கலையும் நற்செய்தியே! | Vertas Tamil
கலை என்பது வெறும் அழகு சார்ந்தது மட்டுமல்ல, மாறாக நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கும் மனிதகுலத்தின் பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்குமான ஒரு கருவி என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தினார்.
அக்டோபர் 10, சனிக்கிழமையன்று, பெரிய கண்காட்சிகளை ஒழுங்கமைப்பவர்களின் உலகளாவியக்குழு என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் பிஸோட் குழுவின் உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்துபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, பல்வேறு தலைமுறைகளுக்கு இடையே சந்திப்புகளை வளர்ப்பதோடு, கலாச்சாரத்தையும் மனித படைப்பாற்றலையும் மேம்படுத்தும் நினைவகம், அழகு மற்றும் வரலாற்றின் இடங்களாக அருங்காட்சியகங்களின் பங்கை எடுத்துரைத்தார்.
"பொருள்சார் தன்மை" என்ற கருப்பொருளைப்பற்றி எடுத்துக்காட்டிய திருத்தந்தை, பொருள் என்பது மனிதகுலத்தின் பாதுகாப்பிற்காக ஒப்படைக்கப்பட்ட ஒரு கொடை என்றும் மேலும் "கலைசார் படைப்பாற்றல் மூலம், மக்கள் பொருளை படைப்பின் அழகை வெளிப்படுத்தும் அர்த்தமுள்ள படைப்புகளாக மாற்றுகிறார்கள்" என்றும் தெரிவித்தார்.
கலையானது மனிதர்களை அழகை ரசிக்கவும், தங்களைக் கடந்து ஆழமாகச் சிந்திக்கவும் தூண்டுகிறது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, கலைப்படைப்புகள் ஒரு சமூக அடையாளத்தைப் பாதுகாக்கின்றன என்றும், வரலாறு மற்றும் ஞானத்தின் மூலம் கடந்த கால மற்றும் நிகழ்கால தலைமுறைகளை இணைக்கின்றன என்றும் வலியுறுத்தினார்.
“காலத்தின் வழியாகப் பயணிக்கும் திருஅவை, கலையை வெறும் அழகியல் கோட்பாடாக மட்டும் கருதாமல், அழகின் வழியாக நற்செய்தியைப் பறைசாற்றும் கருவியாகவே புரிந்துகொண்டுள்ளது” என்று திருத்தந்தை கூறினார்.உலகெங்கிலும் உள்ள முக்கிய கலை மற்றும் கலாச்சார அருங்காட்சியகங்களின் இயக்குநர்கள் இக்குழுவில் இடம்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
