கிறிஸ்துவுக்குரிய பிள்ளைகள் நம் பிள்ளைகள் |

25 மே 2024  

பொதுக்காலம் 7ஆம் வாரம் -சனி

யாக்கோபு திருமுகம்  5: 13-20

மாற்கு 10: 13-16

முதல் வாசகம்.

இத்திருமுகத்தை எழுதிய புனித யோக்கோபு  நாம் அனைவரும் ஒருவர் ஒருவருக்காக இறைவேண்டல்  செய்யும் மக்களாக இருக்க வேண்டும் என்று  குறிப்பிடுகிறார்.  துன்புறும் வேளைகளில்  நாம் நம்பிக்கையோடு இறைவேண்டல் செய்வதுபோல.  இன்புறும் காலங்களில்  திருப்பாடல்கள் பாடி ஆண்டவரைப் போற்ற வேண்டும் என்கிறார்.

நம்மில் யாரேனும்  நோய்வாய்ப்பட்டிருக்கும்போது திருஅவையின்  மூப்பர்களை (அருள்பணியாளர்களை, ஆயர்களை)  அழைத்து வந்து, ஆண்டவரது பெயரால் அவர்மீது அவர்கள் எண்ணெய் பூசி  நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார் என்றும், அவருடைய பாவம் மன்னிக்கப்படும் என்றும் வலியுறுத்திக் கூறுகிறார்.

எலியா இறைவாக்கினர் இறைவேண்டலைப் போலவே  நம்முடைய இறைவேண்டலும்  (1 அர 17: 1, 18: 45) இறைவனால் கேட்கப்படும் என்கிறார். அடுத்து, நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும் என்றும் அறிவூட்டுகிறார். 

நிறைவாக,  நாம் நம்முடைய பாவங்களை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும்,  சமரசத்தை நாட வேண்டும் என்றும், கடவுளுடன் மட்டுமல்ல, மற்றவர்களுடன் சமரசம் செய்ய வேண்டும், அவர்களுடன் நம் நல்லிணக்க முயற்சிகளுக்காகவும் இறைவேண்டல் செய்வது இன்றியமையாதது என்றும் குறிப்பிடுகிறார்.  


நற்செய்தி.

நற்செய்தியில், சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இயேசுவிடம் கொணர்ந்தபோது,  சீடர்கள் குழந்தைகளை இயேசுவிடம் வரவிடாமல் தடுக்க முயன்றனர். அப்போது, சீடர்கள்  மேல் கோபம் கொள்கிறார்.  பிள்ளைகள் தம்மிடம் வரவிட  சீடர்களைப் பணிக்கிறார்.

அப்போது, இயேசு ஒரு குழந்தையை தம் சீடர்களுக்கு முன்னால் வைத்து, கடவுளின் ஆட்சி குழந்தைகளைப் போன்றவர்களுக்கு சொந்தமானது என்று குறிப்பிடுகிறார். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என உறுதியாகக் கூறினார்.
 

சிந்தனைக்கு.

இனைறய வாசகங்கள் நமக்கு   ஒரு சவாலாக உள்ளன என்றால் மிகையாகாது. நாம் மற்றவர்கள் மீது அக்கறை கொள்ள வேண்டும்.  அக்கறை என்பது முதலில் இறைவேண்டலை உட்படுத்தியதாகும். ஒருவர் ஒருவருக்காக இறைவேண்டல் செய்வது நமது தோழமைக்கு அவசியமாகும். இறைவேண்டல் என்பது கடவுளிடம் வார்த்தைகளை உயர்த்துவது மட்டுமல்ல, மற்றவர்களுக்காக நம் நேரத்தில் சிறிதேனும் செலவழிப்பதாகும். கடவுளுடனான நமது உறவைப் பற்றி எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கிறோமோ  அவ்வளவுக்கு  அதிகமாக நமது  உறவின் பொருட்டு, கடவுளை மற்றவர்களுக்குக்  கொண்டு வர முடியும், 
 
முதல் வாசகத்தில் புனித யாக்கோபு, நம் மத்தியில் நோயுற்றோருக்காக நாம் செய்ய வேண்டிய கடமைகள் குறித்து விரித்தார். முதலாவதாக, நாம் அவர்களுக்காக கடவுளிடம் மன்றாட வேண்டும். கடவுள் திருவுளமானால், நமது மன்றாட்டால் அவர் நலம் பெறுவார். அதோடு நின்றுவிடாமல், சற்று கடின நோயாக இருந்தால் அவருக்கு நோயிற் பூசுதல் அருளடையாளம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இது நமது கடமைகளில் ஒன்றாக உள்ளது.

எனவேதான் புனித யாக்கோபு, மூப்பர்களை அழையுங்கள், அவர்கள் வந்து, அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள் என்கிறார். ஆண்டவரது பெயரால் நோயுற்றவர் மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவது என்பது (மூப்பர்களின்) அருள்பொழிவுப் பெற்ற அருள்பணியாளர்கள் அல்லது ஆயர்களது பணி. பொதுநிலையினர் அவ்வாறு செய்வது கூடாது. இதை இன்றைய முதல் வாசகம் உறுதிப்படுத்துகிறது. 

தொடர்ச்சியாக, நற்செய்தியில், இயேசு தன்னிடம் கொண்டு வரப்பட்ட குழந்தைகளை ஆசீர்வதிக்க முயலும் தருவாயில் சீடர்கள் தடுக்க முயன்றார்கள். அவர்களது பார்வையில் இயேசுவுக்கு ஓய்வு தேவை எனக் கருதியிருக்கலாம். இயேசுவோ, நமது களைப்பை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், குழந்தைகளைச் சந்திக்க முனைகிறார்.   

ஒருவர் இறையாட்சிக்கு உட்படுவதற்கு இருக்கவேண்டிய முதன்மையான தகுதி கபடற்ற உள்ளமாகும். பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்லவர்கள் தானே.  எனவே கபடற்ற  உள்ளத்தோடும் உண்மையான அன்போடும்  இருக்கின்ற குழந்தைகளைச் சீடர்கள் தன்னிடம் வரவிடாமல் தடுத்தனால்தான் இயேசு அவர்கள் மேல்  கோபம் கொண்டார் என் மாற்கு குறிப்பிடுகாறர்.  

நம் குழந்தைகள்ஆண்டவருக்குள் வளரும் குழந்தையாக இருப்பதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்.  இதன் பொருட்டே, திருமுழக்குக்குப்பின், சிறு வயதிலேயே திருஅவை எட்டு அல்லது ஒன்பது வயது நிரம்பிய சிறுவர்களுக்குப் ‘புதுநன்மை’ அருளடையாளத்திற்கு ஏற்பாடு செய்கிறது.  சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டும், பிள்ளைகளோ அவரைச் சுவைக்க வேண்டும்.  

ஆகவே, நோயியுற்றோரையும்  சிறு பிள்ளைகளையும் இயேசுவிடம்  கொண்டு செல்வதில்  என்றும்  பொறுப்புடன் செயல்பட ஒவ்வொரு பெற்றோரையும் ஆண்டவர் அழைக்கிறார். கிறிஸ்தவப் பெற்றோர் இந்த அழைப்பில் அக்கறைகொள்ள வேண்டும். 


இறைவேண்டல்.


‘சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள’ என்றுரைத்த ஆண்டவரே, எங்கள் குடும்பதில் நீர் அருளிய குழந்தைச் செல்வங்களை நிறைவாக ஆசீர்வத்தித்துக் காத்தருள  உம்மை மன்றாடுகிறோம்.  ஆமென்
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Daily Program

Livesteam thumbnail