டிஜிட்டல் மறைப்பணியாளர்கள் மக்களை கிறிஸ்துவை நோக்கி வழிநடத்துபவர்களாக இருக்க வேண்டும்: அருள்தந்தை ஃபெல்மர் ஃபீல் | Veritas Tamil
டிஜிட்டல் மறைப்பணியாளர்கள் மக்களை கிறிஸ்துவை நோக்கி வழிநடத்துபவர்களாக இருக்க வேண்டும்: அருள்தந்தை ஃபெல்மர் ஃபீல்
இணையத்தில் மக்களை வெறுமனே ஈர்ப்பவர்களாக இருப்பது மட்டுமல்லாமல், அவர்களை இயேசு கிறிஸ்துவை நோக்கி வழிநடத்துபவர்களாக இருக்க டிஜிட்டல் மறைப்பணியாளர்கள் அழைக்கப்படுகின்றனர் என்று, பிலிப்பீன்சில் தொடங்கியுள்ள முதல் ஆசிய கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர் பேரவையின் தொடக்க நிகழ்வில், அருள்தந்தை ஃபெல்மர் ஃபீல் SVD தெரிவித்தார்.
திசையைக் காட்டுவதற்காக உதடுகளால் சுட்டிக்காட்டும் தனித்துவமான பிலிப்பீன் வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, டிஜிட்டல் தகவல்தொடர்பாளர்களின் மறைப்பணிக்கு ஓர் உருவகமாக இச்சைகையை அருள்தந்தை ஃபெல்மர் பயன்படுத்தினார்.
“டிஜிட்டல் மறைப்பணியாளர்களாகிய நாமும் நமது பதிவுகள் வழியாகச் சுட்டிக்காட்ட அழைக்கப்படுகிறோம்” என்று, செப்டம்பர் 10ஆம் தேதி குவிசோன் நகரிலுள்ள Radio Veritas Asia (RVA) வளாகத்தில் அமைந்துள்ள மூன்று புனிதர்கள் சிற்றாலயத்தில் நடைபெற்ற வரவேற்புத் திருப்பலியின்போது அவர் தெரிவித்தார்.
“செல்வாக்கு செலுத்துபவர்களிலிருந்து சாட்சிகளாக: ஆசியாவில் டிஜிட்டல் மறைப்பணிக்கான திருஅவை ஒன்றிப்புப் பாதை” என்ற கருப்பொருளில் நடைபெறும் இப்பேரவையில், ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கத்தோலிக்க டிஜிட்டல் தகவல்தொடர்பாளர்களும் இணையச் செல்வாக்காளர்களும் பங்கேற்றுள்ளனர்.
திருப்பலிக்குத் தலைமையேற்ற அருள்தந்தை ஃபெல்மர், RVA-வின் தலைமை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். அவருடன் RVA நிகழ்ச்சிப் பணிப்பாளரும், ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) சமூகத் தகவல்தொடர்பு அலுவலகத்தின் செயலருமான அருள்தந்தை ஜான் மி ஷென், மற்றும் இந்திய ஆயர் பேரவையின் சமூகத் தகவல்தொடர்பு அலுவலகத்தின் செயலரான அருள்தந்தை சிரில் விக்டர் ஜோசப் ஆகியோர் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர்.
தமது மறையுரையில், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அண்மையில் நடைபெற்ற FABC பொதுக்கூட்டத்தை அருள்தந்தை ஃபெல்மர் நினைவுகூர்ந்தார். அக்கூட்டத்தில் “பாலம்” மற்றும் “பாலம் அமைப்பவர்கள்” என்ற உருவகங்கள், ஆசியாவில் திருஅவையின் மறைப்பணியை வெளிப்படுத்தும் முக்கியமான சொற்களாக முன்வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஆசியா, மொழி, கலாச்சாரம், வரலாறு, அரசியல் சூழல்கள், சமய மரபுகள் மற்றும் திருஅவை வாழ்வின் பல்வேறு அனுபவங்கள் ஆகியவற்றில் வேறுபாடுகளைக் கொண்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், இந்த வேறுபாடுகள் கிறிஸ்துவில் ஒரே சமூகமாக ஒன்றிணைவதற்குத் தடையாக இல்லை என்றார்.
“நாம் கிறிஸ்துவுக்குரியவர்கள். நாம் ஒருவருக்கொருவர் உரியவர்கள். நாம் ஒரே மனிதகுலத்தைச் சேர்ந்தவர்கள்” என்று அருள்தந்தை ஃபெல்மர் கூறினார். இதனை டிஜிட்டல் மறைப்பணியாளர்களின் அழைத்தலோடும் அவர் இணைத்துப் பேசினார்.
திருஅவை நேரடியாக உடல்ரீதியாகச் சென்றடைய முடியாத இடங்களுக்குச் செல்லும் பாலங்களாக டிஜிட்டல் தளங்கள் மாற முடியும் என்று அவர் தெரிவித்தார். ஒரு சமூக ஊடகப் பதிவு, நேரலை நிகழ்ச்சி அல்லது டிஜிட்டல் கதை ஆகியவை, மக்களுக்கும் நற்செய்திக்கும் இடையே சந்திப்பை உருவாக்கும் ஒரு பாலமாக அமையக்கூடும் என்றார்.
