உள்ளெண்ணத்தை சீர்தூக்கி பார்ப்பவர் ஆண்டவர்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம், வாரம் 25 செவ்வாய்
I: நீமொ: 21: 1-6, 10-13
II: திபா:119: 1,27. 30,34. 35,44 
III: லூக்: 8: 19-21

எண்ணம் போல் வாழ்க்கை என்பது பழமொழி. நம்முடைய எண்ணங்கள் எந்த அளவுக்கு உயர்வானதாக, தூய்மையானதாக, கனிவானதாக,  உண்மையானதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நம் வாழ்வும் உயர்வானதாக தூய்மையானதாக கனிவுடையதாக உண்மையானதாக எல்லாவற்றிற்கும் மேலாக இறைவன் விரும்பத்தக்கதாக அமையும். நம் எண்ணங்களே நம் செயலாக்கத்திற்கு உந்து சக்தியாக விளங்கும். நம்முடைய நற்செயல்களின் பின்னால் இருப்பது நம் நல்லெண்ணங்கள். நம் தீச்செயலின் பின்னால் இருப்பது தீய எண்ணங்கள். சில சமயம் நம் செயல்கள் நல்லவை போல தோன்றினாலும் நம் எண்ணங்கள் தவறானால் அச்செயல்கள் தகுந்த பலனளிக்காது. ஏனென்றால் நம் எண்ணங்கள் பிறருக்கு மறைவாய் இருக்கலாம். ஆனால் கடவுளுக்கு மறைவாய் இருக்காது. இந்த உண்மையை உணர்ந்து நம் எண்ணங்களை சீர்தூக்கிப் பார்க்க நம் கடவுள் நம்மை அழைக்கின்றார்.

இன்றைய முதல் வாசகம் ஆண்டவர் எவ்வாறாக நம் மனதை ஆய்கிறார். நம் எண்ணங்களை மதிப்பிடுகிறார் என்பதை விளக்குகிறது. பலிகளையும் காணிக்கையையும் செலுத்தி நற்பெயர் பெற்றுவிடலாம் என நாம் எண்ணினால் அது கடவுளுக்கு உகந்ததல்ல. மாறாக நேர்மையான எண்ணமும் செயல் பாடுகளுமே கடவுளுக்கு ஏற்றது. ஏழைகளுக்கு இரங்க வேண்டும் என்ற எண்ணமுடையவர்களை கடவுள் பாராட்டுகிறார். மாறாக ஏளியவரின் கனிவான மன்றாட்டை கேட்க மனமில்லாதவர்களை அவர் வெறுக்கிறார்.

 இதனடிப்படையில் இன்று நமது எண்ணங்களையும் நோக்கங்ளையும் கடவுளின் மனநிலையில் சீர்தூக்கிப்பார்த்தால் நாம் கடவுளால் விரும்பப்படுவோமா?நமது செபங்கள், நற்செயல்கள், காணிக்கைகளின் பின்னால் உள்ள உண்மையான நோக்கம் எதுவாக இருக்கிறது? சிந்திப்போம்.

இன்றைய நற்செய்தியில் இயேசு என் தந்தையின் வார்த்தையைக் கேட்டு வாழ்பவர்களே என் தாயும் சகோதரரும் என்கிறார்.கடவுளின் திருஉளப்படி அவர் வார்த்தையின் படி நாம் வாழ விரும்பினால் நமது எண்ணங்களும் நோக்கங்களும் கடவுளை ஒத்ததாக இருக்க வேண்டும். அவரைப் போல நாம் சிந்திக்க வேண்டும். அவரைப்போல நாம் கனிவுடையவர்களா தூய்மையானவர்களாக அன்பானவர்களாக எல்லாருக்கும் எல்லாமுமாக வாழ வேண்டும். அப்போது நிச்சயம் இயேசுவின் தாயாக சசோதர சகோதரிகளாக மாற லாம். எனவே நம் எண்ணங்களை சீர்தூக்கி பார்க்கும் ஆண்டவரிடம் நம் எண்ணங்களும் அவருடைய எண்ணங்களைப் போல மாற செபிப்போம். அவர் முன்னிலையில் நம் எண்ணங்களை ஆராய்ந்து பார்த்து சரிசெய்வோம்.

இறைவேண்டல் 
எண்ணங்களையும் இதயதங்களையும் பார்க்கும் ஆண்டவரே சீர்மிகு எண்ணங்களால் நாங்கள் வாழ்வில் செழிப்படைந்து பிறர் வாழ்வையும் செழிப்படையச் செய்யும் வரம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

14 + 4 =