அக்கறையின்மை | யேசு கருணா | Sunday Reflection


ஆண்டின் பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு

I. ஆமோஸ் 6:1, 4-7 II. 1 திமொத்தேயு 6:11-16 III. லூக்கா 16:19-31

இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் நாம் வாசிக்கும் வாசகங்கள் கடந்த வார வாசகங்களின் தொடர்ச்சியாக அமைகின்றன. கடந்த வாரம் செல்வத்தைக் கையாள்வது பற்றி வாசித்தோம். செல்வத்தால் வரும் மிகப்பெரிய ஆபத்தான அக்கறையின்மை பற்றி இந்த ஞாயிறு நம்மை எச்சரிக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். ஆமோ 6:1, 4-7) தன்னுடைய சமகாலத்து செல்வந்தர்களைத் தொடர்ந்து சாடுகின்றார் ஆமோஸ். தன்னுடைய இறைவாக்குப் பாடலை, 'ஐயோ!' என்று தொடங்குகின்றார் ஆமோஸ். 'ஐயோ!' என்பது புலம்பலையும், சாபத்தையும் குறிக்கும். 'இன்பத்தில் திளைத்திருப்போர்,' 'கவலையற்றிருப்போர்,' 'உயர்குடி மக்கள்,' 'பெருமைவாய்ந்தவர்கள்' என வௌ;வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும் அனைத்தும் அவருடைய சமகாலத்து மேட்டுக்குடி மக்களையே குறிக்கிறது. விருந்து என்னும் உருவகம் வழியாக அவர்கள் வாழ்ந்த ஆடம்பரமான வாழ்க்கையையும் மற்றவர்கள்மேல் அவர்கள் காட்டிய அக்கறையின்மையையும் சுட்டிக்காட்டுகின்றார் இறைவாக்கினர். அவர்கள் 'தந்தத்தாலான கட்டிலில் படுத்துக்கொண்டு, பஞ்சணைமீது சாய்ந்துகொண்டு, கிடையிலிருந்து வரும் ஆட்டுக்குட்டிகளையும் மந்தையிலிருந்து வரும் கொழுத்த கன்றுகளையும் உண்கின்றனர்.' தந்தம் வெகு அரிதான பொருள். பாலைவனத்தில் பஞ்சணையில் தூங்குவது என்றால் அறைகள் குளிரூட்டப்பட வேண்டும். ஆட்டுக்குட்டிகள் திருவிழா நேரங்களில் மட்டுமே உண்ணப்பட்டன. இவற்றை அதிகம் சாப்பிடுவது என்பது சாதாரண மக்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் செய்துவிடுவது போலாகும். கன்றுக்குட்டிகள் வளர்க்கப்பட்டு விவசாயத்திற்கும், போக்குவரத்திற்கும் பயன்பட்டன. அவற்றையும் உணவாக்குகின்றனர் இவர்கள். மேலும், கடவுளுக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட வேண்டிய கன்றுக்குட்டிகளை உண்பதன் வழியாகவும், கடவுளுக்கு மட்டுமே இசைக்கப்பட்ட பாடல்களை - தாவீது இசைத்தது போல - தங்களுக்கே இசைத்துக்கொள்வதன் வழியாகவும் அவர்கள் தங்களைக் கடவுளுக்கு இணையாக்கிக்கொள்கிறார்கள்.

விருந்து, இசை, திராட்சை இரசம், நறுமணத்தைலம் போன்ற உருவகங்களால் ஆமோஸ் செல்வந்தர்களின் மேட்டிமை வாழ்வைச் சுட்டிக்காட்டுவதோடு, இவை யாவும் இவர்களைச் சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்படுத்தின என்றும், இதற்காக இவர்களே முதலில் நாடுகடத்தப்பட்டு அந்நியப்படுத்தப்படுவார்கள் என்றும் எச்சரிக்கின்றார். மக்களுக்கும் கடவுளுக்கும் உரியதை இவர்கள் தங்களுடையதாக்கிக்கொண்டார்கள். இவ்வாறு மக்களையும் கடவுளையும் அவமானப்படுத்தினார்கள்.

