உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்போமா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

மு.வா: இச: 34: 1-12
ப.பா: திபா: 66: 1-3. 5,8. 16-17
நவ: மத்: 18: 15-20

நாம் வாழும் இந்த உலகத்தில் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் குறைந்து வருகின்றது. எங்கு பார்த்தாலும் பிரிவினைகளும் புரிந்து கொள்ளாமையும் மனக்கசப்பும் நிறைந்து காணப்படுகின்றது. இதற்கு அடிப்படைக் காரணம் உறவின் மேன்மையை சரியாக புரிந்து கொள்ளாததே ஆகும். பல பிரச்சினைகளுக்கு காரணம் மனது விட்டுப் பேசாமல் நமக்குள்ளே பிரச்சனைகளை வைத்திருப்பதுதான் . மனது விட்டு பேசும்போதுதான் அந்த இடத்தில் நல்ல உறவு இருக்கும்.

காதலித்து திருமணம் செய்தவர்கள் திருமணத்துக்கு முன்பாக மிகுந்த மகிழ்ச்சியோடு வாழுவர். ஆனால் திருமணத்துக்கு பின்பு பெரும்பாலானோர்  புரிதல் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் காதலிக்கும் போது மனது விட்டு பலமணிநேரம் பேசுவதுண்டு . ஆனால் திருமணத்தின் வழியாக கணவன் மனைவியாக மாறிய பிறகு மனது விட்டுப் பேசுவது குறைகிறது. எனவே பிரச்சனைகளும் புரிதலற்ற நிலையும் உருவாகின்றது.

இன்றைய நற்செய்தியின் வழியாக நம் ஆண்டவர் இயேசு உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்க அழைப்பு விடுக்கின்றார். நம் அன்றாட வாழ்க்கையில் உறவுச்சிக்கல் ஏற்பட்டால் அதை எவ்வாறு சரி செய்வது என்பதுபற்றி ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தி வழியாக விளக்கியுள்ளார். நமக்கு எதிராக ஒருவர் பாவம் செய்கின்ற பொழுது அவர்களைப் பகைக்காமல் தனியாக இருக்கும்பொழுது குற்றத்தை எடுத்துக்காட்ட இயேசு அறிவுறுத்துகிறார். இதற்கு காரணம் மனிதர்கள் அனைவருமே பலவீனமானவர்கள். கோபத்தில் தவறுகள் செய்பவர்கள். இருந்தபோதிலும் அவர்களை அந்த குறுகிய நேரத்தில் படுகின்ற கோபத்தை வைத்து அவர்களைப் பகையாளியாக பார்க்கக்கூடாது. அவர்களை மன்னிக்கும் மனநிலையோடு அவர்களுடைய குற்றத்தை மற்றவர்களுக்கு முன்னால் சுட்டிக்காட்டாமல் தனிமையாக இருக்கும்போது சுட்டிக்காட்ட வேண்டும் என இயேசு  அறிவுறுத்துகிறார். பல நேரங்களில் நமது அன்றாட வாழ்வில் பிரச்சனை வருவதற்கு காரணம் மற்ற நபர்களின் தவற்றை மற்றவர்களுக்கு முன்பாக சுட்டிக்காட்டுவதாகும்.

தவறே செய்திருந்தாலும் மற்றவர்கள் முன்பாக குற்றத்தை சுட்டிக்காட்டி அவரை அவமானப்படுத்துவது சரியல்ல. எனவே தான் ஆண்டவர் இயேசு தனிமையாக இருக்கும் பொழுது தவற்றைச் சுட்டிக் காட்ட அறிவுறுத்தினார். தனிமையாக இருக்கும் போது தவற்றைச் சுட்டிக்காட்டியும் கேட்கவில்லை என்றால் மட்டுமே இரண்டு அல்லது மூன்று சாட்சிகளை அழைத்துக்கொண்டு நல்லுறவு கொள்ள முயற்சி செய்ய வழிகாட்டியுள்ளார். இந்த அறிவுரை மூலம் உறவின் மேன்மைக்கு எந்த அளவுக்கு இயேசு முக்கியத்துவம் கொடுக்க அழைப்பு விடுக்கிறார் என்பது பற்றி நம்மால் எளிதாக புரிந்து கொள்ள முடிகின்றது.  

எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் பிறர் நமக்கு எதிராக குற்றம் செய்கின்ற பொழுது அவர்களை பகைக்காமல் மன்னிக்கக் கற்றுக் கொள்வோம். அவருடைய குற்றங்களை மற்றவர் முன் சுட்டி காட்டி தலைகுனிவுக்கு உள்ளாகாமல் அவர்களின் மாண்பை மதிக்கும் விதமாக தனிமையாக இருக்கும் பொழுது குற்றத்தை சுட்டிக் காட்ட முயற்சி  செய்வோம். அதேபோல நாம் குற்றம்  செய்கின்ற பொழுது, திறந்த மனநிலையோடு நம் ! குற்றத்தை ஏற்றுக் கொண்டு மனம் திருந்த அழைக்கப்படுகிறோம். அப்பொழுது பகை நிறைந்த சூழலிலும் உறவு மலரும். அந்த உண்மையான உறவில் தான் இறைவன் இருக்கின்றார். உறவே மனிதம். அந்த மனிதத்தில்  தான் உண்மையான புனிதம் இருக்கின்றது. உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்ல மனநிலையை வேண்டி தேவையான அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல் : 
வல்லமையுள்ள அன்பு ஆண்டவரே! எம்முடைய கோபம் ஆணவத்தை அகற்றி, உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Daily Program

Livesteam thumbnail