மதத்தால் பிரிக்கப்பட அல்ல, சகோதரத்துவதால் ஒன்று பட. | FABC | veritas Tamil

ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12வது நிறைவிறுதிப் பேரவை  ஜூலை 20 அன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் தொடங்கியுள்ள நிலையில், வங்கதேச கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவரும் டாக்கா பேராயர் பெஜாய் நைசிபோரஸ் டி'குரூஸ், OMI, ஆசியத் திருஅவை மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான தனது அர்ப்பணிப்பை மேலும் ஆழப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

"ஒன்றிணைந்த பயண மாற்றத்திற்கான அழைப்பும், ஆசியாவில் பாலங்களாகவும் பாலம் கட்டுவோராகவும் செயல்படும் திருப்பணியும்" என்ற பேரவையின் கருப்பொருளை முன்னிட்டு, ரேடியோ வேரித்தாஸ் ஆசியாவிற்கு வழங்கிய காணொளிச் செய்தியில் அவர் தனது கருத்துகளைப் பகிர்ந்தார்.ஆசியா பல்வேறு மதங்களும் கலாச்சாரங்களும் நிறைந்த கண்டமாக இருப்பதால், இந்தக் கருப்பொருள் மிகவும் பொருத்தமானது என்று அவர் குறிப்பிட்டார்.

"திருஅவை என்பது ஒன்றிப்பு, பங்கேற்பு மற்றும் திருப்பணியின் திருஅவையாக இருக்க அழைக்கப்பட்டுள்ளது. மற்றவர்களைக் கேட்டு, ஒன்றிணைந்து செயல்பட்டு, மதங்கள், கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களுக்கு இடையே பாலங்களை அமைக்க வேண்டும்," என்று பேராயர் கூறினார்.

வங்கதேசத்தில் சுமார் 90 சதவீத மக்கள் முஸ்லிம்களாகவும், கிறிஸ்தவர்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவும் உள்ளனர். இத்தகைய சூழலில், பாலம் கட்டுவோராக இருப்பது வெறும் திருப்பணி நோக்கமல்ல; அன்றாட வாழ்வின் அவசியம் என்றும் அவர் கூறினார்.

"வங்கதேசத்தின் சூழலில், பிற மதங்களை மதித்து உரையாடுவது பரஸ்பரப் புரிதல், நட்பு, ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்க இன்றியமையாததாகும்," என்றார். திருஅவையின் பிற மதங்களைப் பற்றிய பார்வை காலப்போக்கில் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சியடைந்துள்ளதாக பேராயர் விளக்கினார்.

பிற மதங்களில் உள்ள நன்மையையும், தூய ஆவியின் செயல்பாட்டையும் கண்டறிய வேண்டிய காலம் இது, என்றார்.மேலும், பிற மதங்கள் நமக்கு அந்நியமானவை அல்ல; அவற்றை நம் அயலாரின் மதங்களாகவே பார்க்க வேண்டும்,"என்று வலியுறுத்தினார்.

நற்செய்தியில் கூறப்படும் "அயலானை அன்பு செய்" என்ற இறை கட்டளையை நினைவுகூர்ந்த பேராயர், உண்மையான கிறிஸ்தவ சாட்சி என்பது பிறரின் நம்பிக்கையையும் மதிப்பதில்தான் வெளிப்படுகிறது என்றார். சகோதரத்துவம் என்ற கருத்து கிறிஸ்தவர்களுக்கு மிகவும் ஆழமான அர்த்தமுடையது. நம் அயலாரின் மதத்தை மதிக்காமல், அவரை உண்மையாக அன்பு செய்ய முடியாது,"என்று அவர் கூறினார்.

அங்கு பெரும்பாலான மாணவர்கள் பிற மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பள்ளிகள் மத வேறுபாடுகளைத் தாண்டிய நட்புறவையும், சிறு வயதிலிருந்தே பரஸ்பர மரியாதையையும் வளர்க்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

FABC – ஒன்றிடமிருந்து மற்றொன்று கற்றுக்கொள்ளும் வாய்ப்பு

FABC பொதுப்பேரவை குறித்து கருத்து தெரிவித்த அவர்,"FABC என்பது நாம் ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்றுக்கொள்ளும் சந்திப்பு. பல மதங்களும் கலாச்சாரங்களும் நிறைந்த ஆசியாவில், மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான நமது அர்ப்பணிப்பைப் புதுப்பித்து, உலகிற்கு சிறந்த முன்மாதிரிகளை உருவாக்க முடியும்," என்றார்.

ஜகார்த்தாவில் நடைபெறும் இந்தப் பேரவையைத் தாண்டியும், ஆசியாவின் சமயப் பன்மைத்துவ அனுபவம் உலகத் திருஅவைக்கும் உலக சமுதாயத்திற்கும் ஒரு அரிய பரிசாக அமைய வேண்டும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.

"ஒருநாள், அமைதியும் சகோதரத்துவமும் நிறைந்த இணைந்த வாழ்விற்கான ஒரு முன்மாதிரியை ஆசியா உலகிற்கு வழங்கும்," என்று பேராயர் பெஜாய் நைசிபோரஸ் டி'குரூஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

FABC-யின் 12வது பொதுப்பேரவை, ஆசியாவின் பல்வேறு சமூக, கலாச்சார மற்றும் சமயச் சூழல்களுக்கு ஏற்ப, ஒன்றிப்பு, பங்கேற்பு மற்றும் திருப்பணியை எவ்வாறு மேலும் வலுப்படுத்துவது என்பதை மையமாகக் கொண்டு சிந்தித்து வருகிறது.
 

Tamil Survey Popup Image