ஒரு பக்கம் வெள்ளம், ஒரு பக்கம் பஞ்சம் - ஆப்பிரிக்காவின் அவலநிலைக்குக் காரணம் என்ன? | Veritas Tamil


உலகின் இரண்டாவது பெரிய கண்டமான ஆப்பிரிக்காவில் மொத்தம் 54 நாடுகள் உண்டு. காலநிலை மாற்றத்தால் மிக அதிகமான பாதிப்புக்கு உள்ளாக இருக்கும் கண்டங்களில் ஆப்பிரிக்காவும் ஒன்று எனக் காலநிலை வல்லுநர்கள் ஏற்கெனவே கணித்திருக்கிறார்கள். வேறு சிலரோ, "இந்தப் பட்டியலுக்கெல்லாம் அவசியமில்லை, ஆப்பிரிக்காதான் மிக மோசமாகப் பாதிக்கப்பட இருக்கும் கண்டம்" என்று தெளிவாகவே அறிவிக்கிறார்கள். சூழல் அமைப்பையே வாழ்வாதாரத்துக்கு நம்பியிருக்கும் நிலை, பலவீனமான தாக்குப்பிடிக்கும் திறன், மோசமான நிர்வாகச் சூழல், நவீனமடையாத தொழில்முறைகள் ஆகியவை இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றன.

இது மட்டுமில்லாமல், உலகின் பிற பகுதிகளை விட, ஆப்பிரிக்க நிலப்பரப்பில் அதிவேகமாக வெப்பநிலை உயர்ந்துவருகிறது. இந்த நிலவியல் அம்சமும் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தன்மையை அதிகரிக்கிறது. வளங்களைச் சுரண்டக்கூடிய இடமாக மட்டுமே ஆப்பிரிக்காவைப் பார்க்கும் மேலை நாடுகள், இதுபோன்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்த எந்த விதமான முயற்சியும் எடுப்பதில்லை. சொல்லப்போனால் மேலை நாடுகளின் சுரண்டலும் பாதிப்பை அதிகரிக்கிறது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் (பிப்ரவரி 2023) தென்கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதியில், ஃப்ரெட்டி என்கிற ஒரு புயல் (Cyclone Freddy) உருவானது. இது பிப்ரவரி 21ம் தேதி மடகாஸ்கரில் கரையைக் கடந்தது. அதன்பிறகு அப்படியே கடலில் பயணித்த இந்தப் புயல், மொசாம்பிக் கால்வாயில் மீண்டும் வேகம்பெற்று தீவிர புயலாக மாறியது. பிப்ரவரி 24ம் தேதியன்று மொசாம்பிக்கில் ஒருமுறை கரையைக் கடந்தது. அதன்பிறகும் தொடர்ந்து பயணித்த ஃப்ரெட்டி, கடலில் வேகம் பெற்று அப்படியே திரும்பி மீண்டும் மொசாம்பிக்கை வந்தடைந்தது! மார்ச் 11ம் தேதி மீண்டும் ஒருமுறை மொசாம்பிக்கில் கரையைக் கடந்தது! கிட்டத்தட்ட 34 நாள்களாகப் புயலாக நீடித்து, 8000 கிலோமீட்டர் பயணித்த இந்த ஃப்ரெட்டியின் மொத்த ஆற்றல், வடக்கு அட்லாண்டிக் கடற்பகுதியில் ஒரு ஆண்டில் மொத்தமாக ஏற்படும் புயல்களின் மொத்த ஆற்றலுக்குச் சமமானது என்று கணித்திருக்கிறார்கள்.

வடகிழக்கு ஜிம்பாப்வே, மொசாம்பிக், ஜாம்பியா மற்றும் மலாவி ஆகிய பல நாடுகளை இந்தப் புயல் பாதித்திருக்கிறது. கடும் மழையாலும் வெள்ளத்தாலும் மொத்தம் 522 பேர் இதுவரை இறந்திருக்கிறார்கள். பூமியின் தெற்கு கோளத்தில் இதுவரை உருவான புயல்களிலேயே மிகவும் தீவிரமான இந்தப் புயல், மனித வரலாற்றிலேயே மிகவும் நீண்ட புயலாகவும் மாற வாய்ப்பிருக்கிறது.

இந்தப் புயலால் கடும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது மலாவி என்ற ஆப்பிரிக்க நாடு. ஃப்ரெட்டியால் இறந்த 522 பேரில் 438 பேர் மலாவியைச் சேர்ந்தவர்கள். லட்சக்கணக்கான மலாவி குடிமக்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்திருக்கிறார்கள்.

