தவறுவது மனித இயல்பு; மன்னிப்பது தெய்வீகப் பண்பு! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
5 நவம்பர் 2026
பிலிப்பியர் 3: 3-8
லூக்கா 15: 1-10
தவறுவது மனித இயல்பு; மன்னிப்பது தெய்வீகப் பண்பு!
முதல் வாசகம்.
பவுல் அடிகள் பிலிப்பியருக்குத் தொடர்ந்து எழுதும்போது, இப்பகுதியில், உண்மையான இறைமக்கள் தங்கள் வெளிப்புறச் சடங்குகள் அல்லது மனித சாதனைகளை நம்பாமல், கடவுளின் ஆவியினால் ஆராதனை செய்து, இயேசு கிறிஸ்துவைப் பற்றிப் பெருமைப்படுகிறவர்கள் என்று பவுல் விளக்குகிறார்.
பவுல் அடிகள் தன்னுடைய முந்தையக் குடும்பப் பின்னணி, யூத மத மரபுகள், சட்டத்தின்படி வாழ்ந்த வாழ்க்கை போன்றவற்றில் பெருமைப்படுவதற்கு பவுலுக்கு பல காரணங்கள் இருந்தன என்றும். இப்போது, அவை எதுவும் அவருக்கு மீட்பைப் பெற்றுத்தரவில்லை என்பதை அவர் உணர்ந்துள்ளதாகக் கூறுகிறார்.
நிறைவாக, இயேசு கிறிஸ்துவை அறிந்துகொள்வதே எல்லாவற்றையும் விட மேலான செல்வம் என்றும் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ள, உலகத்தின் பெருமைகளையும் தன்னுடைய சாதனைகளையும் அவர் இழப்பாகக் கருதினார் என்றும், இதன் மூலம், நம்முடைய நம்பிக்கை நமது திறமைகள், செல்வம் அல்லது சாதனைகளில் அல்ல, மாறாக இயேசு கிறிஸ்துவில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதையும், அவரை அறிந்து அவருக்காக வாழ்வதே நமது வாழ்க்கையின் மிகப்பெரிய நோக்கமாக இருக்க வேண்டும் என்பதையும் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்.
நற்செய்தி.
இன்று தரப்பட்டுள்ள நற்செய்தி வாசகத்தில், இயேசு வரி வசூலிப்பவர்களுடனும் பாவிகளுடனும் பழகி அவர்களுக்கு போதித்தபோது, பரிசேயர்களும் மறைநூல் றிஞர்களும் அவரைக் குறை கூறினார்கள். அவக்ளுக்கு உண்மை நிலையை எடுத்துரைக்க காணாமல் போன ஆட்டின் உவமையையும் காணாமல் போன வெள்ளிக்காசின் உவமையையும் இயேசு பயன்படுத்தி விவரிக்கிறார்.
நூறு ஆடுகளில் ஒன்று காணாமல் போனால், மேய்ப்பன் மற்ற ஆடுகளை விட்டுவிட்டு காணாமல் போன ஆட்டைத் தேடிச் சென்று கண்டுபிடித்தபோது அவரில் ஏற்பட்ட அளவற்ற மகிழ்ச்சி குறித்தும், ஒரு பெண் தனது பத்து வெள்ளிக்காசுகளில் ஒன்றைத் தொலைத்துவிட்டால், அதைத் தேடிக் கண்டுபிடிக்கும் வரை முயற்சி செய்வதையும், கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்று அகமகிழ்வதையும் விவரித்து போதிக்கிறார்.
இந்த இரு உவமைகளையும் மையப்படுத்தி, ‘மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்’ என்ற ஆணித்தரமான போதனையைப் பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞர் முன்வைக்கிறார் இயேசு.
சிந்தனைக்கு.
நற்செய்தியில் காணப்படும் உவமையில் இரு பொருள்கள் இயேசுவால் கையாளப்பட்டுள்ளன. ஒன்று காணாமற்பான ஆடு மற்றொன்று காணாமற்போன நாணயம். இரண்டும் உரியவரிடமிருந்து தொலைந்துபோனவை. தொலந்து ஒன்றுதான் என்றாலும் உரிமையாளர் அதனை ‘போனால் போகட்டும்’ என்று இருந்துவிடாமல் சிரமப்பட்டு தெடுகிறார். தொலைந்தவற்றில் அளவற்ற அக்கறைகொள்கிறார்.
