உண்மையின் அவதாரங்களா நாம்? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம், வாரம் 25 வியாழன்  
I: சஉ:  1: 2-11
II: திபா:90: 3-4. 5-6. 12-13. 14, 17
III: லூக்:  9: 7-9

உண்மைக்கு என்றுமே தோல்வியில்லை. எவ்வளவு தான்  மறைக்கப்பட்டாலும்,  மறுக்கப்பட்டாலும், பொய்களால் பின்னுக்குத் தள்ளப்பட்டாலும் உண்மை அனைத்தையும் உடைத்தெறிந்து வெளிச்சத்திற்கு வந்துவிடும்.ஏனெனில் உண்மைக்கு அத்தகைய வல்லமையும் சக்தியும் உள்ளது. இதை நாம் அனைவரும் அறிந்திருந்தாலும் பல சமயங்களில் நாம் தப்பித்துக்கொள்வதாக எண்ணி பொய்களைப் பேசுகிறோம். ஆனால் உண்மை இல்லாத இடத்தில் தடுமாற்றம் நிச்சயம் இருக்கும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் உண்மையின் வெற்றியையும், உண்மையில்லாதவரின் தடுமாற்றத்தையும் நாம் மிகத் தெளிவாகக் காணலாம். 
இயேசுவின் போதனைகளையும், வல்ல செயல்களையும் கேள்விப்பட்ட ஏரோது இயேசு யார் என்ற தேடலில் ஈடுபடுகின்றான். சிலர் அவர் திருமுழுக்கு யோவானின் மறுபிறப்பு என்று கூறியதைக் கேட்ட ஏரோது கலங்கினான். ஏனெனில் தன்னைப் பற்றிய உண்மையை எடுத்துரைத்ததால் கோபமடைந்த ஏரோதியாளின் சூழ்ச்சியால் யோவான் கொல்லப்பட்டார். ஏரோதியாள் சூழ்ச்சி செய்ததை அறிந்திருந்தும் பிறர் முன் தன் பெயரைக் காப்பாற்ற ஏரோதியாளின் சூழ்ச்சிக்குத் துணைபோனார் ஏரோது. இதனால் உண்மை மறைக்கப்பட்டது என எண்ணினாலும், இயேசு யோவானின் மறுபிறப்பு என்பதைக் கேள்விப்பட்டதும் ஏரோதிடம் தடுமாற்றம் ஏற்பட்டது.

நாமும் பல வேளைகளில் பொய்களைச் சொல்லி உண்மையை மறைக்க முயலும் போது நம்முடைய முகத்தில் ஒருவித இறுக்கமும் படபடப்பும், வார்த்தையில் தெளிவின்மையும், அதிகப்படியான வியர்வையும் உண்டாவதை பல முறை உணர்ந்திருக்கிறோம் அல்லவா?. இதுதான் தடுமாற்றம். அது நமக்குள் பயத்தை ஏற்படுத்தும். 

இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு யோவான் உண்மையின் அவதாரமாய்த் திகழ்ந்தார் எனக் கூறினால் அது மிகையாகாது.  அவ்வுண்மை அவரை துணிந்து நிற்கச் செய்தது. அதுபோல இயேசுவும் " நானே வழியும் உண்மையும் வாழ்வும் " எனக் கூறி தன்னை உண்மையின் அவதாரமாகக் காட்டுகிறார். பிலாத்துவிடம் உண்மையை எடுத்துரைப்பதே என் பணி என்று கூறி தன்னுடைய துன்ப நேரத்திலும் உண்மையைக் கைவிடாத நிலையை நமக்கெல்லாம் எடுத்
துரைக்கிறார்.

நாம் இன்று சிந்திப்போம். இயேசுவைப் போல, யோவானைப் போல உண்மையின் மறுஅவதாரங்களாய் நாம் வாழப்போகிறோமா? அல்லது ஏரோதைப் போல உண்மையை மறைத்து தடுமாறப்போகிறோமா?  உண்மையைத் தேர்வு செய்வோம். துணிச்சலோடு வாழ முயற்சிப்போம். நம்மைச் சூழ்ந்தவர்கள் உண்மையின் அவதாரங்களாய் நம்மை உணரட்டும். 

 இறைவேண்டல்
இயேசுவே!  உண்மையின் உருவே!
நாங்களும் உம்மைப்போல உண்மையின் உருவாய்த் திகழ்ந்து துணிச்சலுடன் வாழ வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

5 + 2 =