சிவராத்திரி:பக்தர்களிடம் 920 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு | VeritasTamil


வெள்ளியங்கிரி மலைப்பாதையில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவதை குறைக்க, பாட்டில்களுக்கு வைப்புத்தொகை பெற்று திரும்ப அளிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டதால் சிவாரத்திரியை முன்னிட்டு 2 நாட்களில் மட்டும் பக்தர்களிடம் இருந்து சுமார் 920 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, அகற்றப்பட்டுள்ளன.

கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட வெள்ளியங்கிரி மலைக்கு சிவராத்திரியின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். இவ்வாறு செல்லும் பலர் தாங்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிஸ்கெட், தின் பண்டங்கள் உள்ளிட்டவற்றின் கவர்களை அங்கேயே தூக்கி எறிந்துவிட்டு வந்தனர். இதனால், மலைப்பாதை முழுவதும் கழிவுகள் தேங்கி, அவற்றை அகற்றுவது வனத்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்து வந்தது.

எனவே, பக்தர்கள் மலையேறும்போது கொண்டுவரும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு வைப்புத்தொகை பெற்றுக்கொண்டு, கீழேவந்து பாட்டிலை திரும்ப அளித்தபிறகு அந்த தொகையை அளிக்கும் திட்டத்தை வெள்ளியங்கிரியில் செயல்படுத்த வேண்டும் என ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து, இத்திட்டத்தை கடந்த 17-ம் தேதி முதல் வனத்துறையினர் அமல்படுத்தினர். இதன்படி, மலை ஏறுவதற்கு முன் பக்தர்கள் எடுத்து வரும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தலா ரூ.20 வைப்புத் தொகையாக பெற்றுக்கொள்ளப்பட்டு, பணம் பெற்றதற்கு அடையாள மாக பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மலையேறி, இறங்கியபிறகு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பாட்டிலை அளித்துவிட்டு வைப்புத்தொகையை பக்தர்கள் திரும்ப பெற்றுக்கொண்டனர். இதன்மூலம் ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் பாட்டில்கள் மலையில் தேங்குவது தவிர்க்கப்பட்டு, அவை கீழே முறையாக சேகரிக்கப்பட்டு, மறுசூழற்சிக்கு நேற்று அனுப்பிவைக்கப்பட்டது.

28,200 ஸ்டிக்கர்கள்

இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமார் கூறும்போது, “8 வனச்சரகர்கள், 10 வனவர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், வனப் பணியாளர்கள், உள்ளூர் சூழல் காவலர்கள், வன உயிர், இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை, நேச்சர் கன்சர்வேஷன் சொசைட்டி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் என சுமார் 200 பேர் பக்தர்களை ஒழுங்குபடுத்தவும், பிளாஸ்டிக் பைகள், பாட்டில்களை சோதனை செய்யும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று வரை மொத்தம் 28,200 பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. இதில், 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பாட்டில்களை பத்திரமாக திரும்ப கொண்டுவந்து, ரூ.20-ஐ திரும்ப பெற்றுச்சென்றுள்ளனர். இன்னும் பலர் கீழே இறங்கிவந்தபிறகு இந்த சதவீதம் அதிகம் ஆகும். 2 நாட்களில் பக்தர்களிடம் கேரி பேக்குகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், மக்காத கழிவுகள் என சுமார் 920 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, மறுசுழற்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இவற்றை ‘ரீ கம்போஸ்’ மறுசுழற்சி நிறுவனத்தைச் சேர்ந்த சரண், பிரசாந்த் ஆகியோர் சேகரித்து மறுசுழற்சிக்கு உதவியுள்ளனர்” என்றார்.

(Sources from Hindu Tamil )

- அருள்பணி .வி. ஜான்சன்

Add new comment

8 + 10 =