ஆக, இஸ்ரயேலின் செல்வந்தர்களின் மேட்டிமை வாழ்வும், அதனால் அவர்கள் மற்றவர்கள்மேலும் கடவுள்மேலும் காட்டிய அக்கறையின்மையும் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஒருசேர அழிவைக் கொண்டுவருகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 திமொ 6:11-16), நம்பிக்கையில் தான் பெற்றெடுத்த அன்புப் பிள்ளையான திமொத்தேயுவிடம் செல்வம் பற்றியும் அது கொண்டுவரும் ஆபத்து பற்றியும் மனம் திறந்து, செல்வத்திலிருந்து தப்பி ஓடவும், இறைவனுக்கு உகந்த சில மதிப்பீடுகளை நாடித்தேடவும் அறிவுறுத்தின்றார் பவுல். இதற்கு முந்தைய பகுதியில் (1 திமொ 6:3-10) எபேசு திருச்சபையில் இருந்த சில மனிதர்களின் நெறிகேடான வாழ்க்கைமுறை பற்றியும், அவர்கள் செல்வத்தைச் சேகரிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றியும் எச்சரிக்கின்றார். 'பண ஆசையே அனைத்து தீமைகளுக்கும் ஆணிவேர். இதனால் பலர் நம்பிக்கையிலிருந்து நெறிபிறழ்ந்தனர்' என்று ஆணித்தரமாகச் சொல்கின்றார். அவர்களைப் பற்றிப் பேசி முடித்தவுடன், 'ஆனால் ... நீ இவற்றிலிருந்து தப்பி ஓடு!' என்று தன் அறிவுரையைத் தொடர்கின்றார். 'நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, அன்பு, மனவுறுதி, கனிவு' ஆகிய ஆறு மதிப்பீடுகளை திமொத்தேயு தனதாக்கிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றார். மேற்கானும் ஆறு மதிப்பீடுகளும் ஒருவரிடம் இருக்கும் அக்கறையின்மை அகற்றுவதற்கான மாத்திரைகள். தன்னலம், தன்மையம் என்னும் நம்முடைய மனிதஇயல்பியல் பண்புகள் நம்மை அறியாமலேயே நம்மேல் ஒரு செதிலை உருவாக்கி மற்றவர்களிடமிருந்து நம்மை அந்நியமாக்கிவிடுகின்றன. இம்மாத்திரைகளை நாம் உண்ணும்போது படிப்படியாக இச்செதில்களை நாம் உதிர்க்கின்றோம்.

மேலும், இம்மதிப்பீடுகள் வழியாகவே திமொத்தேயு நிலைவாழ்வைப் பற்றிக்கொள்ளவும், மற்றவர்களுக்கு நம்பிக்கை வாழ்வின் சாட்சியாகவும் திகழ முடியும். நீடித்த அர்ப்பணமும் நிலையாக அக்கறையுமே ஒரு நல்ல தலைவரை உருவாக்க முடியும். பேராசையும் தன்னலமும் இந்த அர்ப்பணத்தைக் குலைத்துவிடும். எனவேதான் பவுல் திமொத்தேயுவை, அக்கறையின்மை காலப்போக்கில் குழுமத்தையே அழித்துவிடும் என்று மறைமுகமாக எச்சரிக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 16:19-31) நமக்கு மிகவும் அறிமுகமான பகுதி. இதை ஒரு உருவகமாக பரிசேயர்களுக்குச் சொல்கின்றார் இயேசு. இரு கதைமாந்தர்கள். ஒருவர் செல்வந்தர். இவர் 'விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து தினமும் விருந்துண்கிறார்.' 'செந்நிற மெல்லிய ஆடை' பகட்டின் அடையாளம். 'செந்நிறம் கம்பளம்' ஆடம்பரமான வரவேற்பைக் குறிப்பது போல. ஆனால், இந்த நபருக்குப் பெயர் இல்லை. மற்றவர் இலாசர். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் - அதாவது, செல்வந்தரின் எச்சில் தட்டிலிருந்து கிடைப்பற்றைக் கொண்டு - பசியாறினார். நாய்கள் கூட வந்து நக்கும் அளவுக்குப் புண்கள் திறந்து கிடந்தன. இவ்வாறாக, இன்னும் அதிகமாக அவர் தீட்டுப்பட்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு விடயங்கள் பொதுவாக இருந்தன: (அ) இருவருமே யூதர்கள் அல்லது இஸ்ரயேல் மக்கள், (ஆ) இருவருமே ஆபிரகாமின் மகன்கள் அல்லது மக்கள். மோசேயின் சட்டப்படி (காண். இச 15:7-9) ஒவ்வொரு இஸ்ரயேலரும் தனக்கு அடுத்திருக்கும் இஸ்ரயேலரின்மேல் குறிப்பாக நலிவுற்றவர், வறியவர்மேல் அக்கறை கொண்டுவாழவும், அவர்களுக்கு உரியவற்றைச் செய்யவும் அழைக்கப்பட்டனர். தன் வாசலில் படுத்துக்கிடந்த இலாசர்மேல் காட்டிய அக்கறையின்மையால், கண்டுகொள்ளாத்தன்மையினால் மோசேயின் சட்டத்தை மீறியவராகின்றார் செல்வந்தர்.