“ஒருவேளை, உங்கள் பதிவு வழியாகத்தான் ஒருவர் கிறிஸ்துவைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறக்கூடும்” என்று அவர் கூறினார்.
மேலும், புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட வாசகங்களையும் அருள்தந்தை ஃபெல்மர் எடுத்துக்கட்டினார். தொடக்கக் கிறிஸ்தவ சமூகத்தில் எதிர்கொள்ளப்பட்ட ஒழுக்கம், உறவுகள், கலாச்சாரம், சமய நடைமுறைகள், உணவு மற்றும் மறைப்பணி தொடர்பான நடைமுறைச் சவால்கள் குறித்து அத்திருமுகம் எடுத்துரைப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
அவர்களிடையே வேறுபாடுகளும் கருத்து வேறுபாடுகளும் இருந்தபோதிலும், புனித பவுல் அந்தச் சமூகத்தை மீண்டும் மீண்டும் அதன் அடிப்படை அடையாளமான கிறிஸ்துவுக்குரியவர்கள் மற்றும் ஒருவருக்கொருவர் உரியவர்கள் என்ற உண்மைக்குத் திரும்ப அழைத்தார் என்று அவர் கூறினார்.
இதே கொள்கை இன்றைய டிஜிட்டல் மறைப்பணிக்கும் தேவைப்படுகிறது என்று அருள்தந்தை ஃபெல்மர் தெரிவித்தார். டிஜிட்டல் தகவல்தொடர்பாளர்களின் பணி வெறுமனே அறிவு அல்லது மக்களின் கவனத்தை ஈர்க்கும் விருப்பத்தால் வழிநடத்தப்படாமல், அன்பாலும் கிறிஸ்தவ ஒன்றிப்பு உணர்வாலும் வழிநடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தமது உரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட பிலிப்பீன் சைகையை மீண்டும் நினைவுகூர்ந்த அவர், டிஜிட்டல் மறைப்பணியாளர்களின் பதிவுகள் தங்களைப் பின்தொடர்பவர்கள், சந்தாதாரர்கள் மற்றும் தங்களது பதிவுகளை அமைதியாகக் கவனிப்பவர்கள் ஆகியோரை எதை நோக்கிச் சுட்டிக்காட்டுகின்றன என்ற கேள்வியை முன்வைத்தார்.
“நாம் நம்மை மட்டுமே நோக்கிச் சுட்டிக்காட்டினால், நாம் செல்வாக்காளர்களாகவே இருப்போம். ஆனால், நமது வாழ்க்கை, நமது கதைகள், நமது படைப்பாற்றல் மற்றும் நமது டிஜிட்டல் தளங்கள் மக்களை இயேசுவை நோக்கிச் சுட்டிக்காட்டினால், நாம் சாட்சிகளாக மாறுகிறோம்” என்று அவர் கூறினார்.
ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் தங்களது தேசிய உடைகளை அணிந்து தொடக்கத் திருவழிபாட்டில் கலந்துகொண்டனர். இது பேரவையில் பிரதிபலிக்கும் ஆசியாவின் கலாச்சாரப் பன்மைத்துவத்தை வெளிப்படுத்தும் காட்சியாக அமைந்தது.
பங்கேற்பாளர்களை வரவேற்ற அருள்தந்தை மி ஷென், FABC சமூகத் தகவல்தொடர்பு அலுவலகமும் RVA-வும் இக்கூட்டத்தை நடத்துவதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். மேலும், டிஜிட்டல் மறைப்பணியாளர்கள் என்ற தங்களது அழைத்தலைப் பற்றி சிந்திக்குமாறு பங்கேற்பாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
திருத்தந்தை ஆறாம் பவுல், திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் மற்றும் அன்னை தெரசா ஆகியோர் RVA வளாகத்திற்கு வருகை தந்து, தங்களது வாழ்க்கை மற்றும் சாட்சியின் வழியாக மக்களைப் பாதித்ததை அருள்தந்தை மி ஷென் நினைவுகூர்ந்தார். அவர்களின் முன்மாதிரியானது இன்றைய டிஜிட்டல் செல்வாக்காளர்களுக்கு ஒரு சவாலை முன்வைக்கிறது என்றும், செல்வாக்கைத் தாண்டி நற்செய்தியின் உண்மையான சாட்சிகளாக மாறுவதற்கு அழைப்பு விடுக்கிறது என்றும் அவர் கூறினார்.
ஆசியாவின் முதல் கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர் பேரவை செப்டம்பர் 13ஆம் தேதி வரை RVA வளாகத்தில் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆசியாவில் திருஅவை மேலும் ஒன்றிப்புடனும் மறைப்பணி உணர்வுடனும் செயல்படுவதற்கு டிஜிட்டல் தகவல்தொடர்பாளர்களின் பங்கு குறித்து இப்பேரவை கவனம் செலுத்துகிறது.
