்டிக்காட்டினார். இந்தத் தாக்குதலால் மாநாடு திட்டமிட்டபடி நிறைவடைவதற்கு முன்பே நிறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பஸ்சிம் மேதினிப்பூர் மாவட்டம், பாலிச்சாக்கில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்திற்கு குழுவினர் சென்றபோது, மோனிநாத்பூர் கிராமத்தில் இறந்த கிறிஸ்தவர் ஒருவரின் உடல் கல்லறையிலிருந்து வலுக்கட்டாயமாகத் தோண்டி எடுக்கப்பட்டு எரியூட்டப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. அப்பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு நீர்விநியோக வசதிகளும் அடக்கம் செய்வதற்கான இடங்களும் மறுக்கப்படுவதாகவும் கோஷ் குற்றஞ்சாட்டினார்.
வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாமன்புகூருக்கும் இக்குழுவினர் சென்றனர். கோஷ் தெரிவித்ததன்படி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயல்பாட்டாளராகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட சுவாமி சிவானந்தா என்பவர், ஒரு பங்குத்தந்தைக்கும் கிறிஸ்தவப் போதகர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. தங்கள் சபைகளில் உள்ளவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாற்ற வேண்டும் என்று அவர் கெடு விதித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
சம்பந்தப்பட்ட பங்குத்தந்தை அருள்பணி பிரதீப் தாரி அவர்களை மேற்கோள்காட்டிய கோஷ், அந்தப் பகுதியில் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் பாரம்பரியமாக அமைதியாக வாழ்ந்து வந்ததாகவும், தற்போது கிறிஸ்தவர்கள் வாழும் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் தாக்குதல்கள் நடைபெற்றதாகக் கூறப்படும் செய்திகள் குறித்து கொல்கத்தா பேராயர் எலியாஸ் பிராங்க் அவர்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்ததாகவும், இச்சம்பவங்கள் சனநாயகம் மற்றும் மனிதநேய விழுமியங்கள் தொடர்பான விரிவான கேள்விகளை எழுப்புவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கோஷ் கூறினார்.
இருப்பினும், உண்மை கண்டறியும் குழு முன்வைத்த குற்றச்சாட்டுகள் சுயாதீனமாகச் சரிபார்க்கப்படவில்லை. குழுவினர் குறிப்பிட்ட அனைத்துச் சம்பவங்கள் தொடர்பாகவும் காவல்துறையில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து கோஷ் தெளிவுபடுத்தவில்லை. செய்தி வெளியிடப்பட்ட நேரத்தில், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மேற்கு வங்காள அரசிடமிருந்தோ காவல்துறையிடமிருந்தோ உடனடி பதில் கிடைக்கவில்லை.
இந்தக் குழுவின் கண்டறிதல்கள், மேற்கு வங்காளத்தில் கிறிஸ்தவ வழிபாட்டின் பாதுகாப்பு, கிறிஸ்தவ நிறுவனங்களின் பாதுகாப்பு மற்றும் மதச் சமூகங்களின் உரிமைகள் குறித்த விரிவான கேள்விகளை எழுப்புகின்றன. சாந்தாலி மொழி விவிலிய மாநாடு தடைபட்டதாகக் கூறப்படும் சம்பவம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகள் பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