இருவருமே இறக்கின்றனர். இறப்பு இவர்கள் வாழ்வைப் புரட்டிப் போடுகிறது. 'என் கடவுள் உதவி செய்கின்றார்' என்று பொருள்தரும் பெயர் கொண்ட இலாசர் ஆபிரகாமின் மடிக்குத் தூக்கிச் செல்லப்படுகின்றார். செல்வந்தரோ பாதாளத்தில் தனிமையில் வதைக்கப்படுகின்றார். அவர் இலாசர்மேல் காட்டிய அக்கறையின்மை அவருக்கு அழிவைக் கொண்டுவருகிறது.

ஆனால், இறந்தபின்னும் அச்செல்வந்தர் தன்னுடைய தவற்றை உணரவில்லை. செருக்கோடும் தன்னலத்தோடும் தொடர்ந்து முறையிடுகின்றார். இலாசரைத் தன்னுடைய பணியாளனாகவும் தூதனாகவும் ஆக்கிக்கொள்ள விரும்புகின்றார். தனக்குத் தண்ணீர் தருமாறு இலாசரைப் பணிக்கவம், தம் இல்லத்திற்குத் தூதனுப்பவும் ஆபிரகாமிடம் வேண்டுகின்றார். செல்வந்தரின் அக்கறையின்மை அவருக்கும் ஆபிரகாம்-இலாசருக்கும் இடையே பெரிய பிளவை ஏற்படுத்திவிடுகிறது - 'இங்கிருப்பவர் அங்கும் அங்கிருப்பவர் இங்கும் கடந்து வர இயலாமல் போய்விடுகிறது.'

இவ்வாறாக, அக்கறையின்மையின் விளைவு அழிவு என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன இன்றைய வாசகங்கள். முதல் வாசகத்தில் மேட்டுக்குடி செல்வந்தர்களின் வாழ்வு அவர்களுக்கும் ஒட்டுமொத்த இஸ்ரயேல் மக்களுக்கும் நாடுகடத்தலைக் கொண்டுவருகிறது. இரண்டாம் வாசகத்தில் செல்வம் ஒருவரை அர்ப்பணத்திலிருந்து தவறிவிழச் செய்கிறது. மூன்றாம் வாசகத்தில் அக்கறையின்மை செல்வந்தரை அழிவில் தள்ளுவதோடு பெரிய பிளவையும் சமூகத்தில் ஏற்படுத்திவிடுகிறது. இதற்கு மாறாக, அக்கறை காட்டும் ஒருவர், இன்றைய திருப்பாடல் (146) குறிப்பிடும் ஆண்டவர் போல, 'நீதியை நிலைநாட்டுகின்றார், பசித்திருப்போருக்கு உணவளிக்கின்றார், அநாதைப் பிள்ளைகளையும்  கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்.'

அழிவுதரும் அக்கறையின்மையை நாம் எப்படி கடப்பது? அல்லது மற்றவர்மேல் எப்படி அக்கறை காட்டுவது?

மற்றவர்கள்மேல் அக்கறைகாட்டுவதிலும் சிக்கல் இருக்கிறது. அடுத்தவர்கள் என்னிடம் முதலில் கேட்கட்டும் என்று சொல்லி சிலர் அக்கறை காட்ட மறுப்பர். அல்லது சிலர் மற்றவர்கள்மேல் அக்கறை காட்டியதால் மிகவும் இக்கட்டான சூழலில் சிக்கியிருக்கக் கூடும். இருந்தாலும் அக்கறையின்மையைவிட அக்கறை மேலானது.

நம்மிடம் பின்வரும் இரண்டு கேள்விகள் இருந்தால் நம்மால் மற்றவர்கள்மேல் அக்கறை காட்ட முடியாது:

அ. விதிப்படிதானே எல்லாம் நடக்கும்?

'நான் நன்றாக இருக்கிறேன் என்றால், நீ ஏழையாக இருக்கிறாய் என்றால் அது விதி' என்று நினைப்பவர்களும், 'நான் நன்றாக இருக்கிறேன் என்றால் உழைக்கிறேன். நீயும் உழைத்தால் நன்றாக இருப்பாய்' என்று நினைப்பவர்களும் மற்றவர்கள்மேல் அக்கறை காட்ட முடியாது. இன்றைய முதல் வாசகத்தில் நாம் கண்ட செல்வந்தர்கள் இத்தகைய மனநிலையைத்தான் கொண்டிருந்தனர். தாங்கள் செல்வராய் இருப்பதே கடவுளின் ஆசீர் என்றும், அந்த ஆசீரை அவர்கள் கொண்டாட வேண்டும் என்றும் நினைத்தார்கள். ஆக, தங்களுடைய வாழ்விற்குத் தேவையான அனைத்தையும் தாங்கள் செய்து கொள்வதை அவர்கள் இதன் அடிப்படையில் நியாயப்படுத்தினார்கள். ஆனால், இது சரியான மனநிலை அன்று. ஒருவேளை அம்பேத்கார் இப்படி நினைத்திருந்தால் தன்னுடைய மக்களின் உரிமைக்காக அவர் போராடியிருக்க முடியுமா?

