அன்பின் மொழியே அமைதிக்கான பாதை – இந்தோனேசிய அமைச்சர் அழைப்பு| FABC | Veritas Tamil
ஆசியாவில் ஏற்படும் மோதல்களுக்கு தீர்வாக "அன்பின் மொழியை" அனைத்து சமய சமூகங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மதம் பிரிவினையை உருவாக்கும் சக்தியாக அல்லாமல், ஒற்றுமையையும் அமைதியையும் வளர்க்கும் ஆற்றலாக இருக்க வேண்டும் என்றும் இந்தோனேசியாவின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் நசாருத்தீன் உமர் வலியுறுத்தினார்.
ஜூலை 21 அன்று ஜகார்த்தாவின் ஹோட்டல் முலியாவில் நடைபெற்ற ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12வது பேரவை தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், இந்தச் சந்திப்பு கத்தோலிக்க திருஅவையின் உள்கட்டமைப்பு நிகழ்வு மட்டுமல்ல என்றும், மாறாக ஆசியாவில் அமைதியை வளர்ப்பதற்கும், மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும், நீதியும் அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்தையும் உருவாக்குவதற்குமான கூட்டு அர்ப்பணிப்பு என்றும் குறிப்பிட்டார்.
"அமைதியை வளர்ப்பதற்கும், மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும், மேலும் அமைதியான, நீதிமிக்க, அனைவரையும் உள்ளடக்கிய ஆசியாவை உருவாக்குவதற்குமான நமது கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்தச் சந்திப்பு அமைகிறது," என்று அவர் ஆசியாவின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த கர்தினால்கள், ஆயர்கள், அருட்பணியாளர்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினரை வரவேற்று கூறினார்.
ஆசியா பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் சமயங்களின் செழுமையான இல்லமாக இருப்பது அதன் மிகப்பெரிய பலமாக இருந்தாலும், அதே நேரத்தில் அது ஒரு பெரிய பொறுப்பாகவும் இருப்பதாக அமைச்சர் நசாருத்தீன் தெரிவித்தார். ஆயுத மோதல்கள், சமூகப் பிளவுகள், சமயத் தீவிரவாதம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், காலநிலை மாற்றம், இடம்பெயர்வு மற்றும் செயற்கை நுண்ணறிவின் வேகமான வளர்ச்சி போன்ற சிக்கலான சவால்களை ஆசியா இன்று எதிர்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.இந்தச் சவால்களுக்கு அரசியல் அல்லது பொருளாதார தீர்வுகள் மட்டும் போதாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
"மோதல்களையும் கருத்து வேறுபாடுகளையும் மதத்தின் மொழியான அன்பின் மொழியால் தீர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன். அன்பு நமக்கு இரக்கம், பரிவு மற்றும் வெறுப்பின்றி வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை கற்பிக்கிறது," என்று அவர் கூறினார்.மதத் தலைவர்கள் தங்கள் சமயங்கள் எப்போதும் ஒற்றுமை, உரையாடல் மற்றும் நல்லிணக்கத்தின் ஊற்றாகத் திகழ்வதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு கொண்டவர்கள் என்றும் அவர் நினைவூட்டினார்.
பல்வேறு சமயங்களும் இனங்களும் அமைதியாக இணைந்து வாழும் நாடாக இந்தோனேசியாவை அவர் எடுத்துக்காட்டினார். 17,000-க்கும் மேற்பட்ட தீவுகள், நூற்றுக்கணக்கான இனக்குழுக்கள் மற்றும் பல்வேறு சமய மரபுகளைக் கொண்ட இந்தோனேசியா, அதன் பன்முகத்தன்மையை தேசிய வலிமையாக மாற்றியிருப்பதாக அவர் கூறினார்.
அந்த அர்ப்பணிப்பின் அடையாளமாக, மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் 2024ஆம் ஆண்டு கையெழுத்திட்ட இஸ்திக்லால் அறிவிப்பு மற்றும் ஜகார்த்தாவின் இஸ்திக்லால் பள்ளிவாசலையும் அன்னை மரியாவின் விண்ணேற்புப் பேராலயத்தையும் இணைக்கும் "நட்பின் சுரங்கப்பாதை" (Tunnel of Friendship) அமைக்கப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார்."சமய மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையை அமைதியுடன் கொண்டாடி, அதை அனைவருக்கும் பொதுவான வலிமையாக மாற்ற முடியும் என்பதை உலகிற்கு இந்தோனேசியா எடுத்துக்காட்ட விரும்புகிறது," என்று அவர் கூறினார்.
"ஒன்றிணைந்த பயண மனமாற்றத்திற்கு அழைக்கப்பட்டு, ஆசியாவில் பாலங்களாகவும் பாலம் அமைப்பவர்களாகவும் இருப்பதற்கான பணி" என்ற FABC பேரவையின் மையக்கருவை மேற்கோள்காட்டிய அமைச்சர், திருச்சபை வலியுறுத்தும் சினோடல் நடைமுறை, இந்தோனேசியாவின் பாரம்பரியமான முஸ்யாவரா (கலந்தாலோசித்து ஒருமித்த முடிவு எடுக்கும் முறை) மற்றும் கோட்டோங் ரோயோங் (பரஸ்பர ஒத்துழைப்பு) ஆகிய பண்புகளுடன் ஆழமான ஒற்றுமையைக் கொண்டுள்ளது என்றார். இவை அனைத்தும் உரையாடல், பங்கேற்பு மற்றும் பொதுநலனுக்கான ஒத்துழைப்பை ஊக்குவிப்பவையாகும் என்றும் அவர் விளக்கினார்.
இந்த பேரவை சமயங்களுக்கு இடையேயான உரையாடலை மேலும் ஆழப்படுத்தவும், மனிதாபிமான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், ஆசியா முழுவதும் அமைதியை உருவாக்கும் புதிய முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கவும் வேண்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
"ஜகார்த்தா புதிய அமைதி சிந்தனைகள் பிறக்கும் இடமாக அமையட்டும். இந்தச் சந்திப்பு சகோதரத்துவத்தின் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தட்டும். பன்முகத்தன்மை என்பது பிரிவினைக்கான காரணமல்ல; அது வலிமையின் ஆதாரம் என்பதை ஆசியா உலகிற்கு தொடர்ந்து எடுத்துக்காட்டட்டும்," என்று அவர் வாழ்த்தினார்.