இந்த உவமைகள் மூலம், வழிதவறிச் சென்ற ஒவ்வொரு மனிதனையும் கடவுள் மிகவும் அன்புடன் தேடுகிறார் என்பதை இயேசு நமக்குக் கற்பிக்கிறார். ஒரு பாவி மனந்திரும்பும்போது, விண்ணகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகிறது என்பதை இயேசு தெளிவுப்படுத்துகிறார். மனிதன் பாவத்தில் தொலைந்துபோனாலும் கடவுள் அவனைக் கைவிடுவதில்லை. அவனைத் தேடி மீட்பதே கடவுளின் நோக்கமாக உள்ளது. கடவுளின் இந்த நோக்கத்திற்காக தோற்றுவிக்கப்பட்டது திருஅவை.
உவமையில், காணாமற்போன நாணயமும் ஆடும் கடவுளின் பார்வையில் மதிப்புமிக்க மனிதனைக் குறிக்கிறது. கடவுளின் பார்வையில் ஒவ்வொரு மனிதரும் மதிப்புமிக்கவர். நாம் பார்ப்பதுபோல், கடவுள் மனிதரின் நிறத்தையோ, கல்வி தகுதியையோ, செல்வத்தையோ, வசதியான வாழ்க்கையையோ, தொழிலையோ வைத்து எடைபோடுவதில்லை. கடவுள் மனிதரிடையே ஒருபோதும் வேற்றுமை பாராட்டுவதில்லை.
இவ்வுலகத்தில் குளிர்காய திருஅவை தோற்றுவிக்கப்படவில்லை. அது, உலகத்தின் வசதிகளையும் சுகபோகங்களையும் அனுபவிப்பதற்காக அல்ல; மாறாக, இயேசு கிறிஸ்துவின் அன்பையும் நற்செய்தியையும் உலகிற்கு அறிவித்து, ஏழைகள், எளியவர்கள், துன்பப்படுவோர் மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்குத் தொண்டு செய்வதற்காகவும், இறை அன்பில் இருந்து விலகியோரை தேடிக்கண்டுபிடித்து மந்தையில் சோ்ப்பதையும் குறிக்கோளாகக் கொண்டது.
ஆகவே, அன்று இன்றும் திருஅவை பணியாளர்களான திருத்தந்தை முதல் ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருட்சோகதர, சகோதரிகள் மற்றும் கடைநிலை பொதுநிலையினர் அனைவரின் இன்றியமையாதப்பணி, பாவிகளை வெறுத்து ஒதுக்காமல் அன்புடன் ஏற்றுக்கொள்வதாகும். திருஅவை எனும் மந்தையில் இருந்து விலகியோரைத் தேடிச் சென்று அரவணைப்பதாகும். இவற்றோடு, சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களைத் தேடிச் செல்ல வேண்டும். ‘பிரிந்தது ஒரு குடும்பம் தானே, போனால் போகட்டும்’ என்றிருப்போர் இயேசுவின் சீடர்கள் அல்லது பணியாளர்கள் என்று பெருமைப்படுவதில் பொருளில்லை.
பவுல் அடிகள் முந்தைய வாழ்வை விட்டொழித்து மனமாறி ஆண்டவரைப் பற்றிக்கொண்டார். அவரது மனமாற்றத்தால் விளைந்த நன்மைகள் எண்ணத்தொலையா எண்ணிலடங்கா.
மேலும், திருஅவை (குடும்பங்கள், கிறிஸ்தவ சமூகங்கள், பங்குகள் ) என்றும் தீர்ப்பளிக்கும் இடமாக செயல்படாமல், இறை அன்பையும், கடவுளின் மீட்பையும் மன்னிப்பையும் வழங்கும் இறை சமூகமாக செயல்பட வேண்டும் என்பதை நினைவில் கொண்டு செயலாற்றுவோம்.
இறைவேண்டல்.
அன்பும் இரக்கமும் நிறைந்த ஆண்டவராகிய இயேசுவே, காணாமல் போனவர்களைத் தேடிச் செல்லும் நல்ல ஆயனாகிய உமது அன்பிற்காக நன்றி கூறுகிறேன். வழிதவறியவர்களைப் புறக்கணிக்காமல் அவர்களைத் தேடிச் சென்று அரவணைக்க எனக்கு நல்ல மனதைத் தாரும். ஆமென்.
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452
