இளைய இதயங்களை ஈர்க்கும் கிறிஸ்துவின் அன்பு! | Veritas Tamil
கடவுளின் மகத்தான திட்டத்தில் தாங்களும் ஒரு அங்கம் என்பதால், தங்கள் வாழ்க்கை சிறந்தது மற்றும் அழகானது என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.
அக்டோபர் 24, சனிக்கிழமையன்று, இயேசு இளையோர் இயக்கத்தின் அனைத்துலகக் கருத்தரங்கில் பங்கேற்றவர்களைச் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, இந்தியாவின் கேரளாவில் தொடங்கப்பட்ட இவ்வியக்கம் 40 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், அதன் உறுப்பினர்களுடன் சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.
இளைஞர்கள் கிறிஸ்துவின் அன்பைக் கண்டறிந்து, திருஅவையின் வாழ்வில் ஆர்வத்துடன் பங்கேற்க உதவும் இயேசு இளையோர் இயக்கத்தின் பணிகளைத் திருத்தந்தை பாராட்டினார்.
திருஅவையில் உண்மையான புதுப்பித்தல் என்பது இயேசுவின் அன்பைத் தனிப்பட்ட முறையில் கண்டறிவதில் தொடங்குகிறது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, இயக்கத்தின் உறுப்பினர்கள் தங்களது மறைப்பணி ஆர்வத்தைத் தொடர்ந்து வளர்த்து, புதிய நாடுகளிலும் தங்கள் பணியை விரிவுபடுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக வாழும் பகுதிகளிலும் இவ்வியக்கம் பணியாற்றுவதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இளைஞர்கள் திருமண வாழ்வு, குருத்துவம் மற்றும் துறவற வாழ்வு ஆகியவற்றுக்கான தங்களது அழைப்பைக் கண்டறிய உதவுமாறு ஊக்குவித்தார்.
நற்கருணையில் பிரசன்னமாகியிருக்கும் இயேசுவின் மீதான அன்பு, நோய் மற்றும் துன்பங்களுக்கு மத்தியிலும் அஞ்னா ஜார்ஜ் அவர்களுக்கு உறுதியளித்ததை நினைவுகூர்ந்த திருத்தந்தை, இளைஞர்கள் தங்கள் வாழ்வு இறைத்திட்டத்தின் ஓர் அங்கம் என்பதை உணர வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இறுதியாக, பல்வேறு பண்பாடுகள், மொழிகள் மற்றும் சமூகப் பின்னணிகளைக் கொண்ட உறுப்பினர்கள் ஒற்றுமையைக் காத்து, வழிபாட்டு மரபுகளில் உள்ள வேறுபாடுகளைப் பொறுமையுடன் கையாளுமாறு கேட்டுக்கொண்டு திருத்தந்தை உரையை நிறைவு செய்தார்.இந்நிலையில், இயேசு இளையோர் இயக்கத்தின் திருத்தப்பட்ட சட்டங்களுக்கு பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வுக்கான திருப்பீடத் துறை அக்டோபர் 23ஆம் நாள் ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
