வனவிலங்குகளின் துயரங்களை உணர்த்திய கத்தோலிக்கக் கலைஞரின் படைப்புக் கலை நிகழ்வு | Veritas Tamil
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலம் ஷா ஆலம் பகுதியில் உள்ள இறை இரக்கத்தின் ஆலயத்தில், அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற்ற சிந்தனைசார் கலை நிகழ்வின் வழியாக, விலங்குகள் எதிர்கொள்ளும் துன்பங்களையும் படைப்புலகைப் பாதுகாப்பதில் மனிதர்களுக்குள்ள பொறுப்பையும் குறித்து கத்தோலிக்க வனவிலங்கு பாதுகாப்புக் கலைஞரும் விலங்கு உரிமைச் செயல்பாட்டாளருமான கிறிஸ்டின் தாஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.
‘படைப்பைப் பராமரிக்கும்’ மாதத்தின் நிறைவு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, பங்குத்தந்தை அருள்பணி ஜார்ஜ் ஹாரிசன் அவர்களின் தலைமையில், ஆலயத்தின் இறைவேண்டல் குழுவும் கிறிஸ்டின் தாஸ் அவர்களும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்தனர். முதியவர்கள் முதல் சிறுவர்கள் வரை ஏறத்தாழ 20 பேர் இதில் பங்கேற்றனர். இறைவேண்டல், கதை சொல்லுதல் மற்றும் சிந்தனைசார் கலைச் செயல்பாடுகள் வழியாகப் படைப்பைப் பாதுகாப்பது குறித்து அவர்கள் சிந்தித்தனர். இந்நிகழ்வின் கருப்பொருள், “நமது யானைகள் யானைகளாகவே வாழட்டும்” என்பதாகும்.
ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள தென்னோஜி உயிரியல் பூங்காவிற்கு அனுப்பப்பட்ட மலேசிய யானைகளான தாரா, அமோய், கெலாட் ஆகிய மூன்றின் நிலை குறித்து இந்நிகழ்வில் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது. சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் அவை எதிர்கொள்ளும் அனுபவங்களையும், வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் மனிதர்களுக்குள்ள பொறுப்பையும் குறித்து கிறிஸ்டின் தாஸ் பங்கேற்பாளர்களைச் சிந்திக்க அழைத்தார்.
கலை என்பது அழகை வெளிப்படுத்தும் ஊடகம் மட்டுமல்ல; அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் வழிமுறையும் ஆகும் என்று அவர் குறிப்பிட்டார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வரும் யானைகள் விற்பனை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளையும் சுட்டிக்காட்டிய அவர், வனவிலங்குகளின் நலனைப் பாதுகாக்கவும் ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டுவரவும் கலை தங்களின் எதிர்ப்புக் கருவியாக விளங்குவதாகத் தெரிவித்தார்.
இந்நிகழ்வு பல பங்கேற்பாளர்களுக்கு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. யானைகளின் நிலை குறித்துப் பலருக்கும் இதற்கு முன்பு போதிய தகவல்கள் தெரியவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
வனவிலங்குகளும் அச்சம், தனிமை, துன்பம் ஆகியவற்றை அனுபவிக்கின்றன என்பதை தாரா, அமோய், கெலாட் ஆகிய யானைகளின் கதை உணர்த்துவதாக கேத்தரின் ஆக்னஸ் கூறினார். வனவிலங்குகளின் துயரங்களைப் பற்றி மேலும் பலரிடம் எடுத்துரைக்கப் போவதாக ஆனி சான் தெரிவித்தார். கிறிஸ்டின் தாஸ் அவர்கள் தமது அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டது தங்களுக்கு ஊக்கமளித்ததாக தொன் போஸ்கோ குறிப்பிட்டார்.
சிறுவர்களும் முதியவர்களும் ஒன்றிணைந்து பங்கேற்ற இந்நிகழ்வு, படைப்பைப் பாதுகாப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பல்ல; அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டிய கடமை என்பதை வலியுறுத்தியது.
இறைவேண்டல், கதை சொல்லுதல், கலை மற்றும் சிந்தனை ஆகியவற்றின் வழியாக, அனைத்து உயிரினங்களின் மதிப்பையும் உணர்ந்து, அவற்றைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வைச் செயல்பாடுகளாக மாற்ற வேண்டும் என்ற அழைப்புடன் இந்நிகழ்வு நிறைவடைந்தது. படைப்பைப் பராமரிப்பது ஒரு குறிப்பிட்ட மாதத்துடன் முடிவடையும் பணியல்ல; அது தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய பொறுப்பு என்பதையும் இந்நிகழ்வு நினைவூட்டியது.
