காசாவிற்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட திருத்தந்தையின் கடைசி பரிசு |veritastamil

காசாவிற்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட திருத்தந்தையின் கடைசி பரிசு

போர் மற்றும் வன்முறைகளால் நிறைந்த இவ்வுலகிற்கு அமைதியைக் கொண்டு வரும் நோக்கில் பல்வேறு செயல்களையும் உதவிகளையும் செய்து வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் இறந்த பிறகும் அந்த உதவிகளை வழங்கும் நோக்கில் அவர் பயன்படுத்திய திருத்தந்தை வாகனமானது (papamobile) காசா பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மருத்துவமனை சிகிச்சைக்காக அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்படுபவர்களுடனான திருத்தந்தையின் நெருக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, திருத்தந்தை பிரான்சிஸ் பல இலட்சக் கணக்கான மக்கள் நடுவே வந்து, அவர்களைச் சந்தித்த திருத்தந்தை வாகனமானது குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைகளுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.      

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் இறப்பதற்கு முன்பாக, போரினால் இலட்சக் கணக்கான மக்கள் துன்புறுவதையும், வாழ்வாதார நெருக்கடியினால் துன்புறுவதையும் அறிந்து எருசலேம் காரித்தாஸ் அமைப்பின் வழியாக பல உதவிகளைச் செய்துள்ளார்

ஏறக்குறைய 10 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் போரினால் பாதிக்கப்பட்டிருப்பதை  அறிந்த திருத்தந்தை அவர்கள், குழந்தைகள் வெறும் எண்கள் அல்ல, அவர்கள் முகங்கள், பெயர்கள் கதைகள் கொண்டவர்கள், தூய்மையானவர்கள் என்று அடிக்கடி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தியதற்கு ஏற்றவாறு அக்குழந்தைகளுக்கு உதவ அவரது வாகனம் கொடையாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்நோக்கின் வாகனம் என்று திருத்தந்தையின் வாகனமானது பெயரிடப்பட்டு, தொற்றுநோய்களுக்கான உடனடி சோதனைகள், தடுப்பூசிகள், நோய்களைக் கண்டறிதல், பரிசோதனை மற்றும் சிகிச்சையளிப்பதற்கான உபகரணங்களுடன் பிற உயிர்காக்கும் பொருட்களும் அதில் பொருத்தப்பட்டுள்ளன.

பேரழிவு தரும் போரினால், கட்டடங்கள் சிதைந்துள்ளன, நலவாழ்வுப் பராமரிப்பு முறை மற்றும் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது, பசி, பட்டினி போன்றவற்றோடு பல்வேறு தொற்று நோய்களும், பிற மோசமான நலவாழ்வு நிலைமைகளும் ஏற்பட்டு குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றன.

நலவாழ்வுப் பராமரிப்பு சரியாகக் கிடைக்காதவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்கள் ஆகிய குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் திருத்தந்தையின் வாகனம் மாற்றப்பட்டுள்ளது என்றும், மறைந்த திருத்தந்தையின் அன்பு, கவனிப்பும் நெருக்கம், வலிமை, இரக்கம் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது என்றும் கூறினார் ஸ்வீடன் காரித்தாஸ் அமைப்பின் பொதுச்செயலர் பீட்டர் புருனே