தாழ்மையும் இரக்கமும் கிறிஸ்தவ வாழ்வின் அடையாளங்கள்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 19 ஆம் வாரம் – செவ்வாய்
எசேக்கியேல் 2: 8- 3: 4
மத்தேயு 18: 1-5, 10-14
தாழ்மையும் இரக்கமும் கிறிஸ்தவ வாழ்வின் அடையாளங்கள்!
முதல் வாசகம்.
இந்த வாசகத்தில், இறைவன் எசேக்கியேலைத் தம்முடைய வார்த்தையை
இஸ்ரயேல் மக்களிடம் அறிவிக்குமாறு அழைக்கிறார். மக்கள்
கீழ்ப்படியாதவர்களாக இருந்தாலும், எசேக்கியேல் அவர்களைக் கண்டு
பயப்படாமல் இறைவனுடைய வார்த்தையைத் துணிவுடன் எடுத்துரைக்க
வேண்டியது அவசியமாகிறது.
இறைவன் எசேக்கியேலுக்கு ஒரு சுருளைக் கொடுக்கிறார். அதில்
புலம்பலும் துயரமும் வேதனையும் எழுதப்பட்டிருந்தன. அதை உண்டு,
தமது உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளும்படி இறைவன் கட்டளையிடுகிறார்.
எசேக்கியேல் அதை உண்டபோது, அது அவரது வாயில் தேனைப்போல்
இனிமையாக இருந்தது என் குறிப்பிடுகிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், இயேசுவின் சீடர்கள் விண்ணரசில் யார்
பெரியவர் என்று கேட்கிறார்கள். அதற்கு இயேசு, ஒரு சிறு குழந்தையை
எடுத்துக்காட்டாகக் காட்டி, குழந்தையைப் போல தாழ்மையுடன்
மாறாதவர்கள் விண்ணரசில் நுழைய முடியாது என்று கூறுகிறார்.
குழந்தையைப் போல தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில்
பெரியவர் என்கிறார். மேலும், சிறியவர்களில் ஒருவரையும் இகழக்கூடாது
என்று இயேசு எச்சரிக்கிறார். தொலைந்து போன ஓர் ஆட்டைக்
கண்டுபிடிக்க மேய்ப்பன் மற்ற தொண்ணூற்றொன்பது ஆடுகளையும்
விட்டுச் செல்வதைப் போல, ஒருவரும் அழிந்து போகாமல் அவரைத்
தேடிக் காப்பதே இறைவனின் விருப்பம் என்ற இயேசுவின்
அறிவுறுத்தலை மத்தேயு இப்படி பதிவுச் செய்துள்ளார்.
சிந்தனைக்கு.
இன்றைய இரு வாசகங்களையும் ஆழ்ந்து சிந்தித்தால், கடவுளின்
வார்த்தையை நாம் கேட்பது மட்டும் போதாது; அதை உள்ளத்தில்
ஏற்றுக்கொண்டு, வாழ்வில் செயல்படுத்த வேண்டும் என்பது
வலியுறுத்தப்படுவதோடு, கடவுளுடைய பார்வையில் சிறியவர்களும்
மிகவும் மதிப்புமிக்கவர்கள் என்பதை இயேசு நமக்கு நினைவூட்டுகிறார்.
எசேக்கியேல் இறைவாக்கினரிடம் கடவுள் ஒரு சுருளேட்டைக் கொடுத்து,
“நீ இதை உண்டு, பின்னர் சென்று இஸ்ரயேல் மக்களிடம் பேசு” என்று
கூறுகிறார். இஃது ஓர் அழகான அடையாளம். இறைவார்த்தை
வெறுமனே காதுகளில் விழுந்து வெளியேறுவதற்கல்ல. அது நமது
உள்ளத்தில் இறங்கி, நமது எண்ணங்களையும், சொற்களையும்,
செயல்களையும் மாற்ற வேண்டும்.
