வரலாற்று சின்னங்களாக தலைமுறைதோறும் வாழ.. | அருள்பணி. இம்மானுவேல் மரியான் | VeritasTamil

"நீ 18 வயது நிரம்பியவன் என்பது எனக்கு தெரியும். 'நீ இதைச் செய்' அல்லது 'இதைச் செய்யாதே' என்று சொல்வதற்கு எனக்கு உரிமையில்லை. ஆனால் ஒன்றைச் சொல்வதற்கு எனக்கு உரிமையுண்டு. ஓர் ஆசிரியர் என்பவருக்கென்று வரையறுக்கப்பட்டப் பண்பு (Character) உண்டு. அந்தப் பண்பு உன்னிடம் இல்லையென்றால் அல்லது வளர்க்கப்படவில்லையென்றால் நீ ஆசிரியராக இருக்க முடியாது. நீ உன்னுடைய விருப்பு வெறுப்புகளையெல்லாம் உன்னுடைய வாழ்வின் இலக்கிற்காக தியாகம் செய்ய வேண்டும். ஓர் ஆசிரியருக்குரிய பண்புகளை நீ உனதாக்கிக்கொள்ள முடியவில்லையென்றால், நீ இங்கிருந்து போகலாம்.

நீ ஒரு சாதாரண 18 வயது இளைஞனைப் போன்று கூட்டத்தில் ஒருவராக இருந்து மறைந்தும் விடலாம். அல்லது எல்லோரும் முன்மாதிரியாகக் கொண்டு உற்றுநோக்கக்கூடிய ஓர் எடுத்துக்காட்டான இளைஞனாக நீ வாழலாம். நீ இலக்கோடு வாழ நினைத்தால் உன்னுடைய விருப்பு-வெறுப்புகளைத் தியாகம் செய்தாக வேண்டும்."

-தன்னுடைய 19வது வயதில் புனே நகரில் கம்ப்யூட்டர் புரோகிராமிங் பயிற்சியாளராக T.T.ரங்கராஜன் பணியாற்றியபோது ஓர் ஆசிரியருடைய பண்புகளைத் தனதாக்கிக் கொள்ளாமல், ஒரு சாதாரண 19 வயது இளைஞனைப் போன்று தன் வகுப்பில் இருந்த பெனாட் பின்டோ என்ற மாணவியுடன் பழகிக் கொண்டிருந்ததைக் கண்ட அவருடைய மேலாளர் பீட்டர் கிறிஸ்டியன் கூறியவைதாம் மேற்கண்ட வார்த்தைகள்.

இந்தச் சிந்தனைகள்தான் T.T.ரங்கராஜன் வாழ்வின் பாதையை மாற்றியது. புதிய பிறப்பெடுத்து வாழ்வின் இலக்கு என்னவென்று கண்டு கொண்டார். இன்று 'மஹாத்ரேயா, ரா' என்னும் புதிய மனிதராக வாழ்வை முழுமையாக வாழும் கலையை 'இன்பினிதேயிசம்' இதழ் மூலமும், 'ஆல்மா மாத்தர்' என்னும் அமைப்பின் மூலமும் பலருக்கும் வாழும் கலையைக் கற்றுக்கொடுத்து வருகிறார்.

மாறி வரும் இக்காலத்தில் மனிதர்கள் தங்கள் வாழ்வின் இலக்கை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாம் எதற்காக இவ்வுலகில் படைக்கப்பட்டோமோ அல்லது அழைக்கப்பட்டோமோ அதற்கேற்றவாறு நாம் நம்மை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஒரு துறவி என்றால், ஓர் ஆசிரியர் என்றால், ஒரு மாணவர் என்றால், ஒரு பெற்றோர் என்றால் அவர்கள் அந்த வாழ்விற்கான பண்பு நலன்களைப் பெற்றாக வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வாழ்வு என்பது 'பிறந்தோம், இருந்தோம், இறந்தோம்' என்றாகிவிடும்.

