முதல் அடிகளை எடுத்து வைக்கும் குழந்தையைப் போல ஒன்றிணைந்த பயணத்தில் நடக்க கற்றுக்கொள்ளும் திருஅவை- கர்தினால் டாக்லே | FABC | Veritas Tamil
முதல் அடிகளை எடுத்து வைக்கும் குழந்தையைப் போல ஒன்றிணைந்த பயணத்தில் நடக்க கற்றுக்கொள்ளும் திருஅவை- கர்தினால் டாக்லே
ஒன்றிணைந்த திருஅவையாக இணைந்து நடப்பது" என்பதன் உண்மையான பொருள் என்ன? கர்தினால் லூயிஸ் அந்தோனியோ டாக்லே அவர்களுக்குப் பதில், திருஅவை ஆவணங்களிலோ அல்லது மேய்ப்புப் பணித் திட்டங்களிலோ இல்லை; மாறாக, முதல் அடிகளை எடுத்து வைக்கக் கற்றுக்கொள்ளும் ஒரு குழந்தையின் எளிய அனுபவத்தில்தான் அது உள்ளது.
ஜூலை 22 அன்று, ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12வது நிறைவிறுதிப் பேரவையின் ஜெப மற்றும் தியான நாளில் நடைபெற்ற முதல் ஆன்மிக உரையில், ஜகார்த்தாவின் ஹோட்டல் முலியாவில் கூடியிருந்த ஆயர்கள் மற்றும் பிரதிநிதிகளை நோக்கி, திருஅவையின் இணைநடைப் பயணத்தின் அடிப்படை அர்த்தத்தை ஆழமாகச் சிந்திக்குமாறு அவர் அழைத்தார்.
"ஒன்றிணைந்த பயணம் என்பது இணைந்து நடப்பது என்று நாம் கூறுகிறோம். ஆனால், 'நடப்பது' என்ற அனுபவத்தை நாம் உண்மையில் ஆழமாக ஆராய்ந்திருக்கிறோமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்வியை மையமாகக் கொண்டு, இறையியலையும் அன்றாட மனித அனுபவத்தையும் இணைக்கும் சிந்தனையை அவர் பகிர்ந்தார்.குழந்தை நடக்கக் கற்றுக்கொள்வதைப் போல...
ஒரு குழந்தை முதல் அடியை எடுத்து வைப்பது தானாக நிகழ்வதல்ல. அதற்கு முன் அது தவழ வேண்டும், தசை வலிமையை வளர்த்துக்கொள்ள வேண்டும், சமநிலையைப் பெற வேண்டும், உடல் அசைவுகளை ஒருங்கிணைக்க வேண்டும், தன்னம்பிக்கையைப் பெற வேண்டும். அதைவிட முக்கியமாக, பெற்றோரின் ஊக்கமும், துணை நிற்கும் கரங்களும், விழுந்தாலும் அச்சமின்றி மீண்டும் எழுவதற்கான பாதுகாப்பான சூழலும் அவசியம்.
"நடப்பதற்கு திறமையும், சமநிலையும், ஒருங்கிணைப்பும், மீண்டும் எழும் ஆற்றலும் தேவை," என்று கர்தினால் டாக்லே குறிப்பிட்டார்.இதனைத் தொடர்ந்து, சினோடல் பயணத்தில் திருச்சபையும் தன்னைத்தானே சில கேள்விகள் கேட்க வேண்டும் என்றார்:
இணைந்து நடப்பதற்கு தேவையான ஆன்மீக வலிமை எது?
சமநிலை, நம்பிக்கை, பரஸ்பர ஆதரவு ஆகியவற்றை எவ்வாறு வளர்ப்பது?
மக்கள் இணைந்து நடப்பதைத் தடுக்கும் அச்சங்கள் என்ன?
இந்தக் கேள்விகள், ஆசியத் திருஅவைகளில் கேட்கும் மனப்பான்மை, பங்கேற்பு, மற்றும் கூட்டு பகுத்தறிதல் ஆகியவற்றை வளர்க்கும் பேரவையின் நோக்கத்துடன் ஆழமாக ஒலித்தன.
"நடக்க முடியாதவருடன் எப்படி நடப்பது?"
தனது 96 வயதுடைய பெற்றோரைப் பற்றிப் பகிர்ந்தபோது, அவரது சிந்தனை மிகவும் உருக்கமானதாக மாறியது.
அவரது தந்தை மனதளவில் தெளிவாக இருந்தாலும் நடக்க முடியவில்லை; தாயார் இன்னும் நடக்க முடிந்தாலும் பிறரின் உதவி தேவைப்படுகிறது. இதைப் பார்த்து, வயது முதிரும்போது உடனிருப்பதின் அர்த்தமும் மாறுகிறது என்பதை அவர் உணர்ந்ததாகச் சொன்னார்.
"நடக்க முடியாத ஒருவருடன் நீங்கள் எப்படி நடப்பீர்கள்?" என்று அவர் கேட்டார்.
அதற்கான அவரது எளிய பதில்:
"அவருடன் இருப்பீர்கள்."
"அவரது கையைப் பிடிப்பீர்கள்; அவரது காதில் மெதுவாகப் பேசுவீர்கள்; அவர் தனியாக இல்லை என்பதை உணர்த்துவீர்கள்."
கர்தினால் டாக்லேவின் பார்வையில், இதுவே சினோடாலிட்டியின் இதயம். இணைந்து நடப்பது என்பது ஒரே வேகத்தில் முன்னேறுவது மட்டுமல்ல; பின்னால் தங்கியவர்களுடனும், சோர்வடைந்தவர்களுடனும், இனி தனியாகச் செல்ல முடியாதவர்களுடனும் தொடர்ந்து இருப்பதாகும்.
திறமையை விட இரக்கம் முக்கியம். ஒரு சினோடல் திருஅவை தனது வெற்றியை செயல்திறன் அல்லது வேகமான முன்னேற்றம் மூலம் மட்டும் அளவிடக் கூடாது என்று அவர் எச்சரித்தார். மாறாக, பொறுமை, அக்கறை, இரக்கம் மற்றும் உடனிருக்கும் மனப்பான்மை ஆகியவற்றால் அடையாளம் காணப்படும் சமூகமாக அது இருக்க வேண்டும் என்றார்.
கைப்பேசியில் மூழ்கிய உலகம். இன்றைய மனிதர்கள் கைப்பேசிகளில் அதிகம் மூழ்கி, தங்களைச் சுற்றியிருப்பவர்களை கவனிக்காமல் வாழும் போக்கையும் கர்தினால் டாக்லே சுட்டிக்காட்டினார்.
இத்தகைய தனிமனித மனப்பான்மை, மற்றவர்களைக் கேட்பதற்கும், சந்திப்பதற்கும், அவர்களுக்காக தமது வேகத்தை மாற்றிக் கொள்ளவும் அழைக்கும் சினோடல் வாழ்வியலுக்கு முற்றிலும் எதிரானது என்றார்.அமைதியான தனிப்பட்ட ஜெபத்திற்காக பிரதிநிதிகள் சென்றபோது, தயார் செய்யப்பட்ட பதில்களை அல்ல, ஒரு சவாலையே கர்தினால் டாக்லே அவர்களிடம் விட்டுச் சென்றார்:
"திருஅவை இணைந்து நடப்பதைப் பற்றி பேசுவதற்கு முன், பொறுமையுடனும், நம்பிக்கையுடனும், 'யாரும் தனியாகப் பயணிப்பதில்லை' என்ற உறுதியுடனும் உண்மையாக இணைந்து நடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்."
