பிறர் துன்பத்தில் உடனிருந்து பெரியவர் ஆவோமா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம், வாரம் 26 திங்கள்
I: யோபு:   1: 6-22
II: திபா: 17: 1. 2-3. 6-7
III: லூக்:  9: 46-50

தெருவிலே சிறுகுழந்தைகள் ஆனந்தமாய் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு வயதான மூதாட்டி அழுது கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தார். அதைக் கண்டு அச்சிறுவர்களில் ஒரு பையன் அந்த மூதாட்டியிடம் சென்று "ஏன் பாட்டி அழுகிறீர்கள் ?" என்று கேட்டான். அம்மூதாட்டி " நான் சொன்னால் உனக்குப் புரியாதடா? " என்றார். அப்பையனோ தன் மழலைக்குரலில் "ஆழாதீங்க பாட்டி. நான் பாத்துக்கிறேன் " என்று கூற அப்படியே அப்பையனை அணைத்து முத்தமிட்டார் அந்த மூதாட்டி.

இந்நிகழ்வின் மூலம் நாம் அறிவது என்ன? சிறுபையனாக இருந்தாலும் அம்மூதாட்டியின் கண்ணீரை சிறிதளவாவது குறைக்க முயன்ற அப்பையன் எவ்வளவு பெரியவனாய் திகழ்கிறான் என நம்மால் உணர முடிகிறதா?

இன்றைய நற்செய்தியில் சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என விவாதித்தகாக நற்செய்தி கூறுகிறது.எதற்காக அவர்கள் அவ்வாறு விவாதித்தார்கள் ? இயேசு தன் சாவை அவர்களிடம் முன்னறிவித்தார். தான் படப்போகும் துன்பங்களைக் குறித்து அவர் கூறியதால் இயேசுவுக்கு அடுத்ததாக  தலைமைப் பொறுப்பு வகிக்க தகுந்தவரைத் தேர்ந்தெடுக்கவே அவர்கள் தங்களுக்குள் விவாதித்தனர். ஆனால் ஒருவர் கூட அவருடைய துன்பத்தில் உடனிருக்க முன்வரவில்லை. அனைவரும் அங்கே சிறியவர்களாகிறார்கள்.

அடுத்தவருடைய இடத்தை அடைய எண்ணும் போதும், பிறருடைய செல்வாக்கைப் பெற எண்ணும் போதும் நாம் சிறியவர்களாகிறோம் என்பதை நாம் உணர வேண்டும். அருகிலே ஒருவர் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் வேளையில் என் வேலை நடந்தால் போதும் என எண்ணும் போது நாம் வயதிலும், படிப்பிலும், அனுபவித்திலும் உயர்ந்து பெரியவர்களாய் இருந்தாலும் மனதளவில் குறுகியவர்களாய், சிறியவர்களாய் ஆகிவிடுகிறோம். எனவே அன்புக்குரியவர்களே பிறர் துன்பத்திலே துணையிருந்து நம்மை பெரியவர்களாய் உயர்த்திக்கொள்ள முயலுவோம். பிறர் கண்ணீர் துடைக்கும் கைகளாக நாம் இருப்போம். இறைவன் நம்மை நிச்சயம் உயர்த்துவார்.

 இறைவேண்டல்
அன்பு இயேசுவே! பிறர் துன்பத்தை உம் துன்பமாகக் கருதினீரே! நாங்களும் பிறருடைய துன்ப துயர நேரங்களில் உடனிருக்க வரம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 3 =