ஒரு மாணவன் தன்னுடைய விருப்பு வெறுப்புகளை (டி.வி., சமூக வலைத்தளங்கள், பொழுது போக்குகள், சமூகக் கூடுகைகள், உல்லாசப் பயணங்கள், சோம்பேறியின் தூக்கம்....) தன்னுடைய இலக்குக்காகத் தியாகம் செய்கின்றபோது அவர் தன் வாழ்வை அர்த்தமுள்ளதாக்க முடியும், இலக்கை அடைய முடியும், வரலாற்றுச் சின்னமாக மாற முடியும்.

இறைவாக்கினர் எரேமியா மென்மையானவராகவும், ஆரோன் வழிவந்த குருவாக அரசனுக் காகப் பலி செலுத்தும் வாய்ப்பு பெற்றிருந்தவர். அவர் அப்படியே வாழ்ந்திருந்தார் என்றால் அவரை நாம் இன்று நினைவுகூறப் போவதில்லை. மாறாக அவரை ஓர் இறைவாக்கினராக கடவுள் தேர்ந்தெடுத்தபோது, அதற்கு ஏற்றவாறு தன்னையே உருவாக்கிக் கொண்டார். அவரின் அந்த இறைவாக்கினர் பணி மிகவும் கடுமையானதாகவும், எந்த அரசனுக்குப் பதிலாக பலி செலுத்த அழைக்கப்பட்டாரோ அந்த அரசனுக்கு எதிராக இறைவாக்கு உரைப்பவராகவும், தன்னுடைய குடும்பத்தால் ஒதுக்கப்படவும், தன்னால் மிகவும் அன்பு செய்யப்பட்ட பெண்ணை துறக்க வேண்டியதாகவும், சித்தரிக்க முடியாத அளவுக்குத் துன்பங்கள் நிறைந்ததாகவும் இருந்தபோதும், எரேமியா தன்னுடைய இலக்கை நோக்கிப் பயணித்தார். தன்னுடைய விருப்பு-வெறுப்புகளையெல்லாம் விட்டு விட்டு, இறைவாக்கினர் என்ற இலக்குக்காக அதற்கேற்ற பண்பு நலன்களை தன்னகத்தே உருவாக்கிக் கொண்டார். ஒருவேளை தன்னுடைய வாழ்வின் அர்த்தத்தை உணராமல் இருந்திருந்தார் என்றால், ஒரு சாதாரண ஆரோன் வழிவந்த குருவாக இருந்திருப்பார்.

புனித பவுல்கூட தான் சவுலாக இருந்தபோது இருந்தவையெல்லாம், தான் அழைக்கப்பட்ட பவுல் என்னும் நிலைக்கு உகந்ததல்ல என்பதை உணர்ந்து தன்னையே மாற்றிக்கொண்டார். வாழ்விற்கு அர்த்தம் கொடுத்தார். கிறிஸ்தவத்தை உலகுக்கு எடுத்துச் சென்றார். உலக மக்களின் தாயும், நம்முடைய அன்னையுமான மரியா தன்னுடைய வாழ்வில் இறைவனின் திட்டம், வாழ்வின் இலக்கு என்ன என்பதை உணர்ந்து தன்னையே அர்ப்பணித்தார். தன் வாழ்வின் வழியாக தன்னுடைய பிறப்பிற்கு அர்த்தம் கொடுத்தார். உலகிற்கெல்லாம் நலமளிக்கும் அன்னையாகத் திகழ்கின்றார்.

நாமும் நம்முடைய வாழ்விற்கு அர்த்தம் கொடுப்போம். அதற்காக நம்முடைய விருப்பு- வெறுப்புகளைத் தியாகம் செய்யத் தயாராவோம். வரலாற்றுச் சின்னங்களாக தலைமுறைதோறும் வாழ்வோம்.

-அருள்பணி. இம்மானுவேல் மரியான்

 

(இந்தப்பதிவு 'இருக்கிறவர் நாமே' என்ற கத்தோலிக்க மாத இதழிலிருந்து எடுக்கப்பட்டது.)