நற்கருணையே அருள்பணியாளர்களின் வாழ்வுக்கும் பணிக்கும் அடித்தளம் | Veritas Tamil
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மறைமாவட்ட அருள்பணியாளர்கள், அருள்பணியாளர்களின் வாழ்வுக்கும் பணிக்கும் நற்கருணையே அடித்தளம் என்பதை வலியுறுத்தி, அசாம் மாநிலம் திபுவில் அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்ற வடகிழக்கு இந்திய மறைமாவட்ட அருள்பணியாளர் சகோதரத்துவ அமைப்பின் (DFNEI) 20ஆவது இரண்டாண்டு மாநாட்டில் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டனர்.
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஓரியன்ஸ் இறையியல் நிறுவனத்தின் இயக்குநர் அருள்பணி முனைவர் ஸ்டானிஸ்லாஸ் சின்லியாங்க்குப் அவர்கள், நற்கருணையில் கொண்டாடப்படும் தன்னையே முழுமையாகக் கையளிக்கும் அன்பை, அருள்பணியாளர்கள் தங்களது மேய்ப்புப்பணி, உறவுகள் மற்றும் அன்றாட வாழ்வில் வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“நற்கருணை என்பது ஓர் அருள்பணியாளரின் பணியை மட்டுமல்ல, அவரது முழு வாழ்வையும் வடிவமைக்க வேண்டும்” என்று, “மறைமாவட்ட அருள்பணியாளரின் நற்கருணை வாழ்வு” என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வின்போது அவர் தெரிவித்தார்.
பழைய ஏற்பாட்டில் காணப்படும் உடன்படிக்கை மற்றும் பலியிடுதல் மரபுகள், குறிப்பாகப் பாஸ்கா விழா மற்றும் பாவப் பரிகார நாள் ஆகியவற்றிலிருந்து தொடங்கி, புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து தம்மையே பலியாகக் கையளித்தது வரை நற்கருணையின் விவிலிய அடித்தளங்களை அவர் விளக்கினார். கிறிஸ்துவின் பலி, உடன்படிக்கையை நிறைவேற்றி, மனிதகுலத்தை இறைவனுடன் ஒப்புரவாக்கியது என்றும் அவர் எடுத்துரைத்தார்.
நற்கருணையைக் கொண்டாடுவதற்கும் அதன் உணர்வின்படி வாழ்வதற்கும் இடையிலான தொடர்பை அருள்பணியாளர்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என இந்த அமர்வு அழைப்பு விடுத்தது. தாழ்மை, ஒன்றிப்பு மற்றும் தங்களது மேய்ப்புப்பணியில் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்களுக்குச் சேவை செய்வதன் வழியாக நற்கருணையின் உணர்வு வெளிப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
கலந்துரையாடலின்போது, திருச்சபைச் சட்டத் தொகுப்பின் 904ஆம் சட்டப்பிரிவும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இறைமக்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலையிலும், அருள்பணியாளர்கள் நாள்தோறும் திருப்பலி நிறைவேற்றுவது வலுவாகப் பரிந்துரைக்கப்படுவதைப் பங்கேற்பாளர்கள் ஆய்வு செய்தனர்.
நாள்தோறும் நற்கருணையைக் கொண்டாடுவது குறித்த திருச்சபையின் வலுவான பரிந்துரைக்கும், திருவழிபாட்டு நேரங்களைச் செபிக்கும் நியதிசார் கடமைக்கும் இடையிலான வேறுபாடுகள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர். நீண்ட கடல் பயணங்களை மேற்கொண்ட அருள்பணியாளர்கள் கப்பல்களிலேயே திருப்பலி நிறைவேற்றிய வரலாற்றுச் சூழல்களும் விவாதிக்கப்பட்டன.
கத்தோலிக்க இறைமக்கள் இல்லாத இடங்களில் திருப்பலி நிறைவேற்றுவது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. நற்கருணை என்பது கிறிஸ்துவும் திருச்சபையும் இணைந்து செயல்படும் மறைநிகழ்வு என்பதால், அதன் முக்கியத்துவம் பங்கேற்போரின் எண்ணிக்கையை மட்டுமே சார்ந்ததல்ல என்று விளக்கப்பட்டது.
மலைப்பாங்கான நிலப்பரப்பு, தொலைதூரக் குடியிருப்புகள் மற்றும் பல்வேறு இனச் சமூகங்களைக் கொண்ட வடகிழக்கு இந்தியாவின் தொலைதூர மறைபரப்புப் பகுதிகளில் பணியாற்றும் அருள்பணியாளர்களுக்கு இக்கருத்து குறிப்பாகப் பொருத்தமானது. அப்பகுதிகளில் கத்தோலிக்கச் சமூகங்களைச் சென்றடைவது பல்வேறு சவால்களைக் கொண்டுள்ளது.
நற்கருணை, அருள்பணியாளர்களின் அடையாளத்திற்கும் மறைப்பணிக்கும் மையமாக இருக்க வேண்டும் என்றும், தன்னையே கையளிக்கும் அன்பு மற்றும் மேய்ப்புப்பணிக்கான அர்ப்பணிப்பு நிறைந்த வாழ்வின் வழியாக அது வெளிப்பட வேண்டும் என்றும் இவ்வமர்வு வலியுறுத்தியது.
அசாம் மாநிலம் திபு மறைமாவட்டத்தின் தலைமையகமான திபுவில் அக்டோபர் 6 முதல் 9ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த மாநாட்டில், வடகிழக்கு இந்தியாவின் 15 மறைமாவட்டங்களில் 14 மறைமாவட்டங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மறைமாவட்ட அருள்பணியாளர்கள் பங்கேற்றனர். அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மியாவ் மறைமாவட்டம் இம்மாநாட்டில் பங்கேற்கவில்லை.