"இந்தப் புயலால் மலாவி நாட்டின் பாதி அளவு சேதமாகிவிட்டது!"
என்று தெரிவித்த அதிபர் லாசரஸ் சாக்வேரா, மலாவியில் 14 நாள்கள் துக்க காலத்தை அறிவித்திருக்கிறார்.
புயல் வருவதற்கு முன்பே மலாவியில் மிக மோசமான காலரா கொள்ளை நோய் பரவியிருந்து. புயலால் விளைந்த இடிபாடுகள், நீர்ப் பிரச்னைகளால் நோயின் பாதிப்பு அதிகரித்திருக்கிறது, அதனாலும் பல இழப்புகள் நேரிடலாம் என்றும் ஒரு பெரிய அச்சம் நிலவுகிறது. புயலுக்குப் பின்னான மீட்புப் பணிகள் இப்போது மலாவியில் நடந்துகொண்டிருக்கின்றன.
இன்னொருபுறம், ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா ஆகிய நாடுகளில் கடுமையான பஞ்சம் நிலவிக்கொண்டிருக்கிறது. 2020ம் ஆண்டிலிருந்தே இந்தப் பஞ்சம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அப்போதிலிருந்து இதுவரை 5 முறை பருவமழை பொய்த்திருக்கிறது என்றும், மழை இல்லாமல் போனதால் பஞ்சமும் வறட்சியும் ஏற்பட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதில் இன்னொரு பேரிடியாக, அடுத்து வரவிருக்கும் எல்-நினோவின் பாதிப்பால், ஆறாவது முறையும் பருவமழை பொய்க்கும் என்று கணித்திருக்கிறார்கள்.

இந்தப் பஞ்சத்தின் பாதிப்பு பற்றிய ஒரு கூட்டறிக்கையை சோமாலியாவின் மருத்துவத்துறை, யூனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் ஆகிய மூன்றும் இணைந்து சில நாள்களுக்கு முன்பு வெளியிட்டன. அதில், 2022ம் ஆண்டில் மட்டும், பஞ்சத்தாலும் வறட்சியாலும் சோமாலியாவில் 43,000 பேர் இறந்திருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஐந்து வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகள் எனவும், இவர்கள் பட்டினியால் இறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சத்தால் 11 லட்சம் கால்நடைகளும் இறந்திருக்கின்றன.

இந்த ஆண்டும் பஞ்சம் தொடர்கிறது என்பதாலும், எல்நினோவால் அது தீவிரமடையவும் வாய்ப்பு இருப்பதாலும், 2023 ஜூன் வரை இறப்பு விகிதம் எப்படி இருக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்திருக்கிறார்கள். அதன்படி, 2023 ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில், பஞ்சத்தால் மட்டும் சோமாலியாவில் 34,000 இறப்புகள் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, பஞ்சத்தால் ஒரு நாளைக்கு 188 பேர் இறக்கலாம் என்று வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள். சோமாலியாவின் மக்கள் மிக மிக மோசமான ஒரு பஞ்சத்தைச் சந்தித்துவருகிறார்கள்.
சோமாலியாவின் அதிகாரிகளும், மலாவியின் அதிகாரிகளும் உலகளாவிய அமைப்புகளிடம் நிவாரணத் தொகை வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி வெள்ளத்தால் தத்தளித்துக் கொண்டிருக்க, இன்னொரு பகுதியில் மூன்று ஆண்டுகளாக வறட்சி வாட்டிக்கொண்டிருக்கிறது. இவை இரண்டுமே காலநிலை மாற்றத்தின் இருவேறு வெளிப்பாடுகள்தான் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் கொண்ட பெரிய கண்டம் என்றாலும், உலகளாவிய உமிழ்வுகளில் 4 சதவிகித உமிழ்வுகளுக்கு மட்டுமே காரணமாக இருக்கும் ஆப்பிரிக்கா கடுமையான காலநிலை பாதிப்பைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. மேலே குறிப்பிடப்பட்ட வேறு சில அம்சங்களே இந்த மோசமான பாதிப்புக்குக் காரணம், இதில் எதுவுமே ஆப்பிரிக்காவின் நேரடித் தவறு இல்லை. சொல்லப்போனால் இன்றும் ஆப்பிரிக்கா மேலை நாடுகளால் சுரண்டப்பட்டுவருகிறது.

இவை எல்லாமே தெரிந்திருக்கும் மேலை நாடுகளோ, காலநிலையைக் கட்டுப்படுத்தும் முடிவுகளில் முனைப்புக் காட்டாமல், பாதிப்பு ஏற்படும்போது பெயருக்கு நிவாரண நிதியை அனுப்பிவிட்டு, "உங்களது தொழில்முறைகளைக் காலநிலை மாற்றத்தைத் தாங்கும்படி மாற்றிக்கொள்ளுங்கள்" என்று உச்சாணிக் கொம்பில் அமர்ந்தபடி பாடம் எடுத்துக்கொண்டிருக்கின்றன.

-அருள்பணி வி.ஜான்சன் 

(News source from vikatan,photos from ALJAZEERA News)

 

Add new comment

1 + 15 =