ஆ. நான் யாருக்கும் தீமை செய்யவில்லையே?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் செல்வந்தர் யாருக்கும், குறிப்பாக இலாசருக்குத் தீமை செய்யவில்லை. தன்னுடைய உழைப்பில் தான் பெற்ற செல்வத்தைக் கொண்டு உண்டு மகிழ்ந்தார். யாருக்கும் அவர் தீமை செய்யவில்லை. இலாசரின் உழைப்பை உறிஞ்சவில்லை. இலாசரைத் தன் பார்வையிலிருந்து விரட்டியடிக்க வில்லை. ஆக, தீமை செய்யாமல் இருந்தால் மட்டும் போதுமா? இல்லை. நன்மை செய்யாமல் இருப்பதும் பாவம்தான். நான் யாருடைய வம்புக்கும் போவதில்லை, நான் நடுநாயகமானவன் என்று நினைப்பதெல்லாம் அடக்குபவருக்கு இடம் கொடுப்பதாக அமையும்.

மேலும், நமக்குத் தேவைகள் அன்றாடம் கூடிக்கொண்டே வருகின்றன. வழக்கமாக நமக்கு மேலிருப்பவர்களோடு நம்மையே ஒப்பிட்டுக்கொண்டே நம்மிடம் இல்லாதவை பற்றி நாம் புலம்புகின்றோம். இப்படிப்பட்ட புலம்பல் இருப்பவர்கள் ஒருபோதும் மற்றவர்கள்மேல் அக்கறைகாட்ட இயலாது. ஆனால், நமக்குக் கீழிருப்பவர்களோடு நம்மையே ஒப்பிடத் துணிந்தால் நம்மால் எளிதில் மற்றவர்கள்மேல் அக்கறைகாட்ட முடியும்.

இவ்விரண்டு கேள்விகளை விடுப்பவர்தாம் மற்றவர்கள்மேல் அக்கறை காட்ட முடியும். நேர்முகமான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், நான் எனக்கும் மற்றவருக்கும் இடையே இருக்கின்ற சார்புநிலையை உணர்ந்தால்தான் அக்கறைகாட்ட முடியும். 'கடவுளின் மனிதனாகிய நீ இவற்றிலிருந்து தப்பி ஓடு' என்று திமொத்தேயுவுக்குச் சொல்கின்ற பவுல், 'நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, அன்பு, மனவுறுதி, கனிவு' ஆகியவற்றை நாடித்தேடு என்கிறார். ஒன்றிலிருந்து நான் ஓடும்போது மற்றதை நான் நாட வேண்டும். எதையாவது பிடித்துக்கொண்டே இருந்தால்தான் வாழ முடியும். ஆக, நான் மற்றவர்களோடு தொடர்பில் இருக்கிறேன் என்றும், மற்றவரின் வயிறு வாடியிருக்கும்போது, என் தட்டு நிரம்பி வழிந்தால் நான் மற்றவருக்கு உரியதையும் உண்கிறேன் என்றும் உணர்ந்தால் என்னால் அடுத்தவர்மேல் அக்கறைகாட்ட முடியும்.

இறுதியாக, இன்று நான் மற்றவர்கள்மேல் அக்கறையோடு இருக்கின்றேனா? அல்லது அக்கறையற்று இருக்கின்றேனா? அக்கறையின்மையில் வாழ்கிறேன் என்றால், எனக்கும் மற்றவர்களுக்கும் இடையே வெள்ளிப்பூச்சு இருக்கிறது என்பதே உண்மை. இந்த வெள்ளிப்பூச்சு அதிகமாகிக்கொண்டே போனால் எனக்கும் அவருக்கும் - ஆண்டவருக்கும் - இடையே உள்ள பிளவும் அதிகமாகிக்கொண்டே போகும்.

அக்கறையின்மை என்னையும் பிறரையும் அழிக்கும் என்றால்,

நான் மற்றவர்கள்மேல் காட்டும் அக்கறை பிறரையும் என்னையும் வாழ வைக்கும்.

இவ்வாறாக, நான் காட்டும் அக்கறையே நான் அக்கரை சேர்வதற்கான படகும் துடுப்பும் ஆகும்!

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

Add new comment

14 + 0 =