உலக மறைப்பணி நாள் நூற்றாண்டு விழா: ஏழு நாடுகளைச் சேர்ந்த 247 பேர் இணையவழிக் கருத்தரங்கில் பங்கேற்பு
உலக மறைப்பணி நாளின் நூற்றாண்டு விழாவை (1926–2026) முன்னிட்டு, அக்டோபர் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை, பன்னாட்டு இணையவழிக் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் ஏழு நாடுகளைச் சேர்ந்த ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், இறையியலாளர்கள் மற்றும் பொதுநிலையினர் என 247 பேர் பங்கேற்றனர்.
பாப்பிறை மறைப்பணிக் கழகங்கள் – இந்தியா, பாப்பிறை இறையியல் கழகம் – தமிழ் இறையியல் விருந்து, தமிழ்நாடு ஆயர் பேரவையின் நற்செய்தி அறிவிப்பு மற்றும் அருங்கொடைப் பணிக்குழு ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து இக்கருத்தரங்கை நடத்தின. திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் உலக மறைப்பணி நாளின் நூற்றாண்டு விழாவிற்காக வழங்கிய ‘கிறிஸ்துவில் ஒன்றாய், மறைப்பணியில் இணைந்து’ என்ற மையக்கருத்தின் அடிப்படையில் கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
நூறாண்டு மறைப்பணிப் பயணம்
கருத்தரங்கில் தலைமையுரையாற்றிய வேலூர் மறைமாவட்ட ஆயரும் இந்திய மறைப்பணிக் கழகங்களின் இயக்குநருமான ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள், 1926ஆம் ஆண்டு திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் அவர்களால் தொடங்கப்பட்ட உலக மறைப்பணி நாளின் வரலாற்றையும், அதன் நூற்றாண்டு விழாவின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
மேலும், நம்பிக்கைப் பரப்புதல், சிறார் மறைப்பணி, புனித பேதுரு திருத்தூதர் மற்றும் மறைப்பணி ஒன்றிப்பு ஆகிய நான்கு திருத்தூதுப் பணிச்சபைகளையும், திருஅவையின் மறைப்பணியை முன்னெடுத்துச் செல்லும் ‘நான்கு கரங்கள்’ என்று அவர் விளக்கினார்.
கிறிஸ்துவில் ஒன்றாய்
முதல் கருத்துரையை வழங்கிய பாப்பிறை இறையியல் கழகத்தின் உரையாடல் தொடர்பாளர், மறைப்பணி ஒன்றிப்பின் விவிலிய மற்றும் இறையியல் அடித்தளங்களை விளக்கினார். யோவான் நற்செய்தி 17ஆம் அதிகாரம், புனித பவுலின் ‘கிறிஸ்துவில்’ என்ற இறையியல் வெளிப்பாடு, ‘கொய்னோனியா’ எனப்படும் ஒன்றிப்பு மற்றும் அண்மைக்கால கூட்டொருங்கியக்கச் சிந்தனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மறைப்பணி ஒன்றிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
மறைப்பணியில் இணைந்து
இரண்டாவது கருத்துரையை வழங்கிய தமிழ்நாடு ஆயர் பேரவையின் நற்செய்தி அறிவிப்பு மற்றும் அருங்கொடைப் புதுப்பித்தல் பணிக்குழுச் செயலர் அருள்பணி ம. இருதயராஜ் அவர்கள், இந்தியாவிலும் ஆசியாவிலும் நற்செய்தி அறிவிப்புப் பணி எதிர்கொள்ளும் சவால்களையும் வாய்ப்புகளையும் எடுத்துரைத்தார்.
மறைப்பணியில் பொதுநிலையினரின் பங்கேற்பு, சமய உரையாடல், கூட்டுப் பொறுப்பு மற்றும் கிறிஸ்தவ வாழ்வுக்குச் சான்று பகர்தல் ஆகியவற்றின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
கருத்தரங்கின் நிறைவில் பங்கேற்பாளர்களின் கருத்துகளும் ஆலோசனைகளும் பகிர்ந்துகொள்ளப்பட்டன. இத்தகைய இறையியல் சிந்தனை மற்றும் மறைப்பணிப் பயிற்சி முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற விருப்பமும் வெளிப்படுத்தப்பட்டது.
அருள்திரு யேசு கருணாநிதி
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
