கம்யூனியோ மறைப்பணி தன்னார்வலர்களின் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு | Veritas Tamil
கம்யூனியோ மறைப்பணி தன்னார்வலர்களின் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு
கிறிஸ்துவில் தங்கள் இதயங்களைப் புதுப்பித்துக் கொண்டு, மறைப்பணிக்கான அர்ப்பணிப்பை ஆழப்படுத்தும் வகையில், Communio Missionary Volunteers அக்டோபர் 1 முதல் 4 வரை கொல்கத்தா நிதிகா டான் போஸ்கோவில் நான்கு நாள் தொடர் பயிற்சி நிகழ்வில் பங்கேற்றனர். “Hearts on Fire, Feet on the Move” – “எரியும் இதயம், நகரும் கால்கள்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் செபம், உருவாக்கம், மறைப்பணி சிந்தனை, சேவை, நட்புறவு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை முக்கிய இடம் பெற்றன.
Communio, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CCBI) முன்னெடுப்பாக, கிராமப்புற மற்றும் மறைப்பணி பகுதிகளில் பணியாற்றும் மறைமாவட்டங்களுக்கும் துறவற சபைகளுக்கும் ஆதரவளித்து வருகிறது. “ஒன்றையொன்று சார்ந்திருப்பதை ஒருமைப்பாடாக மாற்றுதல்” என்ற பார்வையுடன் மறைப்பணி சீடர்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
நிகழ்வின் தொடக்கத்தில் அருட்தந்தை நிர்மல் கோம்ஸ், SDB தலைமையில் ஒப்புரவு அருட்சாதனையும் திருப்பலியும் நடைபெற்றன. தொடர்ந்து கொல்கத்தா சலேசிய மாநிலத் தலைவர் அருட்தந்தை சுனில் கெர்கெட்டா, SDB, இளைஞர்களை இயேசுவில் வேரூன்றிய இதயத்துடன், திருஅவைக்கும் தேவையுள்ள மக்களுக்கும் துணிவுடன் பணியாற்ற அழைத்தார்.
CCBI துணைப் பொதுச் செயலரும் Communio இயக்குநருமான அருட்தந்தை ஸ்டீபன் அலத்தாரா, மறைப்பணி என்பது இயேசுவுடனான தனிப்பட்ட உறவிலிருந்து உருவாக வேண்டும் என்றும், தங்களின் முதல் அழைப்பின் தீயை இழக்காமல் அர்ப்பணிப்புடன் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அருட்தந்தை கிளாஸ்டன் கோன்சால்வ்ஸ் ஆர்வத்துடனும் அன்புடனும் பணியாற்றுவதன் மூலம் பிறரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த அழைப்பு விடுத்தார்.
நிகழ்வின் முக்கியமான பகுதியாக, ஆதரவற்றோர் மற்றும் பராமரிப்பு தேவைப்படுவோருக்கான Missionaries of Charity-யின் Prem Dan இல்லத்திற்கு தன்னார்வலர்கள் சென்றனர். அங்கு அவர்கள் சமூகத்தால் மறக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, வார்த்தைகளைக் காட்டிலும் உடனிருத்தல், இரக்கம், சேவை மற்றும் அன்பு ஆகியவையே உண்மையான மறைப்பணியின் வெளிப்பாடுகள் என்பதை அனுபவித்தனர்.
திருவிவிலியத்தை வாழ்வாக்கும் வகையில் பல்வேறு செயல்பாடுகளும் நடைபெற்றன. “Smile, Jesus Loves You”, இயேசு நம்மை அன்பு செய்கிறார் என்பதை நினைவூட்டியது. A முதல் Z வரை இயேசு நமக்கு யார்? என்ற சிந்தனைச் செயல்பாடும், “Let It Go to Grow in Values” என்ற விளக்கு செயல்பாடும், பயம் மற்றும் எதிர்மறை பழக்கங்களை விட்டுவிட்டு நற்செய்தி விழுமியங்களில் வளர அழைப்பு விடுத்தன.
பருயிபூர் மறைமாவட்ட ஆயர் மேதகு ஷியாமல் போஸ், இயேசுவுடன் தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ளவும், செபத்தில் அவருடன் மனம் திறந்து பேசவும் அழைத்தார். கொல்கத்தா பேராயர் மேதகு டாக்டர் எலியாஸ் பிராங்க், மறைப்பணி அழைப்பை அர்ப்பணிப்புடன் வாழவும், விளிம்புநிலை மக்களுடன் அன்பான உடனிருப்பின் வழியாக கிறிஸ்துவின் இரக்கத்தை உலகிற்கு வெளிப்படுத்தவும் ஊக்கமளித்தார்.
மேலும், நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது. குறிப்பாக கொல்கத்தா புனித தெரசாவின் கல்லறைக்குச் சென்ற தன்னார்வலர்கள், திருச்செபமாலை செபித்து, அர்ப்பணிப்பு மற்றும் மறு அர்ப்பணிப்பு நிகழ்வில் பங்கேற்று, இயேசுவுக்கும் திருஅவையின் மறைப்பணிக்கும் தங்கள் அர்ப்பணிப்பை புதுப்பித்தனர்.
நான்கு நாள் நிகழ்வின் நிறைவுத் திருப்பலியை கிருஷ்ணநகர் ஆயர் மேதகு நிர்மல் கோம்ஸ், SDB நிறைவேற்றினார். இறைவன் அளித்துள்ள திறமைகளை திருஅவையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தி, தங்கள் வாழ்வின் வழியாக நற்செய்தியை வெளிப்படுத்தும் மகிழ்ச்சியான Communio பணியாளர்களாக மாறுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்த நான்கு நாட்களும் வெறும் பயிற்சி நிகழ்வாக இல்லாமல், இதயங்கள் மீண்டும் பற்றியெழுந்த, நம்பிக்கை ஆழமடைந்த, நட்புறவு வலுப்பெற்ற, அர்ப்பணிப்பு புதுப்பிக்கப்பட்ட மறைப்பணி பயணமாக அமைந்தன. இயேசுவுக்காக எரியும் இதயத்துடனும், பணிக்காக நகரும் கால்களுடனும், தன்னார்வலர்கள் தங்கள் மறைமாவட்டங்களுக்குத் திரும்பினர்.
இறுதியில், இறைவனின் அருளுக்கும், அன்னை மரியாளின் பரிந்துரைக்கும், கொல்கத்தா புனித தெரசாவின் வழிகாட்டுதலுக்கும் நன்றி செலுத்திய தன்னார்வலர்கள், நம்பிக்கை, அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் ஒளியாக தாங்கள் அனுப்பப்படும் இடமெல்லாம் விளங்க, தூய ஆவியின் வல்லமையுடன் மறைப்பணிக்குப் புறப்பட்டனர்.