அன்றாட வாழ்வில், உணவை நாம் உண்ணும்போது அது நமது உடலின்
ஒரு பகுதியாகிறது. அதுபோலவே இறைவார்த்தை நமது உள்ளத்தின் ஒரு
பகுதியாக வேண்டும். எசேக்கியேல் முதலில் இறைவார்த்தையை
ஏற்றுக்கொள்கிறார்; பின்னர் அதை மக்களிடம் அறிவிக்கிறார். நாமும்
முதலில் இறைவார்த்தையால் ஆட்கொள்ளப்பட வேண்டும், பின்னர்
அதை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.
இன்று, நற்செய்தியில் சீடர்கள் மத்தியில் எழுந்த மற்றொரு
உள்ளப்போராட்டம் குறித்தும் வாசிக்கிறோம். “விண்ணரசில் மிகப்
பெரியவர் யார்?” என்று கேட்கிறார்கள். இது நமக்கும் மிகவும்
பொருத்தமான கேள்வி. உலகத்தின் பார்வையில் பெரியவர் என்றால்
அதிகாரம் உடையவர், பணம் உடையவர், பதவி உடையவர், புகழ்
பெற்றவர் என்று நாம் நினைக்கலாம். ஆனால் இயேசு ஒரு சிறு
குழந்தையை நடுவில் நிறுத்தி, குழந்தையைப் போல் தாழ்மையுடன்
மாறாவிட்டால் விண்ணரசில் நுழைய முடியாது என்று கூறுகிறார்.
இங்கே இயேசு குழந்தையின் தாழ்மை, நம்பிக்கை, சார்ந்திருத்தல்,
எளிமை ஆகிய பண்புகளை எடுத்துக்காட்டுகிறார். நாம் “எனக்கு
எல்லாம் தெரியும்; எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை” என்று
நினைப்பதை விட்டுவிட்டு, கடவுளிடம், “ஆண்டவரே, உம்மை
நம்புகிறேன்; என்னை வழிநடத்தும்” என்று மன்றாட கற்றுக்கொள்ள
வேண்டும்.
அடத்து, இயேசு “இந்தச் சிறியவர்களில் ஒருவரைக்கூட இகழாதீர்கள்”
என்று அறிவுறுத்துகிறார். ஆம், கடவுளுடைய பார்வையில் யாரும்
தேவையற்றவர்கள் அல்ல. குடும்பத்தில் சிறியவர், சமூகத்தில்
பின்தங்கியவர், பொருளாதாரத்தில் ஏழை, வயதில் முதியவர், அனைவரும்
கடவுளின் பிள்ளைகள்.
சில நேரங்களில் நாம் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கிறோம்;
ஆனால் நம்மைவிட பலவீனமானவர்களை அலட்சியப்படுத்துகிறோம்.
இயேசு இன்று நம்முடைய இந்த மனப்பான்மையை மாற்ற அழைக்கிறார்.
இயேசு காணாமல் போன ஒரு ஆட்டைப் பற்றி பேசுகிறார்.
நிறைவாக, தொண்ணூற்று ஒன்பது ஆடுகள் பாதுகாப்பாக இருந்தாலும்,
ஒன்றே ஒன்று காணாமல் போனால் நல்ல ஆயன் அந்த ஒன்றைத் தேடிச்
செல்கிறார். நாம் சில நேரங்களில், “அவர் திருந்தவே மாட்டார்”, “அவள்
எப்போதும் இப்படித்தான்”, “அவரை விட்டுவிடலாம்” என்று ஒருவரை நம்
மனதில் கைவிட்டு விடுகிறோம். இப்படியாக சிலரோடான உறவை
முறித்துக்கொள்கிறோம். யாரையும் அலட்சியப்படுத்தாமல், அவர்களை
அன்புடன் அணுகுவதே சிறந்த சீடத்துவம்.
இறைவேண்டல்.
அன்பு ஆண்டவரே, எசேக்கியேல் இறைவாக்கினரைப் போல,
உமது வார்த்தையை திறந்த இதயத்துடன் ஏற்றுக்கொண்டு,
அதன்படி வாழும் அருளை எமக்கு அருள்வீராக. ஆமென்
ஆர். கே. சாமி (மலேசியா). ஜெனிசிஸ்
விவிலியக் கல்வி மையம் +6
0122285452
